இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் உவமைகள்
கவிஞர் நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
இந்தியா.
முன்னுரை:
உலகில் பல மொழிகள் உள்ளன. அவற்றுள் இலக்கண வரம்புடையன சிலவே. அவையும், எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கண்டுள்ளன. ஆனால் உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழி மட்டும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளது, வாழ்வாங்கு வாழும் நெறிமுறைக்கும் வழிகாட்டியுள்ளது.
சங்க காலத்தில் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஆனால் சங்க காலத்திற்குப்பின், அவர்கள் வாழ்வோடு சமயம் கலந்தது. இதனால் மொழியும் சமயமும் ஒன்றோடொன்று இணைந்தன. அவை மக்களை அறவழிப்படுத்த முயன்றன, புதிய வாழ்வியல் நெறிகளைத் தந்தன. தமிழர்கள் வாழ்வோடு கலந்த சமயங்கள் தாமும் வளர்ந்து மொழியையும் வளர்த்தன. அவ்வகையில் பிற்காலத்தே தமிழர் வாழ்வோடு கலந்த இஸ்லாமியமும் தமிழின் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைத் தந்தது. இஸ்லாமியத் தமிழர்கள் பல இலக்கியங்களைப் படைத்தனர். அதன்வழி இஸ்லாமிய இலக்கியங்கள் பெருகின. பிற இலக்கியங்களைப் போலவே இஸ்லாமிய இலக்கியங்களிலும் பல்வகைச் சுவைகளும் நிரம்பியுள்ளன. அச்சுவைகளுள் உவமைச் சுவையும் ஒன்று. உவமைச்சுவைகள் இஸ்லாமிய இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் இக்கட்டுரையில் காட்டல் இயலா. எனவே அவற்றுள் பதச்சோறாகச் சிலவற்றைக் காட்டுவதும்,அவற்றின் தனிச்சிறப்புகளை எடுத்து விளக்குவதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இஸ்லாமிய இலக்கியங்கள்:
கடந்த நானூறு ஆண்டுகளில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் புலவர்கள், ஆயிரத்திற்கும் அதிகமான இலக்கியங்களைப் படைத்;துள்ளனர்;. சைவரும், வைணவரும் பிறரும் பல புதிய சிற்றிலக்கிய வகைகளைத் தமிழுக்குத் தந்துள்ளது போலவே, இஸ்லாமியர்களும் அரபு, பாரசீகம் போன்ற மொழிகளில் புகழ் பெற்று விளங்கிய படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா,மசலா, நாமா, நொண்டிநாடகம் போன்ற பல சிற்றிலக்கிய வகைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவைமட்டுமன்றி அவர்கள் உரைநடை, நாடகம், புதினம், சிறுகதை, புதுக்கவிதை, குழந்தை இலக்கியம் முதலிய இலக்கியவகையுள் பல புதிய படைப்புகளைப் படைத்தும் வருகின்றனர்.
இஸ்லாமிய இலக்கியங்களின் தனித்தன்மைகள்:
இஸ்லாமியப் புலவர்கள் பல்வேறு வகை இலக்கியங்களைப் படைத்திருந்தாலும், அவர்தம் படைப்புகள் இஸ்லாமியக் கொள்கைகளைப் பரப்புவதை மட்டுமே பெருநோக்காகவும், இலக்கியக் கொள்கையாகவும் கொண்டுள்ளன. இதனால் அவையனைத்தும் சிற்றின்பப் பொருளைப் பாடுவதாக அமையாமல், பேரின்பப் பொருளையே பெரிதும் பாடுவதாக அமைந்துள்ளமை இஸ்லாமிய இலக்கியங்களின் தனித் தன்மைகளாகும்.
இஸ்லாமிய இலக்கியங்களில் பல்வகைச் சுவைகள்:
இஸ்லாமிய இலக்கியங்கள் பல்கிப் பெருகியிருப்பது போலவே, அவை காப்பியச்சுவையிலும் பிற சமய இலக்கியங்களுக்கு இணையாக பல்வகைச் சுவைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.இஸ்லாமிய நெறிமுறைகள்,வாழ்வியற் சிந்தனைகள், வரலாற்றுக் கூறுகள் என்பனவற்றோடு கற்பனைகள், வருணனைகள், உவமைகள், அணிநலன்கள், கவிநயங்கள், சொற்சித்திரங்கள், சொல்லாட்சிகள் என எல்லாவகை இலக்கிய நயங்களும் அவற்றில் பரந்து காணப்படுகின்றன.
இஸ்லாமிய இலக்கியங்களில் உவமைகள்:
கவிஞன், பாடுபொருளின் சிறப்பையும், உயர்வையும் காட்ட, தன் அனுபவப் பொருளை அதனோடே இணைத்துக் காட்டுகிறான். அவ்வாறு இணைத்துக் காட்டும் அனுபவப் பொருளே உவமையாகின்றது. அவ்வுவமை, பொருளைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். இதனையே தொல்காப்பியர் ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை’ (தொல். உவமவியல்.3) என்றார். இவ்வாறு உயர்ந்த பொருட்களை உவமைகளாகக் கூறும்பொழுது,அக்கவிதைகளில் எண்வகை சுவைகளும் வெளிப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. அத்தகைய இனிய உவமைகள் இஸ்லாமிய இலக்கியங்களில் கணக்கற்றுக் கிடக்கின்றன.
எளிய உவமைகள்:
தமிழிலக்கியத்தில், கவிஞர்கள் தாம் எடுத்தக் கொண்ட பொருளை விளக்குதற்கு உலக மக்கள் அறிந்த எளிய பொருட்களையே உவமைகளாகக் காட்டுவர். புறநானூற்றில் பாண்டிய வேந்தன் போர்க்களம் புகுந்தால், அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது என்பதை ஐயூர் முடவனார் என்ற புலவர் விளக்க முற்படுகிறார். அதற்கு அவர், வெள்ளம் அளவுக்கு மீறி வந்தால், அதனைத் தடுக்க முடியாது, தீ வலிமை பெற்று மிகுமாயின் அதில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்றுவது அரிது, காற்று கடுங்காற்றானால் அதனைத் தடுத்தல் இயலாது என்னும் எளிய உவமைகளின் மூலமாகப் பாண்டியனின் சினத்தையும் வலிமையையும் காட்டுகிறார்.
“நீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்பேர் வழுதி”
(புறநா.51.1-4)
(புறநா.51.1-4)
இதுபோல இஸ்லாமியக் கவிஞர்களும் எளிய உவமைகளால் தாங்கள் கூற வந்த கருத்துக்களை விளக்கிக் காட்டுகின்றனர். யாகோபு சித்தர், தாம் குறிப்பிடும் வைத்திய முறைகளைப் பின்பற்றினால், ‘கருடன் கண்ட சர்ப்பம்’ (யாகோபு சித்தர் பாடல்-357) போலவும், ‘புலி கண்ட ஆடு’ (யாகோபு சித்தர் பாடல்-380) போலவும் நோய்கள் அகன்று விடும் என்று கூறுகின்றார்.
ஆயிரமசாலாவென்று வழங்கும் அதிசய புராணத்தைத் தந்த வண்ணப்பரிமளப்புலவர், இளமை வாழ்வில் அல்லாவை மறந்தவர்கள், ‘தூண்டில் மீனெனத்’ துன்பம் அடைவார்கள் என்பதை,
“உளமகிழவாதியை யுவந்துற நினைந்தே
வளமைபயிலும்வாலி பத்தில் வணங்காதார்
விளமதுறந் தூண்டில்தனின் மீனென மலைத்தங்
கிளமை தடுமாறி மிக வீடு படுவாரே”
(ஆயிரம் மசலா-565)
எனக் காட்டும் உவமை எல்லார்க்கும் விளங்கும் எளிய உவமையாக உள்ளது.
இயற்கை சார்ந்த உவமைகள்:
சங்க காலம் இயற்கைக் காலம். அக்கால மக்கள் தங்கள் வாழிடத்தை இயற்கையின் அடிப்படையிலேயே வகுத்துக் கொண்டனர், இயற்கையோடு இயைந்தே வாழ்வை நடத்தினர். தங்கள் வாழ்வின் வெளிப்பாடாக இலக்கியத்தையும் இயற்கையைச் சார்ந்தே படைத்தனர். எனவே அக்கால கவிஞர்களின் உவமைகளும், ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு’ (குறுந்தொகை-18) எனவும், ‘செம்புலப் பெயனீர் போல’ (குறுந்தொகை-40) எனவும், ‘உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழி நீரே’ (ஐங்குறுநூறு-203) எனவும் இயற்கைப் பொருள்களாகவே அமைந்தன. அவ்வழியில் வந்த இஸ்லாமியக் கவிஞர்களும் இயற்கை சார்ந்த உவமைகளைத் தங்கள் படைப்புகளில் பல இடங்களில் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
முகியித்தீன், தம் சக்கூன் படைப்போர் இலக்கியத்தில், பெருமானார் நபி (சல்) அவர்களை, நாற்பதினாயிரம் அசுகாபிமார்கள் சூழ்ந்து வந்தார்கள் என்பதை,
“வட்டமதி தன்னை வான்மீன்கள் சூழ்ந்தபோல்
இட்டமுள்ள நம்நபியை எல்லாரும் சூழ்ந்துவர”
என ஓர் இயற்கைக் காட்சியைக் காட்டிக் காவியத்தை ஓவியமாக்குகிறார்.
உலகின் நிலையாமையைக் கூற வந்த உமறுப்புலவர், அதை மானின் கூற்றாக வைத்து, இலை நுனியிலே உள்ள பனி நிலைத்து நிற்காதது போல, இவ்வுலக வாழ்க்கையும் நிலையில்லாதது என்பதை,
“இலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன்மன்னோ”
(சீறா.புரா. மானுக்குப் பிணை நின்ற படலம்-31)
என இயற்கையை உவமையாகக் கூறி விளக்கியுள்ளமை உன்னி உணர்ந்து இன்புறத்தக்தாகும்.
அவரே பிறிதோர் இடத்தில், மற்றுமோர் இயற்கைக் காட்சியைக் காட்டுகின்றார். உழவர்கள் வயலில் நெல் மணிகளை விதையாகத் தூவுகிறார்கள். அவை காலைக் கதிரவனின் ஒளிபட்டுப் பொன்மழை போல ஒளிர்கின்றன. இக்காட்சியை உமறுப்புலவர்,
“நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
நென்முளை சிதறிய தோற்றம்
பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
பொன்மழை பொழிவது போன்றும்”
(சீறா.புரா. நாட்டுப்படலம்-26)
இருந்ததாகப் பாடியுள்ளமை, எத்துணை அழகாக நம் கண்முன் காட்சியாக விரிகின்றது.
மற்றொரு காட்சி. கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்கும் கொன்றை மலர்கள் அழகிய ஆபரணங்களை அடுக்காகத் தொங்க விட்டது போன்று காட்சியளிக்கின்றன. அக்காட்சி வானுலக மங்கையர்களைப் பூஞ்சோலைக்கு அழைக்கச் செய்த அலங்காரமாகக் காட்சி தருகின்றது. இதனை வண்ணக் களஞ்சியப்புலவர் தம் இராஜநாயகம் என்ற நூலில்,
“அம்பொன் மேலுல கரம்பைய ரிழிந்தகா வதனிற்
பண்பு கூர்விளை யாடல்செய் திடவெனப் பலபூ
வம்பு லாவிய வாபரணங்களை மரத்திற்
கொம்பு தோறினுந் தூக்கிய தாஞ்சரக் கொன்றை”
(இராஜநாயகம். எறும்புகள் விருந்திடு படலம்-8)
எனக்; காட்டும் காட்சி இஸ்லாமிய இலக்கியத்தின் இயற்கை நலஞ்சிறக்கும் உவமைக்கு இனிய சாட்சியாகும்.
வாழ்க்கை நடைமுறை சார்ந்த உவமைகள்:
கவிஞர்கள் வெறும் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் விஞ்சையர்கள் அல்லர். அவர்கள் நம்மோடு வாழ்ந்து, தம் வாழ்வில் காணும் அனைத்தையும் உற்று நோக்கி மனத்தில் தேக்கி வைத்திருப்பவர்கள். எனவே அவர்களின் பாடல்களில் வாழ்க்கை நடைமுறை சார்ந்த பல நிகழ்வுகள் உவமைகளாக வெளிப்படுவது இயற்கையே. நூகூ ஒலியுல்லாஹ் தம் வேத புராணத்தில்,
“பறவை படக்கண்ணி வைத்த வேடன்
பாய்ந்தே யமுக்கல்போல் முக்கிக் கொள்வார்”
(வேதபுராணம். முரீதுப்படலம்-159)
எனவும்,
கனகவிராயர், தம் கனகாபிசேகமாலையில்,
“கறவை ஆன்வராக் கன்றெனப் புலம்பினர் கதறி”
(கனகாபிசேகமாலை-12: 49)
எனவும் நம் வாழ்க்கையில் நாளும் நாளும் காணும் உவமைகளைப் பெய்து பாடியுள்ளமை என்றும் நம் மனத்தில் நிலைத்து நிற்பனவாகும்.
பல்பொருள் உவமை:
ஒரு பொருளுக்கு ஓர் உவமையைக் காட்டுவது கவிஞனின் இயல்பு. சில நேரங்களில் கவிஞனின் வியப்புணர்ச்சியாலும் சொல்லாற்றலாலும் கவித்திறத்தாலும் பல உவமைகளை அடுக்கிக் கூறுவதுண்டு.
சங்க இலக்கியப் பத்துப்பாட்டில் வெண்பற்களை, “முகைமுல்லை வென்று எழில்முத்து ஏய்க்கும் வெண்பல்” (குறிஞ்சிப்பாட்டு-76) என்று இரண்டு உவமைகளாலும், கலித்தொகையில், மகளிரின் எழில்நலத்தை “ஆய்தூவி அனமென அணிமயில் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்” (கலித்தொகை-56) என்று மூன்று உவமைகளாலும், பரிபாடலில், திருமாலின் கரிய மேனியைக் “கார்,மலர்ப் பூவை, கடல், இருள், மணி அவை ஐந்தும் உறழும் அணிகிளர் மேனியை” (பரிபாடல்-13) என்று ஐந்து உவமைகளாலும் விளக்கியுள்ளதை நாம் காணலாம். அச்சங்க இலக்கிய மரபைப் பின்பற்றித் தங்கள் இலக்கியங்களைப் படைத்த இஸ்லாமியக் கவிஞர்களும் ஒரே பொருளுக்கு எண்ணற்ற உவமைகளைக் காட்டிப் பாடல்களில் மெருகூட்டி உள்ளனர். உவமைக் கவிஞரெனப் போற்றப்படும் உமறுப்புலவர், தாயின் காலடியில் சொர்க்கத்தைக் கண்ட வள்ளல் பெருமானைப் பெற்றெடுத்த அன்னை ஆமீனாவின் பெருமையைக் கூற வருகிறார். அவ்வன்னையின் அறச்சிறப்பு, அருட்சிறப்பு, பொறைச்சிறப்பு, குலச்சிறப்பு எனும் நான்கையும் இல், தாய், நிலம், மணி எனும் நான்கு உவமைகளால் விளக்குகின்றார்.
“அறத்தினுக்கு இல்லிடம் அருட்கோர் தாயக
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக்கு எண்மடங்கு
உறைப்பெருங் குலத்தினுக்கு ஒப்பி லாமணிச்
சிறப்பினுக்கு உவமையில் லாத செல்வியே”
(சீறா.புரா. நபியவதாரப்படலம்-12)
இது போலவே பெருமானாரின் பிறப்பைப் பாடவந்த உமறுப்புலவர், தருநிழல், அருமருந்து. செழுமழை, மணிவிளக்கு என உவமைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
“பானுவின் கதிரால் இpடருறுங் காலம்
படர்தரு தருநிழல் எனலாய்
ஈனமுங் கொலையும் விளைத்திடும்
பவநோய் இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் றிலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்
முகம்மது நபிபிறந் தனரே”
(சீறா.புரா. நபியவதாரப்படலம்-92)
இதுபோல் பொன்னரிய மாலை எனும் நூலையியற்றிய புலவர் மதுரை மின்னா நூறுத்தீன் என்பார், முகம்மது (சல்) அவர்கள், நோயின் கடுமையினால் இறுதி எய்தி விட்டார்கள் என்பதை அறிந்த மக்களின் துயரத்தைக் காட்ட வந்தவர்,
“கோவிழந்த குடியானோம் குடமுடைந்த தயிரானோம்
ஆவிழந்த கன்றானோம் அரசிழந்த பதியானோம்
நாவிழந்த மொழியானோம் நயனமில்லா முகமானோம்
காவிழந்த குயிலானோம் கதிரிழந்த பகலானோம்
பயிரிழந்த நிலமானோம் பகலிருந்த மதியானோம்
உயிரிழந்த உடலானோம் ஒளியிழந்த மணியானோம்
கயிரிழந்த கரமானோம் கடியிழந்த மலரானோம்
அயிரிழந்த வாளானோம் ஐயகோவென அழுதார்” (அயிர் - கூர்மை )
(பொன்னரியமாலை. நபிநாயகத்தின் முன்வாய்மையால் சரதமிட்டபடலம்-10-11)
என்று உவமைகளை அடுக்கிக் கொண்டே போய், நம்மைப் படிப்படியாகத் துயரத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறார்.
அரிய உவமைகள்:
பண்டைத் தமிழிலக்கியங்களில் காணப்படும் அரிய உவமைகள் போன்றே இஸ்லாமிய இலக்கியங்களிலும் ஒரு சில அரிய உவமைகள் படித்துப் படித்து இன்புறத்தக்கனவாக உள்ளன.
கம்பர் தம்முடைய காவியத்தைத் தொடங்கும்முன் அவையடக்கப் பாடலில் ஒரு பூனை தன் நாவால் பாற்கடல் முழுதையும் நக்கிக் குடிக்கச் செய்த முயற்சிபோல், தாம் இராமபிரானின் கதையைக் கூற முற்படுகிறேன் எனப் பாடுவார். அக்கம்பனின் காவியத்தை முழுதும் கற்றுணர்ந்த உமறுப்புலவர், தம் காப்பியத்திலும் அத்தகைய அரிய உவமைகளைக் கையாண்டுள்ளார். வானத்தில் பேரிடி இடித்துக் கொண்டிருக்கும் ஆரவாரத்திற்கு நடுவே ஒருவனின் கைநொடிச் சத்தம் எவ்வாறு யாருக்கும் கேட்காமல் போகுமோ,அதைப்போல பெரும்புலவர்களின்முன் தம் கவிமுயற்சி ஒருவமறியாததாகி விடும் எனும் கருத்தமைய,
“அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்
படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்தல்
இடியி டித்திடும் ஆரவா ரத்தினுக்கு எதிரோர்
நொடிநொ டிப்பது போலும்ஒத் திருந்ததுஎன் னூலே”
(சீறா.புரா.கடவுள்வாழ்த்துப்படலம்-20)
என்றும், கடல்களையும் மிகப் பெரிய மலைகளையும் தகர்க்கக்கூடிய சண்டமாருதப் புயலுக்கு முன்னால் நொந்து கெட்ட ஒரு சிற்றெறும்பு விடும் மூச்சினைப் போன்றது தம் முயற்சி எனும் கருத்தில்,
“படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
எடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே”
(சீறா.புரா.கடவுள்வாழ்த்துப்படலம்-19)
என்றும் தம் அவையடக்கப் பாடல்களாகப் பாடியுள்ளார்.
உமறுப்புலவர் மற்றோர் இடத்தில், நபிபெருமானாரை உத்துபா என்ற கல்வியாளர் வாதிட்டு வெல்ல சூளுரைத்து வருகின்றார். ‘அவருடைய முயற்சி கிழக்கே எழுந்து, மேற்கே நோக்கி விரையும் கதிரவனைக் கால் இரண்டும் இல்லாத ஒருவன் ஓடி மறிப்பேன் எனச் சொல்வது போல உள்ளது’ என்று பாடியவர், அவ்வுத்துபா இறுதியில் தோற்று நின்றபொழுது, ஒரு பெரிய சிங்கத்தின்முன் மலையாடு ஒன்று ஒடுங்கி நிற்பதுபோல் நின்றார், என்ற ஓர் அரிய இனிய உவமையைக் காட்டுகின்றார்.
“இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர
மடர்த்தெறியு மிறசூ லுல்லா
தெரிமறையின் உரைகேட்டுப் பொருள்தேர்ந்து
பகுப்பஅதி சயித்து நோக்கி
உருகிமதி மயங்கிஎதி ருரையாமல்
ஊமனென ஒடுங்கி வான்தோய்
பெருவரையின் மடங்கல்எதிர் வரையாடு
நிகர்வதெனப் பேதுற் றானே.
(மடங்கல்-சிங்கம்)
(சீறா.புரா.உத்பாவந்தபடலம்-19)
இவ்வரிய உவமையால் சிங்கத்தின்முன் நி;ன்ற வரையாட்டின் நிலையும் உத்துபா, பெருமானாரிடம் தோற்று நடுநடுங்கி நின்ற நிலையும் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன. இத்தகைய அரிய உவமைகள் இஸ்லாமிய இலக்கியங்களில் பலவிடங்களில் காணப்படுகின்றன.
இஸ்லாமியப் புலவர்களின் உவமைத் தனிச்சிறப்புகள்:
இஸ்லாமியப் புலவர்கள் தங்கள் இலக்கியங்களுள் பெய்துள்ள உவமைகளுள் பல, தனிச் சிறப்பு வாய்ந்தவையாக மிளிர்கின்றன. கதிரவன் மறையும் காட்சியைப் பாடும்பொழுது, புலவர்கள் தம் குறிப்பையேற்றிப் பாடியுள்ளமையைப் பல தமிழிலக்கியங்களில் காணலாம். இதனைத் தற்குறிப்பேற்றவணி என்பர். தம் காவியத்தில் பகலவன் மறையும் காட்சியைக் காட்ட வந்த கனகவிராயர், போர்க்களத்தில் புண்பட்டுக் கிடக்கும் வீரர்களின் உடலைத் தன் கரத்தால் தீண்டித் துன்புறுத்தலாகாது என்றெண்ணிக் கதிரவன் தன் கரத்தைச் சுருட்டிக்கொண்டான் என்னும் பொருளில்,
“நண்ணா ரயிரை வாங்கினவ ரவர்க ணாப்ப ணிறந்தனரே
புண்ணா ருடலந் தனைக் கரத்தால் தொடுதல் பொருந்தா வகையென்று
விண்ணார் பருதி தன்கரத்தைச் சுருக்கி மேல்பா லடைந்ததென்ன
உண்ணா உவர்நீர்க் குடகடலிற்புகுந்தான்…………………”
(உசைனாரரசுப் படலம ;- 260)
எனத் தன்குறிப்பையேற்றிப் பாடியள்ளமை கவிஞரின் அணிநலத்தோடு, அவர்தம் உளநலத்தையும் அல்லவா காட்டுகின்றது! இது போன்று தற்குறிப்பேற்றவணி பயின்ற பாடல்கள் இஸ்லாமிய இலக்கியங்களில் எண்ணற்ற இடங்களில் உள்ளன.
இதே போல் பெருமானாரைப் பெற்றெடுத்த அன்னை ஆமினாவை,உவமைகளால் அடுக்கிப் புகழ்ந்து கொண்டே வந்த உமறுப்புலவர், உவமைகளில் நிறைவு காணாது,
‘சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே’
(சீறா.புரா. நபியவதாரப்படலம்-12)
எனப் பாடியுள்ளமை உவமைக்கே உவமை தேடியதாகும்.
இது போலவே, பெருமானாரின் அன்பு உள்ளத்தில் அன்னை கதீஜா இடம் பெற்ற அழகை,
‘……………………….முகம்மது நெஞ்ச மென்னும்
கடிகமழ் வாவி யூடு கருத்தெனுங் கமல நாப்பண்
பிடிநடைக் கதீஜா வென்னும் பெடையனம் உறைந்த தன்றே’
என அவர் உருவகப்படுத்தி ஒரு காதல் ஓவியத்தையே தீட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்ப் புலவர்களின் உவமைகளிலிருந்து வேறுபடும் இடங்கள்:
இஸ்லாமியப் புலவர்கள் தமிழ்ப் புலவர்களின் உவமைகளிலிருந்து வேறுபட்டுச் சிறந்துள்ள இடங்களும் சில உள. ‘பல்பொருளினு முளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்கு உவமையாம்’ எனக் கூறல், உவமைப்போலி வகை ஐந்தனுள் ஒன்றாகும் என்பர் இலக்கண நூலார். இவ்வகையில் கண்ணகியின் கற்பின் திறத்தினைக் கூற வந்த இளங்கோவடிகள், ‘அருந்ததி கற்பின் திறன் கண்ணகி கற்பு அனையது’ என்று கூறுவார். இதேநிலையில் பெருமானாரின் பெருஞ்சிறப்பைக் கூற வந்த உமறுப்புலவர், மிக நுட்பமாக ஒரு மாற்றம் செய்து, பெருமானார் என்னும் பெருஞ்சுடர், ஞாயிறு, திங்கள் முதலான ஒளியுடைய பொருள்கள் அனையது எனக் கூறாது, இவையெல்லாம் ‘ஒளி பெறும் ஊற்றிடம்’ என்று வேறுபடுத்திக் காட்டுவார்.
முடிவுரை:
“உவமை தருமின்பம் உவமையிலா இன்பம். விண்ணில் பரவிக் கிடக்கும் உடுக்களெனக் காப்பிய முழுதும் பரந்து கிடக்கும் உமறுவின் உவமைகளை மனத்தால் எண்ணி இன்புறலன்றி எண்ணிக்கையால் எண்ணி இன்புறல் இயலாதென்பது என் அனுபவம்”, என்று பெரும்புலவர் மு.அப்துல் கறீம் அவர்களின் சீறாப்புராணம் பற்றிய கூற்று, இஸ்லாமிய இலக்கியங்கள் முழுவதற்கும் பொருந்தும். இஸ்லாமிய இலக்கியங்கள் வெறும் சமய நெறிமுறைகளை மட்டும் கூறும் நூற்கள் என்பது உண்மையன்று. இதனை உணராமலேயே பலரும் இஸ்லாமிய இலக்கியங்களைப் படிக்காமல் ஒதுக்கி விடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இஸ்லாமிய இலக்கியங்களில் எங்கெங்கு காணினும் உவமை நலங்கள் சிறந்திருக்கின்றன, தொடுமிடமெல்லாம்; உவமை மணம் வீசுகின்றது. எனவே அவற்றை நாம் படித்துச் சுவைத்து இன்புறுவதோடு, அதன் உவமை நலத்தையும் இலக்கிய வளத்தையும் அனைவரும் அறியச் செய்வோமாக!
***********
ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:
1. இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு. (தொகுதி 1 – 4) - ம. முகம்மது உவைஸ்,
ரூ பீ.மு. அஜ்மல்கான்.
2. சங்க இலக்கியத்தில் உவமைகள். - ரா. சீனிவாசன்.
3. சங்க இலக்கியம் சில பார்வைகள். - சி. பாலசுபரமணியன்.
4. சீறாவின் உவமை நலன்கள். - மு. அப்துல் கறீம்.
5. இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு. - மு. சாயபு மரைக்காயர்.
6. சங்க இலக்கியத் தொகுதி. - ச.வே.சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்)
***********
(மலேசிய கோலாலம்பூரில் 20, 21, 22-05-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற
உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை.)