Monday, December 23, 2013

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் 
பதிப்பு வரலாறு

நா.இராசசெல்வம்,
தமிழ் விரிவுரையாளர்,
பள்ளிக்கல்வித்துறை,புதுவை அரசு.


     புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு பிரஞ்சு அதிகாரிக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் இருந்தார். அம்மொழிப் பெயர்ப்பாளர்களைத் துபாஷ் என்றழைத்தனர். துபாஷ் என்பதற்கு இரு மொழி அறிந்தவர் என்று பொருள். அத்தகைய துபாஷிகளுள், ஆளுநருக்குத் துபாஷியாக இருந்தவர்கள் தலைமைத் துபாஷியாகவும், தமிழர்களின் தலைவராகவும் கருதப்பட்டனர். அவ்வாறு முதன்முதலாக புதுச்சேரிக்குத் துபாஷியாக வந்தவர் லசார் தெ மொத்தோ என்றழைக்கப்பட்ட பூந்தமல்லி தானப்ப முதலியார் ஆவார். அவருக்குப் பிறகு முத்தியப்ப முதலியார், நைனியப்பப்பிள்ளை, குருவப்பப்பிள்ளை, கனகராய முதலியார் எனப் பலரும் துபாஷியாக இருந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததாலும்,கனகராய முதலியார் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் துபாஷியாக இருந்ததாலும், இத் துபாஷ் உத்தியோகத்தை முதலியார் உத்தியோகம் என்றே அழைத்து வந்தனர். அவ்வாறு துபாஷியாக இருந்தவர்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாகவும் இருந்தனர். கிறித்துவர்கள் அல்லாதவர்கள் பிரஞ்சியர் காலத்தில் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள் என்பதும் வரலாறு காட்டும் நிகழ்வுகளாகும். ஆயினும் துய்ப்ளேக்சு ஆளுநராக இருந்தபொழுது, அவருடைய துபாஷியாக கனகராய முதலியார் இருந்த காலத்திலேயே கிறித்துவரல்லாத ஒருவர் தலைமைத் துபாஷியாகப் பணியாற்றி ஆளுநருக்கு அடுத்த நிலையில் பெரும் புகழோடு வாழ்ந்திருந்தார். அவரே ஆனந்தரங்கப்பிள்ளை என்பவர் ஆவார். ஆனந்தரங்கப்பிள்ளைக்கு முன்னரே பலரும் துபாஷியாகப் பணியாற்றியிருந்தாலும், அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிப்பெரும் சிறப்பு ஆனந்தரங்கருக்கு உண்டு. அவர் ஒரு வரலாற்று நாயகராகிப் புதுச்சேரி வரலாற்றிலும், பிரஞ்சிந்திய வரலாற்றிலும், பிரான்சு நாட்டு வரலாற்றிலும் கூட ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். அதற்குக் காரணம் ஆனந்தரங்கப்பிள்ளை 25 ஆண்டு காலத்திற்குத் தொடர்ந்து எழுதி வைத்த நாட்குறிப்பேயாகும். அவருடைய நாட்குறிப்பு, வெறும் நாட்குறிப்பாக மட்டும் அமையாமல் பிரஞ்சிந்திய வரலாற்றிற்கு ஆதாரமாகவும்,18-ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் புதையலாகவும், அக்காலச் சமுதாயத்தைக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் அமைந்துள்ளது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்குறிப்பு, அவருடைய காலத்திற்குப் பிறகு வெகுகாலம் உலகிற்குத் தெரியாமலே இருந்து விட்டது. அது எப்பொழுது வெளிப்பட்டது? அது எவ்வாறு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது? யார் யார் பிரதி எடுத்துக்கொண்டார்கள்? எப்பொழுது அச்சில் பதிப்பிக்கப்பட்டது? யாரால் பதிப்பிக்கப்பட்டது? நாட்குறிப்பின் மூலச்சுவடி இப்பொழுது கிடைக்கப்பெறுகின்றதா?  போன்ற செய்திகளைத் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உலகிற்கு அறிமுகமான வரலாறு:
      ஆனந்தரங்கருடைய இறுதிக்காலம், புதுச்சேரி வரலாற்றில் ஒரு நெருக்கடியான காலமாகும். அவர் மறைந்த நான்காவது நாளிலேயே புதுச்சேரி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது, கோட்டை கொத்தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, ஊர் சூறையாடப்பட்டது. இதனால் கவலையடைந்த அவரது சந்ததியினர், வீட்டிலிருந்த முக்கிய பொருட்களுடனும், முக்கிய சுவடிகளுடனும் தரங்கம்பாடிக்குச் செல்ல முயன்றனர். புதுச்சேரியை விட்டுக் கடல்வழி பயணம் செல்ல முயல்கையில், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால், தோணியில் பயணத்தைத் தொடர முடியாமல், மழையால் பாதிக்கப்பட்டு இடையிலேயே திரும்பினர். மழைக்குப்பின் மீண்டும் பயணமாகித் தரங்கம்பாடியை அடைந்து பொறையார் எனுமிடத்தில் குடியேறினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புதுச்சேரி மீண்டும் பிரஞ்சுக்காரர் வசமானது. இதனால் 1765-இல் பிள்ளையின் குடும்பத்தினர், தங்களுடன் கொண்டு சென்ற பொருட்களுடன் புதுச்சேரிக்குத் திரும்பினர். அப்பொருட்களுடன் சென்ற ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பும்; புதுச்சேரி திரும்பியது. இவ்வாறு போர்க் காலங்களிலும், மழையிலும் வெயிலிலும் அடிபட்ட நாட்குறிப்பு,அதன்பின் பல ஆண்டுகள் அதன் அருமை உணரப்படாமல் ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலேயே உறங்கிக் கிடந்து விட்டது.
     ஆனந்தரங்கர் மறைந்து சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரியில் பிரஞ்சு அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கலுவா மொம்பிரான் என்பவர், ஒருமுறை ஆனந்தரங்கரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றார். ஆனந்தரங்கரின் வாரிசுதாரர்கள் கலுவா மொம்பிரானிடம் வீட்டிலிருந்த பழைய சுவடிகளைக் காண்பித்தனர்; அவை பெரிய கணக்குப் பேரேடுகளையொத்த சுவடிகளாக இருந்தன. தமிழ் அறிந்த கலுவா மொம்பிரான் அவற்றைக் கூர்ந்து நோக்கினார். அவற்றுள் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, அவரது தம்பிமகன் அப்பாவு என்றழைக்கப்பட்ட ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்பு மற்றும் வரலாற்றுத் தொடர்புடைய அரிய சாசனங்கள் பல இருப்பதைக் கண்டார். அது பெரும் வரலாற்றுப் புதையல் என்பதையும் உணர்ந்தார். அவற்றின் அருமையை உணர்ந்த கலுவா மொம்பிரான்,அவர்களது வீட்டிலிருந்த 1736 முதல் 1799 ஆண்டு வரையிலான 16 பதிவேடுகளையும் எழுத்தர்களை வைத்து நகல் எழுதிக் கொண்டார். 1846-இல் தாம் கண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை, 1849-இல் 16 பக்கங்கள் கொண்ட ஒரு பிரஞ்சுக் கட்டுரை மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
      
நாட்குறிப்பு எத்தனை பிரதி எழுதப்பட்டது?
         1. ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மூலத்தைக் கண்ணுற்ற கலுவா மொம்பிரான்; தனக்காக ஒரு பிரதியை எழுதிக்கொண்டார். கலுவா மொம்பிரான் வீட்டிலிருந்த இம்முதல் பிரதி, பின்னர் 1916-இல் புதுச்சேரியில் வீசிய புயல் மழையில் பாழாகி விட்டதாகத் தெரிகிறது. அவற்றுள் சிதைந்தது போக மீதமுள்ள 5 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளது.    
          2. கலுவா மொம்பிரானின் பிரஞ்சுக் கட்டுரை மூலமாக நாட்குறிப்புப் பற்றி அறிந்த புதுச்சேரி அரசு ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்த எதுவார் ஆரியேல் என்பார், 1849-இல் ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலிருந்த மூலச்சுவடியைப் பார்த்து, மீண்டும் தமக்கொரு பிரதியை எழுதிக்கொண்டார். அவ்வாறு எழுத்தர்களை அமர்த்தி எழுதிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அப்பிரதியினை மூலத்தோடு சரிபார்க்கும் பணியிலும் எழுத்தர்களை ஈடுபடுத்தி மிகச் செம்மையான பிரதியாகப் படியெடுத்துக் கொண்டார். அச்செம்மையான இரண்டாவது பிரதி, எதுவார் ஆரியேலின் மறைவுக்குப் பிறகு, பாரீசு தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
                3.  புதுச்சேரியிலிருந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பும், அதன் அருமையும் வெகுகாலம் வரை ஆங்கில அரசுக்குத் தெரியாமலே இருந்தது. புதுச்சேரியில் ஆங்கில அரசின் முகவராயிருந்த லெப்டினண்டு ஜெனரல் எச்.மெக்லீடு என்பாரும், அவர் மூலமாக இந்நாட்குறிப்புப் பற்றி அறிந்த கல்கத்தா இம்பீரியல் ஆவணக் காப்பகத் தலைவராயிருந்த பேரா.ஜி.டபிள்யூ.பாரஸ்ட் என்பாரும் ஆங்கில அரசுக்கு ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மதிப்பை உணர்த்தி, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஆவன செய்யுமாறு வேண்டினர். அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, சென்னையிலிருந்த வென்லாக் பிரபு அங்கில அரசுக்காக ஒரு பிரதி எழுதுமாறு கட்டளையிட்டார். இதனால் 1892 முதல் 1896 வரை கலுவா மொம்பிரானின் பிரதியிலிருந்து ஆங்கில அரசுக்காக மூன்றாவது பிரதி எழுதப்பட்டது. இம்மூன்றாவது பிரதி தற்பொழுது சென்னை மாநில வரலாற்று ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 
           4. காலம் கடந்து விழித்துக் கொண்ட புதுச்சேரியிலிருந்த பிரஞ்சு அரசு தமக்கென ஒரு பிரதி இல்லாமையை உணர்ந்தது. இதே நேரத்தில் மூலச்சுவடியும், கலுவா மொம்பிரானின் முதல் பிரதியும் காணாமல் போய்விட்டன. எனவே ஒரு எழுத்தரை நியமித்துச் சென்னைக்கு அனுப்பி, சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்திலிருந்து நான்காவது பிரதி எழுதப்பட்டது. ஆனால் அது எப்பொழுது செய்யப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அப்பிரதி, அந்நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு 12 தொகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இந்நான்காவது பிரதியிலும் முதல் 8 தொகுதிகள் காணாமல் போய்விட்டன. மீதமுள்ள 4 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முதல் அச்சுப்பதிப்பு:
     ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலப் பதிப்பாகத்தான் வெளியிடப்பட்டது. அதுவும் ஆங்கில அரசால்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
      கலுவா மொம்பிரானின் எழுத்துப் பிரதியிலிருந்து ஆங்கில அரசிற்காக எடுக்கப்பட்ட மூன்றாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டு பிரடரிக் பிரைஸ் என்பார் ஆங்கில மொழியாக்கம் செய்து, முதல் 3 ஆங்கிலத் தொகுதிகளை வெளியிட்டார். அம்மொழியாக்கப் பணியின்பொழுது பல ஏடுகள் விடுபட்டுப் போயுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அவற்றைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனால் மேலும் சில பகுதிகள் கிடைத்தன. ஆயினும் முக்கியமான பல ஏடுகள்; கிடைக்கவேயில்லை. பாரீசில் உள்ள பிரதியிலும் சில பகுதிகள் இல்லை. விடுபட்ட அப்பகுதிகள் மூலத்திலிருந்து பிரதி எழுதும்பொழுதே கிடைக்காமல் போனவையாகும். அவ்விடுபட்ட பகுதிகள், உடல்நலமின்மை, வெளியூர் பயணம் போன்ற காரணங்களால் ஆனந்தரங்கப்பிள்ளையாலேயே எழுத முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு கிடைக்காமல் போன பகுதிகள் பற்றிப் பிரடரிக் பிரைஸ் கணக்கிட்டு 2 ஆண்டுகள், 7 மாதம்,15 நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
     பிரடரிக் பிரைஸ் முயற்சியைத் தொடர்ந்து, எச்.டாட்வெல் என்பார் முயற்சியால் மீதமுள்ளவை 9 தொகுதிகளாக ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுச் செம்மையான பதிப்பாக வெளியிடப்பட்டது. இஃது 1916 முதல் 1928 வரை நடைபெற்றது.
     ஆங்கிலப் பதிப்பு வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.ஜி.ழுவோ துய்ப்ராய் பாரீசு தேசீய நூலகத்திலிருந்து அச்சேறாத சில பக்கங்களைப் பிரதி செய்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் அதனை  New Pages From Anandaranga Pillai’s Dairy” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
  
முதல் தமிழ்ப்பதிப்பு:
      ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் ஆங்கில மொழியாக்கம் வெளிவந்த பின்னரே, புதுச்சேரியில் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரஞ்சு அரசுக்கு ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பை அச்சில் கொணர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பிரஞ்சு அரசு முனைந்த வேளையில் புதுச்சேரியிலிருந்த ஆனந்தரங்கரின் மூலப்பிரதியும், கலுவா மொம்பிரானின் முதல் பிரதியும் காணாமல் போயிருந்தன. எனவே பிரஞ்சு அரசு, சென்னையிலுள்ள பிரதியிலிருந்து நான்காவது ஒரு பிரதி படியெடுக்க முயன்றது. அது, சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக மூன்றாவது பிரதியைப் பார்த்தும், ஆங்கில மொழியாக்கப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்பட்டது. 
     இப்பணி தொடங்கிய காலத்தில், புதுச்சேரி பிரஞ்சு ஆட்சியின்கீழ் இருந்தது. அப்பொழுது சென்னையில், ஆங்கில அரசு அகற்றப்பட்டு இந்திய நாடு சுதந்திரமடைந்திருந்தது. புதுச்சேரி அரசின் தமிழ்ப்பதிப்புப்பணி தொடங்கி, 1948-இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து 4 தொகுதிகள் வெளி;வந்த நிலையில் புதுச்சேரியில் சுதந்திரப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது. இதனால் நான்காவது பிரதி எடுக்கும் பணியிலும், பதிப்பிக்கும் பணியிலும் பல தடைகள் ஏற்பட்டு தமிழ்ப்பதிப்புப்பணி தாமதமாகிக் கொண்டே வந்தது. சுதந்திரப் போராட்டத்தால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் பதிப்புப்பணியில் என்ன நடந்தது? தொடர்ந்து யார் பதிப்பித்து வந்தார்கள்? என்பன போன்ற செய்திகளைத் தெளிவாக அறிய முடியவில்லை. ஞானு தியாகு,ரா.தேசிகம்பிள்ளை போன்ற வரலாற்றுத் துறையில் ஆர்வமுள்ளவர்களால் 1 முதல் 8 தொகுதிகள் பதிப்பிக்கப்பட்டன என்பதும், அவை ஆங்கில மொழியாக்கப் பதிப்பையே அடிப்படையாகக் கொண்டு முதல் 8 தொகுதிகள் மட்டும் பதிப்பிக்கப்பட்டன என்பதும் தெரிகிறது. முதல் 7 தொகுதிகள் முறையே 1948, 1949, 1950, 1951, 1954, 1956, 1963 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை “பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் சொஸ்தலிகித தினப்படி சேதிக்குறிப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. 8 ஆம் தொகுதி  இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை எப்பொழுது பதிப்பிக்கப்பட்டன என்ற பதிப்புச் செய்தியும் இல்லை. இவ்வெட்டாம் தொகுதியின் இரண்டு பகுதிகள் மட்டும்  “பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் தினப்படி சேதிக்குறிப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெட்டுத் தொகுதிகளும் மறு பதிப்பாக, நகல் பதிப்பு  (Photo-Print) முறையில்,புதுவைஅரசு, கலை பண்பாட்டுத் துறையால் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையுடன் 1988-இல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்குறிப்பின் முழுமைப்பதிப்பு:
      ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் தமிழ்ப்பதிப்பு முதல் எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு, மீதமுள்ள நான்கு தொகுதிகள் பதிப்பிக்கப்படாமலே இருந்துவந்த நிலையில், புதுச்சேரி மொழியியல்,பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மீதமுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 12 தொகுதிகளாக வெளியிட்டது. இர.ஆலாலசுந்தரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2005-இல் இம்முழுமையான பதிப்பு வெளியிடப்பட்டது. இத்தமிழ்ப் பதிப்பின் 12 தொகுதிகளும்; ஆங்கிலப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம் எங்கே போனது?
      கலுவா மொம்பிரானும், எதுவார் ஆரியேலும் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலச்சுவடியைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டபின்,மூலத்தை, ஆனந்தரங்கரின் வாரிசுகளிடமே திருப்பிக் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆயினும் பின்னர் அம்மூலப்பிரதி என்னவாயிற்று? என்பது பற்றிய தகவல்கள் இல்லை. 1916-இல் புதுச்சேரியில் வீசிய கடும் புயல்ää மழையில் மூலப்பிரதியும், கலுவா மொம்பிரானின் முதல்பிரதியும் முற்றிலும் அழிந்து போய்விட்டன என்று புதுச்சேரி ஆவணக் காப்பகத்தின் தலைவராயிருந்த சிங்காரவேலுப்பிள்ளை கூறியுள்ளதாக இர.ஆலாலசுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் அருமை பெருமைகளைக் காலம் கடந்து உணர்ந்த ஆங்கில அரசும், பிரஞ்சு அரசும் மூல ஏடுகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஆயினும் அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. எனவே அவ்விரு அரசுகளும் அம்முயற்சியைப் பின்னாளில் கைவிட்டன.
      எனவே, ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலப்பிரதி காணாமல் போய்விட்டது என்பதும், எதுவார் ஆரியேலால் பிரதி எடுக்கப்பட்டுப் பாரீசு தேசீய நூலகத்தில் உள்ள பிரதியே கிடைத்தவற்றுள் முழுமையானது என்பதும் அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிபுகளாகும். 
      பிரான்சில் வாழ்ந்து வரும் ஒர்சே கோபாலகிஷ்ணன், பாரீசிலுள்ள இரண்டாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டும், பிற இடங்களில் கிடைக்கும் ஏடுகளை ஒப்பு நோக்கியும் நாட்குறிப்பை முழுமைப்படுத்தும் நோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளை-வி-நாட்குறிப்பு என்ற பெயரில் ஒரு விரிவான பதிப்பினை வெளியிட்டு வருகிறார். இதுவரை 3 தொகுதிகள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ளன.

முடிவுரை:
     ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார். இவ்வாறு ஆனந்தரங்கப்பிள்ளை ஒரு தனி ஆளாக இருந்து, பல்வகை அரசியல் ஆளுமைகளோடு தன்னேரிலாத தமிழராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் நாட்குறிப்பு எழுதி வைத்துள்ளமையால், அவர் வரலாற்று நாயகராகப் போற்றப்படுகிறார். அவருடைய நாட்குறிப்பு 18-ஆம் நூற்றாண்டின் பிரஞ்சிந்திய அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அள்ள அள்ளக் குறையாது அமுதசுரபியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய நாட்குறிப்பு ஆங்கிலத்திலும்,தமிழிலும் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது மட்டும் போதாது. அந்நாட்குறிப்பிலுள்ள பிரஞ்சு, போர்த்துகீசியம், பார்சி, தெலுங்கு முதலிய பல்வேறு மொழிகளின் சொல்லடைவையும், அதன் பொருளையும் தொகுத்து அகராதியாக்கித் தருவோமானால், ஆய்வுலகம் மேலும் பயனடையும். நாட்குறிப்பின் அருமையும் பெருமையும் மேலும்; மேலும்  உலகம் அறிய ஏதுவாகும்.

**********


இக்கட்டுரையாக்கத்திற்குத் துணை நின்ற நூல்:

                   1.  நா.இராசசெல்வம்,    ஆனந்தரங்கப்பிள்ளையும் நாட்குறிப்பும்,  2012.


(புதுவைப் பல்கலைக்கழகம்ää “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு – காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் 30-03-2013 இல் பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் - பண்பாட்டு மாநாட்டுக்கூடத்தில் நடத்திய ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புக் கருத்தரங்கத்தில் படிக்கப்பட்ட கட்டுரை) 


**********

Saturday, December 21, 2013

இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் உவமைகள்


கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.


முன்னுரை:
     உலகில் பல மொழிகள் உள்ளன. அவற்றுள் இலக்கண வரம்புடையன சிலவே. அவையும், எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கண்டுள்ளன. ஆனால் உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழி மட்டும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளது, வாழ்வாங்கு வாழும் நெறிமுறைக்கும் வழிகாட்டியுள்ளது. 
     சங்க காலத்தில் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஆனால் சங்க காலத்திற்குப்பின், அவர்கள் வாழ்வோடு சமயம் கலந்தது. இதனால் மொழியும் சமயமும் ஒன்றோடொன்று இணைந்தன. அவை மக்களை அறவழிப்படுத்த முயன்றன, புதிய வாழ்வியல் நெறிகளைத் தந்தன. தமிழர்கள் வாழ்வோடு கலந்த சமயங்கள் தாமும் வளர்ந்து மொழியையும் வளர்த்தன. அவ்வகையில் பிற்காலத்தே தமிழர் வாழ்வோடு கலந்த இஸ்லாமியமும் தமிழின் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைத் தந்தது. இஸ்லாமியத் தமிழர்கள் பல இலக்கியங்களைப் படைத்தனர். அதன்வழி இஸ்லாமிய இலக்கியங்கள் பெருகின. பிற இலக்கியங்களைப் போலவே இஸ்லாமிய இலக்கியங்களிலும் பல்வகைச் சுவைகளும் நிரம்பியுள்ளன. அச்சுவைகளுள் உவமைச் சுவையும் ஒன்று. உவமைச்சுவைகள் இஸ்லாமிய இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் இக்கட்டுரையில் காட்டல் இயலா. எனவே அவற்றுள் பதச்சோறாகச் சிலவற்றைக் காட்டுவதும்,அவற்றின் தனிச்சிறப்புகளை எடுத்து விளக்குவதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய இலக்கியங்கள்:
     கடந்த நானூறு ஆண்டுகளில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் புலவர்கள், ஆயிரத்திற்கும் அதிகமான இலக்கியங்களைப் படைத்;துள்ளனர்;. சைவரும், வைணவரும் பிறரும் பல புதிய சிற்றிலக்கிய வகைகளைத் தமிழுக்குத் தந்துள்ளது போலவே, இஸ்லாமியர்களும் அரபு, பாரசீகம் போன்ற மொழிகளில் புகழ் பெற்று விளங்கிய படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா,மசலா, நாமா, நொண்டிநாடகம் போன்ற பல சிற்றிலக்கிய வகைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவைமட்டுமன்றி அவர்கள் உரைநடை, நாடகம், புதினம், சிறுகதை, புதுக்கவிதை, குழந்தை இலக்கியம் முதலிய இலக்கியவகையுள் பல புதிய படைப்புகளைப் படைத்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய இலக்கியங்களின் தனித்தன்மைகள்:
     இஸ்லாமியப் புலவர்கள் பல்வேறு வகை இலக்கியங்களைப் படைத்திருந்தாலும், அவர்தம் படைப்புகள் இஸ்லாமியக் கொள்கைகளைப் பரப்புவதை மட்டுமே பெருநோக்காகவும், இலக்கியக் கொள்கையாகவும் கொண்டுள்ளன. இதனால் அவையனைத்தும் சிற்றின்பப் பொருளைப் பாடுவதாக அமையாமல், பேரின்பப் பொருளையே பெரிதும் பாடுவதாக அமைந்துள்ளமை இஸ்லாமிய இலக்கியங்களின் தனித் தன்மைகளாகும்.

இஸ்லாமிய இலக்கியங்களில் பல்வகைச் சுவைகள்:
      இஸ்லாமிய இலக்கியங்கள் பல்கிப் பெருகியிருப்பது போலவே, அவை காப்பியச்சுவையிலும் பிற சமய இலக்கியங்களுக்கு இணையாக பல்வகைச் சுவைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.இஸ்லாமிய நெறிமுறைகள்,வாழ்வியற் சிந்தனைகள், வரலாற்றுக் கூறுகள் என்பனவற்றோடு கற்பனைகள், வருணனைகள், உவமைகள், அணிநலன்கள், கவிநயங்கள், சொற்சித்திரங்கள், சொல்லாட்சிகள்  என எல்லாவகை இலக்கிய நயங்களும் அவற்றில் பரந்து காணப்படுகின்றன.

இஸ்லாமிய இலக்கியங்களில் உவமைகள்: 
     கவிஞன், பாடுபொருளின் சிறப்பையும், உயர்வையும் காட்ட, தன் அனுபவப் பொருளை அதனோடே இணைத்துக் காட்டுகிறான். அவ்வாறு இணைத்துக் காட்டும்  அனுபவப் பொருளே உவமையாகின்றது. அவ்வுவமை, பொருளைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். இதனையே தொல்காப்பியர் ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை’ (தொல். உவமவியல்.3) என்றார். இவ்வாறு உயர்ந்த பொருட்களை உவமைகளாகக் கூறும்பொழுது,அக்கவிதைகளில் எண்வகை சுவைகளும் வெளிப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. அத்தகைய இனிய உவமைகள் இஸ்லாமிய இலக்கியங்களில்  கணக்கற்றுக்  கிடக்கின்றன. 

எளிய உவமைகள்:  
     தமிழிலக்கியத்தில், கவிஞர்கள் தாம் எடுத்தக் கொண்ட பொருளை விளக்குதற்கு உலக மக்கள் அறிந்த எளிய பொருட்களையே உவமைகளாகக் காட்டுவர். புறநானூற்றில் பாண்டிய வேந்தன் போர்க்களம் புகுந்தால், அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது என்பதை ஐயூர் முடவனார் என்ற புலவர் விளக்க முற்படுகிறார். அதற்கு அவர், வெள்ளம் அளவுக்கு மீறி வந்தால், அதனைத் தடுக்க முடியாது, தீ வலிமை பெற்று மிகுமாயின் அதில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்றுவது அரிது, காற்று கடுங்காற்றானால் அதனைத் தடுத்தல் இயலாது என்னும் எளிய உவமைகளின் மூலமாகப் பாண்டியனின் சினத்தையும் வலிமையையும் காட்டுகிறார்.

                                        “நீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்
                                         மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை
                                         வளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு
                                         அவற்றோர் அன்ன சினப்பேர் வழுதி”  
                                                                                                                      (புறநா.51.1-4)
                                               
          இதுபோல இஸ்லாமியக் கவிஞர்களும் எளிய உவமைகளால் தாங்கள் கூற வந்த கருத்துக்களை விளக்கிக் காட்டுகின்றனர். யாகோபு சித்தர், தாம் குறிப்பிடும் வைத்திய முறைகளைப் பின்பற்றினால், ‘கருடன் கண்ட சர்ப்பம்’ (யாகோபு சித்தர் பாடல்-357) போலவும்,  ‘புலி கண்ட ஆடு’ (யாகோபு சித்தர் பாடல்-380) போலவும் நோய்கள் அகன்று விடும் என்று கூறுகின்றார்.
     ஆயிரமசாலாவென்று வழங்கும் அதிசய புராணத்தைத் தந்த வண்ணப்பரிமளப்புலவர், இளமை வாழ்வில் அல்லாவை மறந்தவர்கள், ‘தூண்டில் மீனெனத்’ துன்பம் அடைவார்கள்  என்பதை,    
                                    “உளமகிழவாதியை யுவந்துற நினைந்தே
                                     வளமைபயிலும்வாலி பத்தில் வணங்காதார்
                                     விளமதுறந் தூண்டில்தனின் மீனென மலைத்தங்
                                     கிளமை  தடுமாறி    மிக வீடு    படுவாரே”  
                                                                                                      (ஆயிரம் மசலா-565) 
எனக் காட்டும் உவமை எல்லார்க்கும் விளங்கும் எளிய உவமையாக உள்ளது. 

இயற்கை சார்ந்த உவமைகள்:
     சங்க காலம் இயற்கைக் காலம். அக்கால மக்கள் தங்கள் வாழிடத்தை இயற்கையின் அடிப்படையிலேயே வகுத்துக் கொண்டனர், இயற்கையோடு இயைந்தே வாழ்வை நடத்தினர். தங்கள் வாழ்வின் வெளிப்பாடாக இலக்கியத்தையும் இயற்கையைச் சார்ந்தே படைத்தனர். எனவே அக்கால கவிஞர்களின் உவமைகளும், ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு’ (குறுந்தொகை-18) எனவும், ‘செம்புலப் பெயனீர் போல’ (குறுந்தொகை-40) எனவும், ‘உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழி நீரே’ (ஐங்குறுநூறு-203) எனவும் இயற்கைப் பொருள்களாகவே அமைந்தன. அவ்வழியில் வந்த இஸ்லாமியக் கவிஞர்களும் இயற்கை சார்ந்த உவமைகளைத் தங்கள் படைப்புகளில் பல இடங்களில் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
      
      முகியித்தீன், தம் சக்கூன் படைப்போர் இலக்கியத்தில், பெருமானார் நபி (சல்) அவர்களை, நாற்பதினாயிரம் அசுகாபிமார்கள் சூழ்ந்து வந்தார்கள் என்பதை,
                                “வட்டமதி தன்னை வான்மீன்கள் சூழ்ந்தபோல்
                                  இட்டமுள்ள நம்நபியை எல்லாரும் சூழ்ந்துவர”
என ஓர் இயற்கைக் காட்சியைக் காட்டிக் காவியத்தை ஓவியமாக்குகிறார்.

      உலகின் நிலையாமையைக் கூற வந்த உமறுப்புலவர்,  அதை மானின் கூற்றாக வைத்து,  இலை நுனியிலே உள்ள பனி நிலைத்து நிற்காதது போல, இவ்வுலக வாழ்க்கையும் நிலையில்லாதது என்பதை,
                     “இலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன்மன்னோ”
                                                                                    (சீறா.புரா. மானுக்குப் பிணை நின்ற படலம்-31)
என இயற்கையை உவமையாகக் கூறி விளக்கியுள்ளமை உன்னி உணர்ந்து இன்புறத்தக்தாகும். 

      அவரே பிறிதோர் இடத்தில், மற்றுமோர் இயற்கைக் காட்சியைக் காட்டுகின்றார். உழவர்கள் வயலில் நெல் மணிகளை விதையாகத் தூவுகிறார்கள். அவை காலைக் கதிரவனின் ஒளிபட்டுப் பொன்மழை போல ஒளிர்கின்றன. இக்காட்சியை உமறுப்புலவர், 
                                        “நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
                                         நென்முளை சிதறிய தோற்றம்
                                         பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
                                         பொன்மழை பொழிவது போன்றும்” 
                                                                                              (சீறா.புரா. நாட்டுப்படலம்-26)  
இருந்ததாகப் பாடியுள்ளமை, எத்துணை அழகாக நம் கண்முன் காட்சியாக விரிகின்றது.

     மற்றொரு காட்சி. கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்கும் கொன்றை மலர்கள் அழகிய ஆபரணங்களை அடுக்காகத் தொங்க விட்டது போன்று காட்சியளிக்கின்றன. அக்காட்சி வானுலக மங்கையர்களைப் பூஞ்சோலைக்கு அழைக்கச் செய்த அலங்காரமாகக் காட்சி தருகின்றது. இதனை வண்ணக் களஞ்சியப்புலவர் தம் இராஜநாயகம் என்ற நூலில்,
                                      “அம்பொன் மேலுல கரம்பைய ரிழிந்தகா வதனிற்
                                        பண்பு கூர்விளை யாடல்செய் திடவெனப் பலபூ
                                       வம்பு லாவிய வாபரணங்களை மரத்திற்
                                       கொம்பு தோறினுந் தூக்கிய தாஞ்சரக் கொன்றை”
                                                              (இராஜநாயகம். எறும்புகள் விருந்திடு படலம்-8)
எனக்; காட்டும் காட்சி இஸ்லாமிய இலக்கியத்தின் இயற்கை நலஞ்சிறக்கும் உவமைக்கு இனிய சாட்சியாகும்.

வாழ்க்கை நடைமுறை சார்ந்த உவமைகள்:
     கவிஞர்கள் வெறும் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் விஞ்சையர்கள் அல்லர். அவர்கள் நம்மோடு வாழ்ந்து, தம் வாழ்வில் காணும் அனைத்தையும் உற்று நோக்கி மனத்தில் தேக்கி வைத்திருப்பவர்கள். எனவே அவர்களின் பாடல்களில் வாழ்க்கை நடைமுறை சார்ந்த பல நிகழ்வுகள் உவமைகளாக வெளிப்படுவது இயற்கையே. நூகூ ஒலியுல்லாஹ் தம் வேத புராணத்தில்,
                                    “பறவை படக்கண்ணி வைத்த வேடன்  
                                      பாய்ந்தே யமுக்கல்போல் முக்கிக் கொள்வார்” 
                                                                                   (வேதபுராணம். முரீதுப்படலம்-159)
எனவும்,
            கனகவிராயர்,  தம் கனகாபிசேகமாலையில்,
                                     “கறவை ஆன்வராக் கன்றெனப் புலம்பினர் கதறி”
                                                                                                (கனகாபிசேகமாலை-12: 49)
எனவும் நம் வாழ்க்கையில் நாளும் நாளும் காணும் உவமைகளைப் பெய்து பாடியுள்ளமை என்றும் நம் மனத்தில் நிலைத்து நிற்பனவாகும். 

பல்பொருள் உவமை:
     ஒரு பொருளுக்கு ஓர் உவமையைக் காட்டுவது கவிஞனின் இயல்பு. சில நேரங்களில் கவிஞனின் வியப்புணர்ச்சியாலும் சொல்லாற்றலாலும் கவித்திறத்தாலும்   பல உவமைகளை  அடுக்கிக்  கூறுவதுண்டு. 
      சங்க இலக்கியப் பத்துப்பாட்டில் வெண்பற்களை, “முகைமுல்லை வென்று எழில்முத்து ஏய்க்கும் வெண்பல்” (குறிஞ்சிப்பாட்டு-76) என்று இரண்டு உவமைகளாலும், கலித்தொகையில், மகளிரின் எழில்நலத்தை “ஆய்தூவி அனமென அணிமயில் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்” (கலித்தொகை-56) என்று மூன்று உவமைகளாலும், பரிபாடலில், திருமாலின் கரிய மேனியைக் “கார்,மலர்ப் பூவை, கடல், இருள், மணி அவை ஐந்தும் உறழும் அணிகிளர் மேனியை” (பரிபாடல்-13) என்று ஐந்து உவமைகளாலும் விளக்கியுள்ளதை நாம் காணலாம். அச்சங்க இலக்கிய மரபைப் பின்பற்றித் தங்கள் இலக்கியங்களைப் படைத்த இஸ்லாமியக் கவிஞர்களும் ஒரே பொருளுக்கு எண்ணற்ற உவமைகளைக் காட்டிப் பாடல்களில் மெருகூட்டி உள்ளனர். உவமைக் கவிஞரெனப் போற்றப்படும் உமறுப்புலவர், தாயின் காலடியில் சொர்க்கத்தைக் கண்ட வள்ளல் பெருமானைப் பெற்றெடுத்த அன்னை ஆமீனாவின் பெருமையைக் கூற வருகிறார். அவ்வன்னையின் அறச்சிறப்பு, அருட்சிறப்பு, பொறைச்சிறப்பு, குலச்சிறப்பு எனும் நான்கையும் இல், தாய், நிலம், மணி எனும் நான்கு உவமைகளால் விளக்குகின்றார்.
                               “அறத்தினுக்கு இல்லிடம் அருட்கோர் தாயக                
                                 பொறுத்திடும் பொறுமையிற் பூமிக்கு எண்மடங்கு     
                                 உறைப்பெருங் குலத்தினுக்கு ஒப்பி லாமணிச்
                                 சிறப்பினுக்கு உவமையில் லாத செல்வியே”    
                                                                                   (சீறா.புரா. நபியவதாரப்படலம்-12)

     இது போலவே பெருமானாரின் பிறப்பைப் பாடவந்த உமறுப்புலவர், தருநிழல், அருமருந்து. செழுமழை, மணிவிளக்கு என உவமைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
                                 “பானுவின் கதிரால் இpடருறுங் காலம் 
                                             படர்தரு தருநிழல் எனலாய்      
                                  ஈனமுங் கொலையும் விளைத்திடும்
                                             பவநோய் இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
                                  தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
                                             குறைசியிற் றிலதமே யெனலாய்
                                  மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்
                                             முகம்மது நபிபிறந் தனரே”
                                                                                   (சீறா.புரா. நபியவதாரப்படலம்-92) 

     இதுபோல் பொன்னரிய மாலை எனும் நூலையியற்றிய புலவர் மதுரை மின்னா நூறுத்தீன் என்பார், முகம்மது (சல்) அவர்கள், நோயின் கடுமையினால் இறுதி எய்தி விட்டார்கள் என்பதை அறிந்த மக்களின் துயரத்தைக் காட்ட வந்தவர்,
                                  “கோவிழந்த குடியானோம் குடமுடைந்த தயிரானோம்
                                   ஆவிழந்த கன்றானோம் அரசிழந்த பதியானோம்
                                   நாவிழந்த மொழியானோம் நயனமில்லா முகமானோம்
                                   காவிழந்த குயிலானோம் கதிரிழந்த பகலானோம்

                                   பயிரிழந்த நிலமானோம் பகலிருந்த மதியானோம்
                                  உயிரிழந்த உடலானோம் ஒளியிழந்த மணியானோம்
                                  கயிரிழந்த கரமானோம் கடியிழந்த மலரானோம்
                                 அயிரிழந்த வாளானோம் ஐயகோவென அழுதார்”                                                                                                                             (அயிர் - கூர்மை )            
 (பொன்னரியமாலை. நபிநாயகத்தின் முன்வாய்மையால் சரதமிட்டபடலம்-10-11)
என்று உவமைகளை அடுக்கிக் கொண்டே போய், நம்மைப் படிப்படியாகத்  துயரத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறார்.

அரிய உவமைகள்:
         பண்டைத் தமிழிலக்கியங்களில் காணப்படும் அரிய உவமைகள் போன்றே இஸ்லாமிய இலக்கியங்களிலும் ஒரு சில அரிய உவமைகள் படித்துப் படித்து இன்புறத்தக்கனவாக உள்ளன.
       கம்பர் தம்முடைய காவியத்தைத் தொடங்கும்முன் அவையடக்கப் பாடலில் ஒரு பூனை தன் நாவால் பாற்கடல் முழுதையும் நக்கிக் குடிக்கச் செய்த முயற்சிபோல், தாம் இராமபிரானின் கதையைக் கூற முற்படுகிறேன் எனப் பாடுவார். அக்கம்பனின் காவியத்தை முழுதும் கற்றுணர்ந்த உமறுப்புலவர், தம் காப்பியத்திலும் அத்தகைய அரிய உவமைகளைக் கையாண்டுள்ளார். வானத்தில் பேரிடி இடித்துக் கொண்டிருக்கும் ஆரவாரத்திற்கு நடுவே ஒருவனின் கைநொடிச் சத்தம் எவ்வாறு யாருக்கும் கேட்காமல் போகுமோ,அதைப்போல பெரும்புலவர்களின்முன் தம் கவிமுயற்சி ஒருவமறியாததாகி விடும் எனும் கருத்தமைய,
                              “அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன் 
                               படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்தல்
                               இடியி டித்திடும் ஆரவா ரத்தினுக்கு எதிரோர்
                               நொடிநொ டிப்பது போலும்ஒத் திருந்ததுஎன் னூலே”
                                                                            (சீறா.புரா.கடவுள்வாழ்த்துப்படலம்-20)
என்றும், கடல்களையும் மிகப் பெரிய மலைகளையும் தகர்க்கக்கூடிய சண்டமாருதப் புயலுக்கு முன்னால் நொந்து கெட்ட ஒரு சிற்றெறும்பு விடும் மூச்சினைப் போன்றது தம் முயற்சி எனும் கருத்தில்,
                              “படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
                               எடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
                               மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்
                               வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே” 
                                                                        (சீறா.புரா.கடவுள்வாழ்த்துப்படலம்-19)
என்றும் தம் அவையடக்கப் பாடல்களாகப் பாடியுள்ளார்.

     உமறுப்புலவர் மற்றோர் இடத்தில், நபிபெருமானாரை உத்துபா என்ற கல்வியாளர் வாதிட்டு வெல்ல சூளுரைத்து வருகின்றார். ‘அவருடைய முயற்சி கிழக்கே எழுந்து, மேற்கே நோக்கி விரையும் கதிரவனைக் கால் இரண்டும் இல்லாத ஒருவன் ஓடி மறிப்பேன் எனச் சொல்வது போல உள்ளது’ என்று பாடியவர், அவ்வுத்துபா இறுதியில் தோற்று நின்றபொழுது, ஒரு பெரிய சிங்கத்தின்முன் மலையாடு ஒன்று ஒடுங்கி நிற்பதுபோல் நின்றார், என்ற ஓர் அரிய இனிய உவமையைக் காட்டுகின்றார்.
                            “இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர
                                        மடர்த்தெறியு மிறசூ லுல்லா
                             தெரிமறையின் உரைகேட்டுப் பொருள்தேர்ந்து
                                        பகுப்பஅதி சயித்து நோக்கி
                              உருகிமதி மயங்கிஎதி ருரையாமல்
                                         ஊமனென ஒடுங்கி வான்தோய்
                              பெருவரையின் மடங்கல்எதிர் வரையாடு
                                         நிகர்வதெனப் பேதுற் றானே.
                                                                                          (மடங்கல்-சிங்கம்)                  
                                                                                                      (சீறா.புரா.உத்பாவந்தபடலம்-19)
இவ்வரிய உவமையால் சிங்கத்தின்முன் நி;ன்ற வரையாட்டின் நிலையும் உத்துபா, பெருமானாரிடம் தோற்று நடுநடுங்கி நின்ற நிலையும் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன. இத்தகைய அரிய உவமைகள் இஸ்லாமிய இலக்கியங்களில் பலவிடங்களில் காணப்படுகின்றன.

இஸ்லாமியப் புலவர்களின் உவமைத் தனிச்சிறப்புகள்:
     இஸ்லாமியப் புலவர்கள் தங்கள் இலக்கியங்களுள் பெய்துள்ள உவமைகளுள் பல, தனிச் சிறப்பு வாய்ந்தவையாக மிளிர்கின்றன. கதிரவன் மறையும் காட்சியைப் பாடும்பொழுது, புலவர்கள் தம் குறிப்பையேற்றிப் பாடியுள்ளமையைப் பல தமிழிலக்கியங்களில் காணலாம். இதனைத் தற்குறிப்பேற்றவணி என்பர். தம் காவியத்தில் பகலவன் மறையும் காட்சியைக் காட்ட வந்த கனகவிராயர்,  போர்க்களத்தில் புண்பட்டுக் கிடக்கும் வீரர்களின் உடலைத் தன் கரத்தால் தீண்டித் துன்புறுத்தலாகாது என்றெண்ணிக் கதிரவன் தன் கரத்தைச் சுருட்டிக்கொண்டான் என்னும் பொருளில்,
              “நண்ணா ரயிரை வாங்கினவ ரவர்க ணாப்ப ணிறந்தனரே
               புண்ணா ருடலந் தனைக் கரத்தால் தொடுதல் பொருந்தா வகையென்று
               விண்ணார் பருதி தன்கரத்தைச் சுருக்கி மேல்பா லடைந்ததென்ன
               உண்ணா உவர்நீர்க் குடகடலிற்புகுந்தான்…………………”
                                                                                      (உசைனாரரசுப் படலம ;- 260)
எனத் தன்குறிப்பையேற்றிப் பாடியள்ளமை கவிஞரின் அணிநலத்தோடு, அவர்தம் உளநலத்தையும் அல்லவா காட்டுகின்றது! இது போன்று தற்குறிப்பேற்றவணி பயின்ற பாடல்கள் இஸ்லாமிய இலக்கியங்களில் எண்ணற்ற இடங்களில் உள்ளன.

     இதே போல் பெருமானாரைப் பெற்றெடுத்த அன்னை ஆமினாவை,உவமைகளால் அடுக்கிப் புகழ்ந்து கொண்டே வந்த உமறுப்புலவர்,  உவமைகளில் நிறைவு காணாது,
                              ‘சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே’
                                                                               (சீறா.புரா. நபியவதாரப்படலம்-12)
எனப் பாடியுள்ளமை உவமைக்கே உவமை தேடியதாகும்.

           இது போலவே, பெருமானாரின் அன்பு உள்ளத்தில் அன்னை கதீஜா இடம் பெற்ற அழகை,
                          ‘……………………….முகம்மது நெஞ்ச மென்னும்
                          கடிகமழ் வாவி யூடு கருத்தெனுங் கமல நாப்பண்
                          பிடிநடைக் கதீஜா வென்னும் பெடையனம் உறைந்த தன்றே’
என அவர் உருவகப்படுத்தி ஒரு காதல் ஓவியத்தையே தீட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்ப் புலவர்களின் உவமைகளிலிருந்து வேறுபடும் இடங்கள்:
     இஸ்லாமியப் புலவர்கள் தமிழ்ப் புலவர்களின் உவமைகளிலிருந்து வேறுபட்டுச் சிறந்துள்ள இடங்களும் சில உள. ‘பல்பொருளினு முளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்கு உவமையாம்’ எனக் கூறல், உவமைப்போலி வகை ஐந்தனுள் ஒன்றாகும் என்பர் இலக்கண நூலார். இவ்வகையில் கண்ணகியின் கற்பின் திறத்தினைக் கூற வந்த இளங்கோவடிகள், ‘அருந்ததி கற்பின் திறன் கண்ணகி கற்பு அனையது’ என்று கூறுவார். இதேநிலையில் பெருமானாரின் பெருஞ்சிறப்பைக் கூற வந்த உமறுப்புலவர், மிக நுட்பமாக ஒரு மாற்றம் செய்து,  பெருமானார் என்னும் பெருஞ்சுடர், ஞாயிறு,  திங்கள் முதலான ஒளியுடைய பொருள்கள் அனையது எனக் கூறாது, இவையெல்லாம்   ‘ஒளி பெறும் ஊற்றிடம்’  என்று வேறுபடுத்திக் காட்டுவார்.

முடிவுரை:
       “உவமை தருமின்பம் உவமையிலா இன்பம். விண்ணில் பரவிக் கிடக்கும் உடுக்களெனக் காப்பிய முழுதும் பரந்து கிடக்கும் உமறுவின் உவமைகளை மனத்தால் எண்ணி இன்புறலன்றி எண்ணிக்கையால் எண்ணி இன்புறல் இயலாதென்பது என் அனுபவம்”, என்று பெரும்புலவர் மு.அப்துல் கறீம் அவர்களின் சீறாப்புராணம் பற்றிய கூற்று, இஸ்லாமிய இலக்கியங்கள் முழுவதற்கும் பொருந்தும். இஸ்லாமிய இலக்கியங்கள் வெறும் சமய நெறிமுறைகளை மட்டும் கூறும் நூற்கள் என்பது உண்மையன்று. இதனை உணராமலேயே பலரும் இஸ்லாமிய இலக்கியங்களைப் படிக்காமல் ஒதுக்கி விடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இஸ்லாமிய இலக்கியங்களில் எங்கெங்கு காணினும் உவமை நலங்கள் சிறந்திருக்கின்றன, தொடுமிடமெல்லாம்; உவமை மணம் வீசுகின்றது. எனவே அவற்றை நாம் படித்துச் சுவைத்து இன்புறுவதோடு, அதன் உவமை நலத்தையும் இலக்கிய வளத்தையும் அனைவரும் அறியச் செய்வோமாக!

***********



ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

1.     இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு. (தொகுதி 1 – 4) -  ம. முகம்மது உவைஸ்,
                                                                                                                                        ரூ பீ.மு. அஜ்மல்கான்.
2.     சங்க இலக்கியத்தில் உவமைகள்.                                          -  ரா. சீனிவாசன்.
3.     சங்க இலக்கியம் சில பார்வைகள்.                                         -  சி. பாலசுபரமணியன்.
4.     சீறாவின் உவமை நலன்கள்.                                                      -  மு. அப்துல் கறீம்.
5.     இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு.                                               -  மு. சாயபு மரைக்காயர்.
6.     சங்க இலக்கியத் தொகுதி.                                                         -  ச.வே.சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்)


***********



(மலேசிய கோலாலம்பூரில் 20, 21, 22-05-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற 
உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை.) 



     

      

Thursday, December 12, 2013

அட்சரம் மாறாத அல்-குர்ஆன்



கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.



     அரபு நாட்டில் பிறந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இறைநெறியை ஒரு மார்க்கமாக கொண்டார்கள். அம்மார்க்கத்தை வழிநடத்திய காலங்களில்,இறைவனால் அவருக்கு அருளப்பட்ட வசனங்களையெல்லாம்; தம் மக்களுக்கு வேதமாகத் தந்தார்கள். அது அல்-குர்ஆன் என்று வழங்கப்படுகிறது. அதனைத் தமிழில் நாம் திருக்குர்ஆன் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் தொடக்கத்திலேயே முழுமையாக எழுதப்பட்ட நூலன்று. அவ்வப்பொழுது ஒவ்வொரு வசனமாக இறைவனால் இறக்கியருளப்பட்டது. அதன் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இசுலாமிய மார்க்கப் போராட்டக் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வு காண வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளில் அது இறைவனால் பெருமானுக்கு அருளப்பட்டது. மனித குலத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே திருக்குர்ஆனாகும். திருக்குர்ஆன் நபி பெருமானாரால் (ஸல்) இயற்றப்பட்ட நூலன்று. இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத ‘உம்மி’யாகவே இருந்தனர். இறைவன் வானவர் ஜிப்ராயீல் (அலை) வாயிலாக நபிகளாருக்குத் தெரிவித்த செய்திகளின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும். 
     அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு, அத்திருக்குர்ஆன் அரபு நாடுகளிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் பரவிய திருக்குர்ஆன் நாளடைவில் பல நிலைகளில் ஓதப்பட்டது. அதில் பல திரிபுகளும் ஏற்பட்டன. அதனால் அண்ணலாருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலீபாக்கள் (ரலி) பெரிதும் கலக்கமுற்றனர். திருக்குர்ஆன் வசனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ஓதப்படவும், எதிர்காலத்தில் அட்சரம் (எழுத்து மற்றும் ஒலி) மாறாது நிலையாக இருக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் பெருமுயற்சியின் பயனாகத் திருக்குர்ஆன் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் அவ்வேதம்; அருளப்பட்டு 1432 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரே மாதிரியாக இன்றளவும் ஓதப்பட்டு வருகின்றது. இவ்வாறு அட்சரம் மாறாது நிலைத்து நிற்கும் அல்-குர்ஆனின் வரலாற்றை இசுலாம் அல்லாதவர்களும்;; அறிந்துகொள்ளும் வகையில் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இறைத்தூதர்: 
     எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தைப் படைத்தான். மனிதர்களைத் தோற்றுவித்தான்; அவர்களுக்கு உணரவும், சிந்திக்கவும், அறியவும் வேண்டிய ஆற்றலை அளித்தான். கீழ்ப்படிவதற்கும்ää அடிபணிவதற்கும்ää வணங்குவதற்கும் உரியவன் இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தினான்;தன்மீது நம்பிக்கை கொண்டவர்களை நல்லடியார்களாகத் தேர்ந்தெடுத்தான். அவர்களைத் தன் தூதுவர்களாக நியமித்தான். தன் செய்திகளையும் கட்டளைகளையும் அவர்களிடம் அனுப்பினான். அத்தகைய இறைத்தூதர்கள் எல்லா நாடுகளிலும் தோன்றினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல இறைத்தூதர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஆயிரமாயிரம் எண்ணிக்கையில் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இதுவரை 124 000 இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றது. அவர்களுள் சிலரிடம் இறைவன் தன் வழிகாட்டுதல்களை அருளினான். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் யார் மீது இறக்கியருளப்பட்டதோ அவர்கள்; நபி எனப்பட்டார்கள்;. மோசசு நபி என்பாரிடம் தவுறாத் வேதத்தையும், தாவூத் நபி என்பாரிடம் ஸபூர் வேதத்தையும், ஈசா நபி என்பாரிடம் இன்ஜீல் வேதத்தையும் இறைவன் அருளினான். ஆயினும் காலம்; செல்லச்செல்ல மக்கள் தவறான பாதைகளில் செல்லத் தலைப்பட்டனர். இறைவன் அருளிய நெறிமுறைகளிலிருந்து (தீன்) வழுவித் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இறைவன் வகுத்த நியதிகளை விட்டுவிலகித் தம் இச்சைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றவகையில் தம் வாழ்வின் சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு இறைவன் படைத்த இனிய உலகத்தை அநீதியாலும் கொடுமைகளாலும் நிரப்பினர். இதனால் காலப்போக்கில் பல பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர். எனவே இறைவன் இறுதியாக மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக அரபு நாட்டில் தோற்றுவித்தான். அவர்கள் முஹம்மது நபி (ஸல்) என்றழைக்கப்பட்டார்கள். அவர்களிடம் இறைவன் தன் வழிகாட்டுதல்களாக நான்காவது வேதமாகிய புறுக்கான்; வேதத்தை அருனிளான். அதுவே திருக்குர்ஆன் என்று அழைக்கப்படுகின்றது.

முஹம்மது நபி: 
     முந்திய நபிமார்கள் எந்தப் பணிக்காக அனுப்பப்பட்டார்களோ, அதே பணிக்காக  அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவன் அனுப்பி வைத்தான். முஹம்மது நபி அவர்கள் இறைவன் அளித்த மார்க்கத்தை (இசுலாத்தை) மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்கள். அதனைத் தலைமையேற்று நடத்தத் தொடங்கினார்கள். வாழ்வின் உண்மைகளைப் பற்றி மனிதன் ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான எண்ணங்களைப் போக்கி, அவர்களின் உள்ளத்தில் அடிப்படை உண்மைகளை வேரூன்றச் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டார்கள். 
     தொடக்கத்தில் பெருமானார் தாம் வாழ்ந்த மக்காவில் இசுலாத்தை ஒரு மார்க்கமாக  நடத்திச் செல்ல மக்களிடம் அழைப்பு விடுத்தார்கள். தம் இனிய அறிவுரைகளால் மக்களை நல்வழிப்படுத்த முயன்றார்கள். பெருமானாரின் அழைப்பையேற்றுச் சிலர் இசுலாமிய மார்க்கத்தில்  தம்மை இணைத்துக் கொண்டாhகள்;. பலர் சுயநலத்தாலும் அறியாமையாலும் மூதாதையர்களின் வழிமுறைகளில் கொண்ட பற்றினாலும் அண்ணலாரின் அழைப்பையேற்கத் தயங்கினார்கள். அவர்களுள் சிலர், பெருமானாரை எதிர்க்கவும் தலைப்பட்டார்கள். இதனால் நாளடைவில் இசுலாமிய மார்க்கத்தினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே போராட்டம்; உருவானது. எதிர்ப்பாளர்கள் இசுலாம் மார்க்கத்தை நசுக்கிவிட முயன்றனர். அம்மார்க்கத்தை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் செயல்பட்டனர். அம்மார்க்கத்தாருடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ளாதிருக்கப் பொய்ப்பிரச்சாரம், குற்றச்சாட்டுகள், ஐயப்பாடுகளைக் கிளப்புதல், ஆட்சேபனைகள் என அனைத்துத் தடைகளையும் ஏற்படுத்தினர். அண்ணலாரின் பேச்சைக் கேட்காதவாறு மக்களைத் தடுத்தனர். இசுலாத்தை ஏற்றுக் கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர். அதனால் பெரும்பாலான மக்கள் அச்சமுற்று மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்றனர். மக்கா நகரில் பதிமூன்று ஆண்டு காலம் பல இன்னல்களைச் சந்தித்து வந்த இசுலாமிய மார்க்கம், வீறு கொண்டு எழுந்தது. தன் மார்க்கச் செயல்பாடுகளை இணக்கமான மதீனாவிற்கு மாற்றியது. நபிகளாரின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தம் சொத்து சுகங்களையெல்லாம் துறந்து, மதீனாவிற்குக் குடிபெயர்ந்தனர்.
     பெருமானாரின் அழைப்பையேற்றுச் செயல்பட்டு வந்த உம்மத்தே முஸ்லிமா குழு அதிகாரப்பூர்வமான ஆட்சியை மதீனாவில் நிறுவியது. அங்கும் நயவஞ்சகர்கள்  சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர். அவர்களின் சதியால் பல இடையூறுகள் ஏற்பட்டன. இத்தகைய இக்கட்டான காலத்தில் இறைவன் தன் வழிகாட்டுதல்களை நம் பெருமானாருக்கு அருளினான். இறைவனிடமிருந்து பெற்ற அண்ணலாரின் அருளுரைகளை ஏற்றுக் கொண்டு, உம்மத்தே முஸ்லிமா குழு மதீனாவில் பத்தாண்டு காலப் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்திற்குப் பிறகு, உம்மத்தே முஸ்லிமா குழுää அரபு நாடு முழுவதையம் தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது.

வஹி எனப்படும் திருவசனம்:
     எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நபிகளாரின்மீது இறக்கியருளப்பட்ட வழிகாட்டுதல்கள் (திருவசனங்கள்) வஹி எனப்பட்டது. இவ் வஹி எனப்படும் சொல்லுக்கு இரகசியமாக அறிவித்தல், மறைவாக இருந்து அறிவித்தல், உள்ளத்தில் ஒரு செய்தியைப் போட்டுவிடுதல் எனும் பொருள்கள் கூறப்படுகின்றன. எனவே வஹி என்பதற்கு அல்லாஹ்வின் வாக்கு எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாக இருக்கலாம்.
     இத்தகைய வஹி,  இறைவனால் நபிகளாரின் உள்ளத்தில் இறக்கி வைக்கப்படுவதென்பது ஒரு சாதாரண செயலல்ல. இறைவனால் அருளப்பட்ட ஓர் அருட்கொடை போன்றது. அண்ணலார் உள்ளத்தில் வஹி இறக்கியருளப்படும்பொழுது, உள்ளத்தின் ஆற்றல்களை ஒன்று திரட்டி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடும் நிலை அவர்களிடம் காணப்படும். அவர்கள் சுற்றுச்சூழலுடன் தொடர்பு அற்றவர்களாகிவிடுவார்கள். வெளிப்படையான புலனுணர்வுகள் எதுவும் துணை போகாது. முகம் சிவந்துவிடும். அண்ணலாரின் நரம்புகள் மீதும் கடுமையான சுமை ஏற்பட்டிருக்கிறது என்று தெரியும். அண்ணலார் மிகவும் சோர்ந்து போவார்கள். வஹி இறங்கும்பொழுது, கடுமையான குளிர் காலமானாலும் அண்ணலாரின் நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடும். இவ்வாறு மேலோங்கிய, இறைவன் இறக்கியருளிய வஹியை உள்ளத்தில் பெற்றுக் கொள்ளும் ஆற்றல் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டிருந்தது.

திருக்குர்ஆன் இறங்கியது: 
     இசுலாமிய மார்க்கப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. இப்போராட்டக் காலம் முழுவதும் வஹி நபிகளாரிடம் இறங்கிக் கொண்டேயிருந்தது. இறைவனால் இறக்கியருளப்பட்ட திருவசனங்களால் பெருமானார் மக்களை நல்வழிப்படுத்த முயன்றார்கள். மக்காவில், தொடக்கத்தில் பலர் அதற்குச் செவி சாய்க்கவில்லை. சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து வசனங்கள் அருளப்பட்டுக்கொண்டேயிருந்தன. இந்நிலையில் சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு வளர்ந்தது. இப்புதிய இசுலாம் மார்க்கத்தை நசுக்கப் பலரும் பல வழிகளில் முயன்றனர். எதிர்ப்புகளுக்கிடையே மார்க்கமும் வலிமை பெற்றுக் கொண்டே வந்தது. இத்தகைய சோதனையான காலத்தில் இறைவனின் வசனங்கள் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தன. எதிர்ப்பு மிகவும் பயங்கரமான நிலையை அடைந்தபொழுது, இறைத்தூதரும் அவருடைய தோழர்களும் இணக்கமான சூழ்நிலை இருந்த மதீனாவை நோக்கிச் சென்றனர். அங்கே ஒரே இரவில், இசுலாமிய அரசுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. மதீனாவிலும்  நயவஞ்சகர்கள் தொடர்ந்தனர். அவர்கள் செய்த சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. 
     மதீனாவில் அரசு நிறுவப்பட்டவுடன் நீண்ட வசனங்கள் இறங்கலாயின. மக்காவிலும், மதீனாவிலும் ஏற்பட்ட இச்சோதனை மிகுந்த இருபத்துமூன்று ஆண்டு காலத்தில் இறைவனால் அருளப்பட்ட திருவசனங்களால் பெருமானார் மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்கள். மார்க்கம் எவ்வாறு போற்றப்பட வேண்டும்? அரசு எவ்வாறு செயல்பட வேண்டும்? பண்பாடும் தூய்மையும் கொண்ட சமூகம் எப்படி உருவாக்கப்பட வேண்டும்? வாழ்வின் பல்வேறு நிலைகளில் மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? எவ்வித நியதிகளின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்? Nghன்ற வி\யங்களையெல்லாம் தெளிவாக அறிவுறுத்திவந்தார்கள். இசுலாமிய மார்க்கம் தொடங்கி, அது எந்தெந்தச் சூழ்நிலைகளில் வளர்ந்ததோ, அதன் தேவைகளுக்கேற்பவும்,அதன் சூழ்நிலைக்கேற்பவும் திருக்குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டுக் கொண்டே வந்தது. பல சமயம், சிக்கலான பிர்ச்சனைகள் எழும்பொழுது,இறைவழிகாட்டுதல் (வஹி) வரும்வரை அண்ணலார் காத்திருக்க வேண்டியிருந்தது. தொடக்கத்தில் மக்காவில் சிறு சிறு அத்தியாயங்களில் இறங்கிய வஹி, பின்னர் மதீனாவில் அரசு நிறுவப்பட்டவுடன் நீண்ட அத்தியாயங்களாக இறங்கலாயின. அதில் மனிதனின் முழுவாழ்வுக்கும் தேவையான எல்லா விதிமுறைகளும் அருளப்பட்டன. இவ்வாறு இருபத்துமூன்று ஆண்டுகள் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும்.
     
எழுதி வைக்கப்பட்டன:
     அண்ணலாரின் உள்ளத்தில் இறைவசனம் இறங்கியவுடன், பெருமானார் காதிப் (எழுதுபவர்) ஒருவரை அழைத்து அதனை முழுக்கச் சரியாக எழுதும்படிச் செய்துவிடுவார்கள். அப்பொழுது காதிப்கள், அவற்றைத் தோல் துண்டுகளிலேயும். எலும்புகளிலேயும், மரப்பட்டைகளிலேயும், இலைகளிலேயும் எழுதிவைத்தனர். அண்ணலாருக்கு இறைவசனம் இறங்கியதும் தம் தோழர்கள் பன்னிருவரில் (காதிப்கள்) எவரையாவது அழைத்து அதை எழுதச் செய்து, அதை எந்த அத்தியாத்தில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் கூறிவிடுவார்கள். பின்னர் அதே வரிசைப்படி பெருமானார் அவர்கள் தொழுகையிலும் இதர நேரங்களிலும் அவ்வசனங்களை ஓதி வந்தார்கள். பெருமானாரின் தோழர்கள் அதை உடனுக்குடன் மனனம் செய்தும் வந்தனர். பெருமானார் காலத்திலேயே, நூற்றுக்கணக்கானவர்கள் திருக்குர்ஆனை இதயத்தில் செதுக்கி வைத்தது போல மனனம் செய்து ஓதும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். அவர்கள் ஹாஃபிள்கள் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்) என்றழைக்கப்பட்டனர்.
     பெருமானார் மறைவுக்குப் பிறகு,  ஒரு சிலர், ‘நாங்களும் தீர்க்கதரிசிகளே! எங்கள் உரைகளும் இறை வசனங்களே!’ என்று கூற ஆரம்பித்தனர். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இக்குழப்பத்தை நீக்கப் பல போர்களும் நடைபெற்றன. அப்போர்களில் பல ஹாஃபிள்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள். இந்த ஹாஃபிள்களின் தியாகமே,  திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.

கலீபாக்களின் முயற்சி:
     அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு, பெருமானாருடன் உடனுறைந்து வாழ்ந்துவந்த கலீபாக்கள் (ரலி) இசுலாமிய அரசைக் கட்டிக் காத்து வந்தார்கள். அவர்களில் ஹசரத் அபூபக்கர், ஹசரத் உமர், ஹசரத் உஸ்மான், ஹசரத் அலீ எனும் நால்வரும் முக்கியமானவர்கள். நம் தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் வழங்கப்படும் பேச்சுத் தமிழில் உள்ள மாறுபாட்டைப் போல, அரபுநாடுகள் முழுவதிலும் பேசப்பட்டு வந்த அரபு மொழியிலும் பல மாறுபாடுகள் இருந்தன. இதனால் அரபு மொழியிலும், அரபு மொழியுடன் தொடர்பு கொண்டிருந்த பிற மொழிகளிலும் திருக்குர்ஆன் பல நிலைகளில் ஓதப்பட்டு வந்தது. இதனால் மாவட்டம்தோறும், மாநிலந்தோறும், நாடுகள்தோறும் ஓதப்பட்டுவரும் திருக்குர்ஆனில் பல மாற்றங்கள் இருந்தன. இதனைக் கண்ட ஹசரத் உமர் அவர்கள் பெரிதும் கவலை கொண்டார்கள். திருக்குர்ஆன் ஓதப்படுவதில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தை ஹசரத் அபூபக்கர் அவர்களிடம் வற்புறுத்தினார்கள். பெருமானார் தந்த திருக்குர்ஆன் பற்றிய பிரச்சனையில் முதலில் தயக்கம் காட்டிய அபூபக்கர் அவர்கள்ää பின்னர் உமர் அவர்களின் திட்டத்திற்கு உடன்பட்டார்கள்.

அட்சரம் மாறாத திருக்குர்ஆன்:
     திருக்குர்ஆனை ஒழுங்குபடுத்தும் பணிக்காகப் பெருமானாரின் உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜைத்பின் ஃதாபித் அன்ஸாரி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. பெருமானார் விட்டுச் சென்ற சுவடிகளைத் தொகுத்தல், பெருமானாரின் கண்ணியம் மிகுந்த தோழர்களிடம் உள்ள சுவடிகளைத் திரட்டுதல்,  மனனம் செய்து வைத்துள்ள ஹாஃபிள்களின் உதவியைப் பெறுதல் எனும் மூன்று நிலைகளில் திருக்குர்ஆனின் வசனங்கள் முழுவதையும் ஒப்புநோக்கி, ஆதாரப்பூர்வமான, சரியான வசனங்களைப் பதிவு செய்தல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் திருக்குர்ஆனின் முழுமையான ஒரு பிரதி தொகுக்கப்பட்டது. அது உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டு, மக்கள் அனைவரும் இந்த ஆதாரப்பூர்வமான தொகுப்பிலிருந்து நகல் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அல்லது தங்கள் சுவடிகளை இதனுடன் ஒப்பு நோக்கித் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஹசரத் அபூபக்கர் அவர்களின் ஆணையை ஏற்று, ஹசரத் உஸ்மான் அவர்கள் இசுலாமிய நாடுகள் அனைத்திற்கும் அதிகாரப்பூர்வமான திருக்குர்ஆனின் படியை அனுப்பி, இதிலிருந்து எழுதப்பட்ட வசனங்களே ஓதப்பட வேண்டும் என்றும், பிறவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டுமென்றம் ஆணையிட்டார்கள். இன்று நம்முடைய கரங்களிலே இருக்கும் திருக்குர்ஆன்,  அன்று உஸ்மான் அவர்கள் இசுலாமிய உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பிய பிரதிகளுக்கு முற்றிலும் சரியான நகலேயாகும். இவர்களின் பெருமுயற்சியால்தான் திருக்குர்ஆனின் வசனங்கள் 1432 ஆண்டுகளுக்கு மேலாகியும் அட்சரம் பிசகாமல் இன்றளவும் ஓதப்பட்டு வருகின்றன. பாடவேறுபாடு இல்லாத ஒரே வேதமாக உலகம் முழுவதும் இருந்து வருகின்றது. உலகின் எம்மூலையில் ஓதப்படும் திருக்குர்ஆனும், உலகின் எம்மூலையில் விற்கப்படும் அரபு மொழியிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களும் அட்சரம் மாறாமல் இருந்து வருவதற்கு இம்மாபெரும் கலீபாக்களின் முயற்சிகளே முழுமுதற் காரணங்களாகும்;. 

எழுத்தெண்ணிக் காக்கப்படும் வழிமுறை:
     திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயங்கள், திருவசனங்கள், சொற்கள், எழுத்துக்கள், கோடுகள்,புள்ளிகள்  என அனைத்தும் கணிக்கப்பட்டுள்ளன.

 திருக்குர்ஆனின் உட்பிரிவுகள்:
     1.  மன்ஸில்கள்                                                                                                         7
     2.  ஜூஸ்வுகள் என்னும் பாகங்கள்                                                                 30
     3.  ஸ_ராக்கள் என்னும் அத்தியாயங்கள்                                                   114
     4.  ருகூவுகள்                                                                                                           588
     5.  ஆயாத் என்னும் வசனங்கள்                                                                    6666
        (கூஃபா நகர அறிஞர்களின் கணக்குப்படி வசனங்களின் 
        எண்ணிக்கை 6236 ஆக குறிக்கப்பட்டுள்ளது.) 
     6.  கலிமாத் என்னும் சொற்கள்                                                                  76,430
     7.  ஹ_ருஃப் என்னும் எழுத்துக்கள்                                                       3.26,671
     8.  ஜபர் என்னும் அகர உயிர்க்குறிகள் (மேற்கோடு)                      4,53,143
     9.  ஜேர் என்னும் இகர உயிர்க்குறிகள் (கீழ்க்கோடு)                          39,582
     10. பே~ஷ் என்னும் உகர உயிர்க்குறிகள் (மேல்வளைவுக்;கோடு)                  8,804
     11. நுக்தா என்னும் புள்ளிகள்                                                                   1,05,684
     12. மத்து என்னும் நீட்டல் குறிகள்                                                              1,771
     13. ஷத்து என்னும் அழுத்தல் குறிகள்                                                       1,274. 

     இவ்வாறு திருக்குர்ஆனில் உள்ள அனைத்து வகை அம்சங்களும் எழுத்தெழுத்தாக எண்ணி காக்கப்பட்டுவருவதால், இறைவன் மூலமாக அண்ணலார் பெற்றுத் தந்த திருக்குர்ஆனில் எவ்வித மாற்றமும் நடைபெற வாய்ப்பில்லாமல் இன்றளவும் நிலைத்து வாழ்ந்து வருகின்றது.

முடிவுரை:
     மிகப் பழமையான ஒரு வேத நூல், பல காலமாக ஓதப்பட்டு வரும்பொழுது, அதில் காலந்தோறும் மாற்றங்களும் திரிபுகளும் ஏற்படுவது இயற்கை. ஆனால் 1432 ஆண்டுகளுக்கும் மேலாக ஓதப்பட்டு வரும் திருக்குர்ஆனில் எவ்வித மாற்றமுமில்லாமல் எழுத்திலும் ஒலியிலும் கூட ஓர் அட்சரமும் பிசகாமல் காத்து வருவதென்பது ஓர் எளிய செயலல்ல. அதனைச் சாதித்துக் காட்டி வரும் இசுலாமும், இசுலாமியர்களும் அதற்காக எத்துணை மனஉறுதியுடனும், கட்டுப்பாடுடனும் செயலாற்றி வருகின்றார்கள் என்று எண்ணும்பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காகப் பாடுபட்டு ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்திய கலீபாக்கள் முதற்கொண்டு அனைவரையும் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் திருக்குர்ஆனின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக, இசுலாமியர்கள் எந்த நாட்டவராயினும் எந்த மொழியினராயினும் அது அல்லாஹ்வினால் அருளப்பட்ட அரபு மொழியிலேயே ஓதப்பட்டுவர வேண்டும் என்பதையும் கடைப்பிடித்து வருவதை அறிந்து, வியந்து, மகிழவும்,  நெகிழவும்  வேண்டியதாயுள்ளது.
  
                                               “இது அல்லாஹ்வின் வேதமாகும்.
                                                     இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.” (2.2)

“(முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டுவர வேண்டும் என்பதற்காக!” (14:1-2)

oooooooooooooooo

இக்கட்டுரை ஆக்கத்திறகுத் துணைநின்ற நூல்கள்:

1.      தர்ஜூமதுல் குர்ஆன் ( அல்லாமா ஆஃகா அப்துல் ஹமீது பாகவி, 
           தமிழ்மொழி பெயர்ப்பு), 1986.
2.        தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் (திருக்குர்ஆன் விளக்கவுரை),
           அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்    அரபிக்கல்லூரி,வேலூர், 1993.  
3.        திருக்குர்ஆன் - I F T வெளியீடு – 13வது பதிப்பு, சென்னை, 2010.
4.       அபுல் அஃலா, மொழியாக்கம் குறித்து (கட்டுரை), திருக்குர்ஆன்,I F T  வெளியீடு –
           13வது பதிப்பு, சென்னை, 2010.
5.       அபுல் அஃலா,தோரண வாசல் (கட்டுரை),  திருக்குர்ஆன், I F T  வெளியீடு –
           13வது பதிப்பு, சென்னை,  2010.
6.        பேரா.அத்ஹர் ஹ_ஸைன், தலைவாசல் (கட்டுரை), திருக்குர்ஆன், I F T  வெளியீடு –
           13வது பதிப்பு, சென்னை,  2010. 
7.        மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி, சொல்லின் பின்னணி (கட்டுரை),திருக்குர்ஆன்,
            I F T  வெளியீடு – 13வது பதிப்பு, சென்னை,  2010.
8.        சிலம்பொலி சு.செல்லப்பனார்,  நெஞ்சையள்ளும் சீறா, 
           நேஷனல் பப்ளிஷர்ஸ்,  சென்னை,   2004.


oooooooooooooooooooo



(தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 08,09,10-07-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 ஆவது மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை)

     
   
     

Wednesday, December 11, 2013

அரவிந்தரின் கல்விச்சிந்தனைகள்
  Shri Aurobindo's Educational Thoughts


கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.



      "மனித இனம் பலவகையான தத்துவங்கள், நீதிநெறிகள்,அறிவியல்முறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு முழுமை நிலையை அடையலாம் என்ற கனவு கண்டது. அக்கனவை நனவாக்க, தான் கொண்ட முயற்சிகளில் அது எத்தனையோ வெற்றிகளை அடைந்து வருகின்றது. ஆயினும் வாழ்வின் இறுதி உண்மையை அறிவதில் அது வெற்றி பெறவே இல்லை. துன்பம், வறுமை,போராட்டம் ஆகியவற்றின் பிடியிலிருந்து அதனால் விடுபடவே முடியவில்லை. ஏந்த அரசியல் திட்டமோ, சமுதாயத் திட்டமோ, அறிவியல் முயற்சிகளோ அதற்கான வழியைக் காட்டவில்லை. உலகத்தில் இவ்வுண்மையைக் காணும் முயற்சியில் கீழ்த்திசை நாடுகளே ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. அவற்றுள்ளும் ஆன்ம பரிசோதனையின் மாபெரும் ஆய்வுக் கூடமாக இந்தியாவே இருந்து வந்துள்ளது. இங்குத்தான் ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனையோ மகான்கள் தோன்றியுள்ளனர்.”1

     ஆன்மீகத் துறையில் கருத்துச் செலுத்திய நம் முன்னோர்கள் சுயநலத்தைவிட பிறர்நலத்தைப் பேணுவதையே தம் உயிர்மூச்சாகக் கொண்டனர். இந்தப் பலமே பலவீனமாகி ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கக் காரணமாகிவிட்டது. நாட்டை அபகரித்து  ஆட்சி செய்து வந்த அந்நியர்கள், அவர்களுக்குரிய கல்வியையே நம்மீது திணிக்க ஆரம்பித்தனர்.

 “கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகள் மக்கள் அனைவருக்கும் ஒன்றே. ஆனால் அந்தந்த நாட்டுக்குரிய பண்பும் நாகரிகமும் என்பன சில இருக்கின்றன. இந்தியாவின் நாகரிகத்தை வளர்ப்பதற்கும்,இந்தியப் பண்பைப் பெருக்குவதற்குமான கல்வியே நமக்குத் தேவை”2

என்பதை நம் ஆன்றோர்கள் உணர ஆரம்பித்தனர். புதியதோர் கல்வித் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர்.

 “உண்மையான கல்வி,அறிவுக்குமட்டும் பயிறசியளிப்பதாக அமையக்கூடாது. உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிப்பதாக அமைய வேண்டும்”
என்று காந்தியடிகள். திட்டமிட்டார்.

      இந்நிலையில்தான் இருபதாம் நூற்றாணடின் இலக்கிய வல்லுநராகவும், கவிஞராகவும். மெய்ஞ்ஞானம் அருளும் யோகியராகவும் விளங்கிய மகான் அரவிந்தரும் புதியதோர் கல்வித் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்.
      அரவிந்தர், ‘கர்மயோகி’ என்ற பத்திரிக்கையில் 1910 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில்,
 “மனித சமுதாயம், சுதிமானலட ஜோதியைக் (Supermental Light) கிரகிக்கத் தன்னைத் தயார் செய்து கொள்வதற்கு ஒரு நல்ல கல்விமுறை  தேவைப்படும்”3
என்று கருதியுள்ளார்.

      இக்கருத்தின் அடிப்படையில், மகான் அரவிந்தரின் மனத்தில் எழுந்த கல்விச் சிந்தனைகள் பற்றியும், கற்பித்தல் முறையில் அவர் ஏற்படுத்த நினைத்த மாற்றங்கள் பற்றியும், அவரது புதிய கல்வித் திட்டம் பற்றியும் உள்ள கருத்துக்களைத் தொகுத்தளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி என்பது யாது?
கல்வி என்பது  பற்றி சுவாமி சித்பவானந்தர்,
 “எழுதவும்,படிக்கவும் கற்றுக் கொள்வதே கல்வி என்று சொல்லுவது வழக்கம். நம் வாழ்க்கைக்குரிய பயிற்சியைத்தான் உண்மையில் கல்வி என்று சொல்ல வேண்டும்”,4 
என்று கூறியுள்ளார்.
மகான் அரவிந்தர், 
“முன்பெல்லாம் கல்வி என்பது குழந்தையின் இயற்கையை இயந்திரம் போல், எல்லோரும் போன தடத்திலேயே போகும்படியாக வற்புறுத்துவதற்காகத்தான் இருந்தது”5
என்று குறி;ப்பிட்டுள்ளார்.

மனத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு
மகான் அரவிந்தர் கல்வியின் அடிப்படையைப் பற்றிக் கூறும் பொழுது,
“குழந்தைப் பருவம்,சிறார் பருவம், வாலிபப் பருவம் ஆகிய பருவங்களிலே மனிதனது மனத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவே கல்வியின் உண்மையான அடிப்படையாகும்”.6
என்று கூறி, மேலும் அவர்,
மனத்தை நான்கு அடுக்குகளாகப் பிரித்துக் காட்டி,அடிப்படையானவற்றைத் தெளிவுப்படுத்துகின்றார்
.
1. சித்தம் (Citta) : பழைய அனுபவங்களை, நம் மனத்தில்  பதிந்துள்ள
       முத்திரைகளாகத் தேக்கி வைக்கும் தளம் சித்தம் அல்லது ஞாபகக் குவியல்        அறையாகும்.
2. மனம் (Manam) : இந்த இரண்டாவது அடுக்குத்தான் உண்மை மனமாகும்.
       இதனை இந்திய உளநூல்கள், “ஆறாவது உணர்ச்சி” எனக்
       குறிப்பிடுகின்றன.
3. புத்தி (Buddhi) : மூன்றாவது அடுக்குப் புத்தியாகும். சிந்தனைக்கு
        உண்மையான கருவி இதுதான். மனமெனும் இயந்திரத்தின் ஏனைய
        பகுதிகள் அறியும் வி~யங்களைத் தொகுத்துச் சீர்படுத்தி
        ஒரு முடிவு கட்டுவது இதுவே.
4. ப்ரக்ஞா விலாசம் (Genius) : இஃது நான்காவது அடுக்காகும்.
        இது மனிதனிடத்தே இன்னும் முழுமையான வளர்ச்சியடையா
        விடினும் சிறிது சிறிதாக ஒரு பரந்த வளர்ச்சியையும்,
        பரிணாம வளர்ச்சியிலே மேன்மேலும் முழுமையையும்
        அடைந்து கொண்டிருக்கிறது. ஞானத்தின் உயர்தளமாம்,
        இதன் தனிப்பட்ட விசே~மான ஆற்றல்களைப் “ப்ரக்ஞா விலாசம்”
         என்று நாம் சொல்கின்றோம்.7

அரவிந்தரின் கல்விச்சிந்தனைகள்
        “மாணவரிடத்தே காணும் இப்-ப்ரக்ஞா விலாசம் என்ற மகத்தான திகைப்பூட்டும் மனவியல்பைக் கல்வியாளர்கள் இறுகப் பற்றி ஆராய்ந்ததில்லை. பள்ளிப் பாடங்களை மட்டும் போதிப்பவர் ப்ரக்ஞா விலாசத்தை இகழ்ந்து நசுக்குவதற்குத் தன்னால் முடிந்ததைச் செய்கிறார். சற்றுப் பரந்த மனமுடைய ஆசிரியர், இதை வரவேற்கிறார் அவ்வளவுதான். மனித இனத்திற்கே மிகவும் முக்கியம் வாய்ந்த இம்மனவியல்புகளை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாது. இவற்றைப் புறக்கணிப்பது மதியீனமாகும். அரைகுறையான இவற்றின் வளர்ச்சியைப் பூரணமடையச் செய்ய வேண்டும். இவற்றுடன் கலந்துள்ள பிழைகள், ஏறுமாறான தற்போக்கு,ஒருதலைப்பட்ட போலிப்புனைவுகள் முதலியன கவனமாகவும் சாதுர்யமாகவும் அகற்றப்பட வேண்டும். ஆனால் ஆசிரியரால் இதைச் செய்யமுடியாது. ஆசிரியர் இவ்வி~யத்தில் தலையிட்டால் தூசு தும்புகளைத் தூற்றி அகற்றும்போது நல்ல மணிகளையும் சேர்த்து அகற்றிவிடுவார். அவர் செய்யக்கூடியது வளரும் ஒரு ஜீவனை, அதன் போக்கிலேயே பூரண வளர்ச்சி அடையும்படி விடுவதுதான்”.8 
அரவிந்தரின் இச்சிந்தனை,
“ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தாமாகவே அறிவினைப் பெறும் சு10ழலை அளித்து அனுமதித்தால் போதும்”,
என்ற மேல் நாட்டுக் கல்விச் சிந்தனையாளர் ஹெர்பர்ட் ஸ்பென்னர் கருத்தினையும்,
 “கல்விமுறை என்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை, அவர்கள் கற்க அனுமதிக்கப்படுவதே”
என்ற கவியரசர் தாகூர் கருத்தினையும் இணைத்துப் பார்க்கத்தக்கதாய் உள்ளது.
       ‘நளினி காந்த் குப்தா’ என்பவர் தாம் எழுதிய “உண்மையான கல்வி” என்ற கட்டுரையில்,
“சேர்த்துக் குவிப்பதல்ல கல்வி. நிறைய பொருள் வைத்திருப்பவன் செல்வன் அல்ல. தனது செல்வத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவனே செல்வன். அதுபோல் நிறைய தகவல்களைத் தெரிந்துள்ளவன் நிறைய பொதி சுமப்பவனே. உணர்வின் வளர்ச்சியே உண்மைக்கல்வி”9 
என்று குறிப்பிட்டுள்ளமையும் ஈண்டு எண்ணத்தக்கது.

கற்பித்தல் பற்றிய அரவிந்தரது கொள்கைகள்
     கற்பித்தல் முறைகளைப் பற்றி அரவிந்தர் கூறுமிடத்து, அவற்றை மூன்று கொள்கைகளாகப் பிரித்துக் காட்டுகிறார்.
“1. எதையும் கற்பிக்க முடியாது என்பதுதான் உண்மையான போதனா முறையின் முதற்கொள்கையாகும்.
 2. மனத்தின் வளர்ச்சியில், அம்மனத்தோடு கலந்து ஆலோசிப்பது என்பதே இரண்டாவது கொள்கையாகும்.
 3. இருப்பதைக் கொண்டு, இருக்கப் போவதற்காக உழைத்தல், இதன் மூன்றாவது கொள்கையாகும்.”10
இயற்கைக் கொள்கையினரான  கல்விச் சிந்தனையாளர் ரூஸோ, 
கற்பவர்களுக்குப் பாடங்களை அளிக்காதீர்கள், அனுபவங்களை அளியுங்கள்”
என்று கூறியுள்ளமையும் அரவிந்தரின் கருத்துக்கு அரண் செய்வதாய் உள்ளது.

ஆசிரியர் பற்றி அரவிந்தர்
      கல்வி பற்றிய தனனுடைய தெளிவான சிநதனைகளை விளக்கும் அரவிந்தர், ஆசிரியரைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அறிவுறுத்துபவரோ, நன்றாக வேலை வாங்குபவரோ அல்ல ஆசிரியர். மாணவனின் உபகாரி. வுழிகாட்டி ஆவார். கருத்துக்களைத் தலைமீது சுமத்துவது அல்ல, குறியுணர்த்துவதுதான் அன்னாரின் வேலை. மாணவனது மாற்றத்திற்கு அவர் உண்மையாகப் பயிற்சியளிக்கவில்லை, தனது அறிவுப் பொறிகளைச் செம்மையாக்குவது எப்படி என்று மாணவர்களுக்குக் காட்டிக் கொடுக்கிறார், அவர்களது செயற்பாட்டில் கைகொடுக்கி;றார்,உற்சாகப்படுத்துகி;றார்,அறிவை அவர் ஊட்டவில்லை, தாமாகவே அறிவைச் சம்பாதிப்பது எவ்வாறு என்று வழிகாட்டுகிறார், அகத்தேயுள்ள ஞானத்தை அவர் வெளிக்கொணரவில்லை. ஆனால் அது எங்குப் புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு புறத்தே அடிக்கடி எழச் செய்யலாம் என்பதையும் உணர்த்துகிறார்.”11

பவித்ரா என்பவர், அரவிந்தரின் கல்விபற்றி,
“ஆசிரியரின் ஆட்சி அறிமுகமாகவும் ஆலோசனையாகவும் இருக்குமேயொழிய, ஒருபோதும் கட்டளையாகவோ,சுமத்துவதாகவோ இருக்காது,’12 
என்று கூறியுள்ளமையும், 
சுவாமி சித்பவானந்தர்,
“வளர்கின்ற செடிக்கும். வளர்க்கினற தோட்டக்காரனுக்கும் உள்ள தொடர்பே, மாணாக்கனுக்கும், ஆசிரியருக்கும் இருக்கவேண்டும்,”13
என்று உணர்த்தியுள்ளமையும் இங்குக் கருதத்தக்கன.

அரவிந்தரின் கல்வித்திட்டம்
      அரவிந்தர்,  தம் ஆன்ம உணர்வில் முகிழ்த்த பல்வேறு கல்விச் சிந்தனைகளையும் இணைத்து,  நம் நாட்டிற்குத் தேவையானதும், அவசியமானதும், பொருத்தமானதுமான கல்வி, “தேசியக் கல்வியே” (National Education) எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்,
“தேசியக் கல்வியி;ன் மைய நோக்கமானது, மனித இனத்தின் சக்தியையும், ஆத்ம உணர்வையும் வளர்ப்பதேயாகும். அதை ஏன்னுடைய நோக்கில் கூறுவேனேயானால், அறிவையும்,நடத்தையையும், பண்பாட்டையும் முறையாகப் பயன்படுத்தும் சக்தியைத் தூண்டுதலேயாகும் என்பதே,”14
என்று மொழிந்துள்ளார்.

அரவிந்தர் மேலும்,
“உண்மையான தேசியக் கல்வியின் நோக்கமும், கொள்கையும் நவீனகால உண்மையையும், அதன் அறிவையும் நிச்சயமாக அசட்டை செய்வதாகாது. ஆனால் நம் நாட்டின் இயல்பான தன்மை. நம் மணணுக்கேற்ற அறிவு, நமது சொந்த ஆன்ம உணர்வு இவற்றின் அடிப்படையை ஏற்றுக் கொள்வதாகும்,”15
என்று தெளிவுப்படுத்துவதிலிருந்து அவருடைய கல்வித் திட்டத்தின் நோக்கம் புலனாகிறது.

ஒருமைப்படுத்தப்பட்ட கல்வி (INTEGRAL EDUCATION)
“அரவிந்தரால் திட்டமிடப்பட்ட குறிக்கோள்களை உள்ளடக்கியதும், மனித இயல்புகள் யாவும் முழுமையாகப் பெறப்பட்டதுமான கல்வி, ‘ஒருமைப்படு;த்தப்பட்டகல்வி’ அல்லது ‘முழுமைக்கல்வி’ என அழைக்கப்படுகிறது. அரவிந்தரின் துணையாக இருந்து அவரது ஆன்ம உணர்வுகளைப் பெற்ற அன்னையார்,  இக்கல்வியை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அமைத்துள்ளார்.”16
அவையாவன:
                                                   1. உடல்நலக்கல்வி (Physical Education)
                                                   2. ஜீவாதாரக்கல்வி (Vital Education)
                                                   3. மனநலக்கல்வி (Mental Education)
                                                   4. உளநலக்கல்வி (Psychic education)
                                                   5. ஆன்மீகக்கல்வி (Spiritual Education)

ஸ்ரீ அரவிந்தர் பன்னாட்டுக் கல்வி மையம்
(Shri Aurobindo International Centre of Education)
     அரவிந்தரின் கல்விச் சிந்தனைகளையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு 1943 ஆம் ஆண்டு ஆசிரமப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் 1951 இல் அரவிந்தரின் மறைவுக்குப் பின் அவருடைய பெயராலேயே பன்னாட்டுக் கல்வி மையமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அரவிந்தரின் கல்விக் கொள்கைகளை நிறைவேற்றி வரும் இக்கல்வி மையம், இன்று ஒரு பல்கலைக்கூடமாக வளர்ந்துள்ளது.

முடிவுரை
       “உலகிலுள்ள பிற நாட்டவரெல்லாம் ஆன்மீக உதவிக்காகவும், மெய்ஞ்ஞான ஒளிக்காகவும் இந்தியாவை நர்டும் இந்த வேளையில். இந்தியா தனது ஆன்மீகச் செல்வங்களை விட்டெறிந்து விடுமானால். அது விதியின் கொடிய விளையாட்டாகவே இருக்கும். இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது, ஏற்படாது.. இந்தியா தனது உயர்நிலையை அடைய வேண்டுமானால், அதற்கு அகத்தேயும்,  புறத்தேயும் பெரியதொரு விடுதலையும் மாற்றமும், அகவாழ்விலும் புறவாழ்விலும் விரிவான முன்னேற்றமும் தேவையாகும்.”17
இந்த மாற்றமும் ஏற்றமும் கல்வியினால்தான் முடியும். அதற்கு அரவிந்தரின் கல்விச் சிந்தனைகள் கட்டாயம் உதவும். அவரது ஆன்மீக உணர்வுகள் உறுதுணையாய் இருக்கும்.

                                                                     oooooooooooooooooooo


அடிக்குறிப்புகள்:

1. “இந்தியாவின் ஆன்மா” – அரவிந்தர் - அமரபாரதம் - கட்டுரை,பக். 1.
2. “கல்வி” – சுவாமி சித்பவானந்தர், முன்னுரை.
3. “வைகறை” – முத்திங்களிதழ், 1971 -1 பக். 39.
4. “கல்வி” – சுவாமி சித்பவானந்தர்,பக். 18.
5. “வைகறை” – முத்திங்களிதழ், 1976 -4 பக். 31.
6. Shri Aurobindo and the Mother on Education – Page 8 to 10
7. Shri Aurobindo and the Mother on Education – Page 13.
8. Shri Aurobindo and the Mother on Education – Page 13.
9.  “வைகறை” – முத்திங்களிதழ்ää 1970 -3 பக். 51.
10. Shri Aurobindo and the Mother on Education – Page 8 to 10
11. “வைகறை” – முத்திங்களிதழ்ää 1971 -1 பக். 40.
12. Education and the Aim of Human Life – by Pavitra -  Page 53.
13. “கல்வி”– சுவாமி சித்பவானந்தர்ää பக்.115.
14. Shri Aurobindo and the Mother on the Essential Ideals of all Mankind – page 56.
15. Shri Aurobindo and the Mother on the Essential Ideals of all Mankind – page 57.
16.      Education and the Aim of Human Life – by Pavitra -  Page 54.
17. “இந்தியாவின் ஆன்மா” பக்.54.

                                                                oooooooooooooooooooo



(தமிழ்நாடு தத்துவஇயல் மன்றம் - ‘அரவிந்தரின் தத்துவம்’ என்ற தலைப்பில் 10..3.1985 இல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் நடத்திய 5 வது கருத்தரங்கில் வாசிக்கப்;பட்ட ஆய்வுக் கட்டுரை)