Thursday, April 10, 2008

பிழைபொறுத்தருள்வாய் அம்மா!   (Rdhkp)
 




கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.
எண்ணிலா செல்வந் தன்னை
ஏந்தியே கரையை நோக்கி
உண்ணென்றே ஊட்டு தல்போல்
ஓடியே வருவாய்; அன்புக்
கண்ணீரால் முத்தம் சிந்திக்
கட்டியே தழுவும் தாய்போல்
மண்மீதில் உனைநி னைத்தே
மனங்களித் திருந்தோம் அம்மா!


கொலைசெய்யும் நோக்கோ டென்றும்
கொண்டதாய் வாராள் என்றே
நிலையான உறுதி கொண்டே
நினைநம்பி வாழ்ந்தி ருந்தோம்!
அலைகடல் தாயே! ஓர்நாள்
அன்பினைப் புதைத்து விட்டுத்
தலைவிரி கோல மாகத்
தடங்கரைத் தாண்டி விட்டாய்!


அழித்திட நினைத்தே சீறி
ஆர்ப்பரித் தெழுந்து வந்தாய்!
வழிப்பறிக் கள்வன் போலே
வஞ்சனை செய்து விட்டாய்!
பழியினுக் கஞ்சா நெஞ்சப்
பாதகன் போலே பொங்கி
அழித்தனை அம்மா! அந்தோ!
அஞ்சியே நடுங்கு கின்றோம்.


குடித்தஉயிர் போதும் அம்மா!
கொடுத்ததுயர் போதும் அம்மா!
வடித்தகண் ணீரும் வற்றி
வலிவிழந்து விட்டோ மம்மா!
அடித்தகை அணைக்கும் என்ற
ஆன்றோர்சொல் பொய்யாக் காமல்
பிடித்தகை விடாது காத்தே
பிழைபொறுத் தருள்வாய் அம்மா!

No comments: