திருமுறை காட்டும் நெறி
கவிஞர் நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
இந்தியா.
பாரதநாடு பழம்பெருநாடு மகான்களும் சித்தர்களும் தோன்றிய நாடு.ஞானிகளும் தவசிகளும் வாழ்ந்த நாடு. அந்நாட்டில் தோன்றிய ஆன்றோர்களும் சான்றோர்களும் மக்களை நெறிப்படுத்த பல வழிகளில் முயன்றனர். அவர்களின் முயற்சியில் முகிழ்த்ததே மதம். அவர்கள், மதத்தின்வழி மக்களைக் காத்திட முனைந்தனர். மறைகளைக் கற்பித்தனர்.மறைகளைப் போற்றிடக் கதைகளைப் புனைந்தனர்.காவியங்களை இயற்றினர். மக்களின் கடமைகளை உணர்த்தினர். இவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த ஆன்றோர்களால் முதலில் தோற்றுவிக்கப்பட்ட மதம் இந்துமதம். அது ‘தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்’ அறியாத பழமை வாய்ந்தது. ஒருகாலத்தில் பாரத நாடு முழுவதும் இந்துமதம் மட்டுமே பரவியிருந்தது. அம்மதத்தைப் பின்பற்றிய இந்திய மக்கள், அன்பினை ஓம்பினர். அறநெறி ஒழுகினர். சிந்துவெளி நாகரிகமும் இந்து மதத்தையே சார்ந்திருந்தது. அத்தகைய புண்ணிய பூமியில் அந்நியர் நுழைந்தனர். பல புதிய மதங்களைப் புகுத்தினர். பண்பாட்டைக் குலைத்தனர். இந்து மதத்தை அழிக்கப் பல வழிகளிலும் முயன்றனர். ஆதிக்க வெறி கொண்டு அடக்கி ஆளவும் செய்தனர். ஆயினும் இந்துமதம் இன்றளவும் அழியாது நின்று நிலைத்திருக்கிறது. இதற்குக் காரணம் அவ்வப்பொழுது தோன்றிய சமயச் சான்றோர்களேயாவர். பிற மதங்களெல்லாம் இல்லறத்தை வெறுத்து, துறவறத்தைக் காட்டியபொழுது, இந்துமதம் இல்லறமும் துறவறமும் இணைந்த நெறியைக் காட்டியது. அதற்காக அச்சமயச் சான்றோர்கள் தேவாரம் இசைத்தனர். திருவாசகம் ஓதினர்;திருமந்திரம் அருளினர். திருத்தொண்டர் பெருமைகளைப் பாடினர்.அவர்களின் பாடல்கள் பன்னிருதிருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அத்திருமுறைகள் எதனை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன? என்பதற்கான விடையைக் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
எல்லாவற்றிற்குமான அடிப்படை:
எல்லாச் சமயங்களும் தனி மனித ஒழுக்கத்தையே பேணுகின்றன. ஆயினும் அதன் குறிக்கோள் சமுதாய முன்னேற்றமே. மனிதன் தன்னல வட்டத்திற்குள் சிக்கிச் சுழன்று உழன்று கொண்டிருக்கிறான். சமயம், அவனை நல்வழிப்படுத்தி, ‘உலகம் வாழ வாழ்வதே உண்மையான வாழ்வு’ என்பதை உணர வைக்கின்றது. தனி மனிதனை முன்னேற்றி, அவன் மூலமாகச் சமுதாயத்தை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. அத்தனிமனித முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது, அவன் செய்யும் தொழிலாகும். அத்தொழில்மட்டும் அவனை முன்னேற்றி விடுகிறதா? என்றால் இல்லை. அவன் வாழ்க்கையை வளப்படுத்தி, அவனை உயர்த்துவதற்கு வேறொன்றும் தேவைப்படுகிறது. அது, அவன் செய்யும் தொழிலில், ஒரு பகுதியை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வாகும்.
இந்த அர்ப்பணிக்கும் உணர்வைப் பெற, எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். இவ்வடிப்படை உணர்வைப் பெற்றுவிட்டால், நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டத் தொடங்கி விடுவோம். அதன்மூலம் செய்யும் தொழிலை நேசிக்கவும், அதை ஈடுபாட்டுடன் செய்ய முற்படவும், பி;ன்னர் அத்தொழிலையே தொண்டாகப் போற்றிப் பணியாற்றவும் தொடங்கிவிடுவோம். இதனால் தனிமனிதன் முன்னேறுவதும், அவன்வழி சமுதாயம் முன்னேறுவதும் சாத்தியமாகி விடுகிறது. எனவே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது, எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்வதும், அவ்விறைவன்மீது அன்பு செலுத்துவதுமேயாகும். இதனையே நம் சமயச் சான்றோர்கள் தம் பாடல்கள் முழுவதும் இழையோடச் செய்திருக்கின்றனர்.
திருமுறை காட்டும் நெறி:
சமயச் சான்றோர்கள் இறைவனை அடைதற்குரிய நெறிகளாhக இரண்டு நெறிகளைக் கூறுகின்றனர். அவை அறிவுநெறி, அன்புநெறி எனும் இரண்டேயாம். இவற்றை வடநூலார் ஞானமார்க்கம், பக்திமார்க்கம் என்பர். அறிவுநிலை வேறு. அன்புநிலை வேறு. மதிநலத்தாலும் நூலறிவாலும் பெறப்படுவது அறிவுநிலை. தம்மைப் போல் பிறரும் இன்பமாக வாழவேண்டும் என்ற எண்ணம்கொண்டு, தம்முடைய இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல், மற்றவர் துன்பத்தைப் போக்குதலே நோக்கமாகவும், மற்றவர்க்குத் தொண்டாற்றி வாழ்தலையே தம் பெருநோக்காகவும் கொண்டொழுகுதலே அன்புநிலை. இவற்றுள் அறிவுநெறி கற்றறிந்த சான்றோர்களால் மட்டும் பின்பற்றப்படுவது. அன்புநெறி கற்றவர்களாலும் கல்லாதவர்களாலும் பின்பற்றப்படுவது. அறிவுநெறி கடுமையானது. அன்புநெறி எளிமையானது. எனவே எல்லாராலும் பின்பற்றப்படுவதும், தமிழர்களால் தலைசிறந்ததாகக் கொள்ளப்படுவதும் அன்புநெறியே ஆகும்.
அன்பு என்பது ஆன்மாவின் இயற்கைப்பண்பாகும். அதனாலேயே திருவள்ளுவர், ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்றார். அவ்வியற்கைப் பண்பாகிய, அன்பைக் கொண்டே இயற்கை இன்பமாகிய இறைவனை அடையலாம் என்பது நம் திருமுறைகள் காட்டும் அன்புநெறியாகும். பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்த நாயன்மார்களின் பாடல்கள் முழுவதும் இவ்வன்புநெறியே நிறைந்திருப்பினும், அவையனைத்தையும் இச்சிறிய கட்டுரையில் காட்டல் இயலாதாகையால், பதச்சோறாக ஒரு சிலவற்றை மட்டும் இங்குக் காட்டுவாம்.
திருமுறை காட்டும் அன்பு நெறி:
அன்பு என்பது காணவும் இயலாத, காட்டவும் முடியாத பொருள்களுள் ஒன்று. ஆனால் அன்புடையார்தம்; செயலிலிருந்து அதனை உணர முடியும். அதனாலேயே மாணிக்கவாசகர், ‘பால்நினைந் தூட்டும் தாயினும்; சாலப் பரிந்து’ என்று அன்பின் வெளிப்பாட்டினைத் தாயின் கருணையோடு இணைத்துக் காட்டினார். அன்பு என்பது உள்ளத்துணர்வு. அகத்தின் அழகைக் காட்டும் முகத்தைப் போல, அன்புடையாரின்; உள்ளத்துணர்வுகளை நம் கண்களே கண்ணீரால் காட்டிவிடும் என்பதனை விளக்கவே திருவள்ளுவர், ‘அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்’ என்றார்.
உலகமெலாம் அன்பு என்பதைக் காதல், பாசம், விருப்பு, நாட்டம், பற்று, ஈடுபாடு என்ற பொருள்களில் மட்டுமே காண்கின்ற நிலையில், நமது சான்றோர்கள், அன்பைத் தெய்வமாகவே கண்டனர். திருமூலர், அன்பும் சிவமும் வேறுவேறல்ல என்றும், இரண்டும் ஒன்றே என்றும், இரண்டையும் வேறுபடுத்திக் காண இயலாது என்றும், அவ்வாறு காண முயற்சிப்பவர்களை,
“அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலார் ” ( திருமந்திரம்.. 270)
என்றும் சாடினார். எனவே அன்பும் சிவமும் ஒன்றென்பதும், அன்பே சிவம் என்பதும் அறியப்படுகின்றது. அதனாலேயே திருவாசகம் அருளிய மணிவாசகர்;,
“ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே
(மணிவா. கோயில் திரு. .388)
என்றும்,
திருஞானசம்பந்தர்,
‘அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை’
(திருஞான. தேவாரம்.. 75)
(திருஞான. தேவாரம்.. 75)
என்றும்,
திருநாவுக்கரசர்,
‘அன்பனை அடியார் இடர்நீக்கியைச் செம்பொனை’
(திருநா. தேவாரம்.622)
(திருநா. தேவாரம்.622)
என்றும்,
சுந்தரர்,
‘விடையின்மேல் வருவானை, வேதத்தின் பொருளானை,
அடையில் அன்புடையானை’
(சுந்தரர் தேவாரம். 872)
(சுந்தரர் தேவாரம். 872)
என்றும் இறைவனை விளிக்கின்றனர்.
அன்பே வடிவான இறைவனைக் காண விரும்புவோர் தாமும் அன்புருவாதல் வேண்டும். அங்ஙனம் அன்புருவானவர்களே அடியார்கள். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூற வந்த சேக்கிழார், கண்ணப்பர் வரலாற்றை அன்பின் வரலாறாகவே நமக்குக் காட்டுகின்றார். கன்னிவேட்டைக்குச் சென்ற கண்ணப்பர் காளத்திமலையில் சிவலிங்கத்தைக் கண்டார். தாம் அன்புருவான நிலையில் தாம் வேறு, சிவம் வேறு என்பதை மறந்தார்É சிலையாக நின்ற சிவலிங்கத்தில் சிவபெருமானையே கண்டார். சிவலிங்கத்தில் கண்ட குருதியைக் கண்டு, தன் நிலை மறந்தார். மருந்தாகத் தன் கண்ணையே அப்புவதென்று முடிவு செய்தார்É தன் கண்ணையே பெயர்த்து எடுக்கும்பொழுது தோன்றிய வலியையும் மறந்தார்É அறிவுநிலையிலிருந்து பிறழ்ந்தார். அன்புநிலையில் கலந்தார். இறைவனின்; துன்பம் துடைத்தலே தன் கடனெனக் கொண்டார். இவ்வாறு கண்ணப்பர், அன்பின் வடிவமாகவே நிற்றலைக் காட்ட வந்த சேக்கிழார் இறைவன் வாயிலாகவே,
“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும
அவனுடைய நிலைஇவ்வா றறிநீ….”
(சேக். திருத். புராணம்.. 806)
என்று காட்டினார். மணிவாசகரும், அன்பின் வடிவமாக நின்ற கண்ணப்பர் வேறு, அன்பு வேறு எனக் கூறாமல்,
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”
(மணிவா.திருக்கோத்தும்பி. 218)
என்றே உணர்த்தினார்.
இத்தகைய உண்மையான அன்பு நம் உள்ளத்தில் குடிபுகுமானால், இறைவன் நம்மீது இரக்கம் கொள்ளாவிட்டாலும், இறைவன் நம் துன்பத்தைக் களையாவிட்டாலும், நாம் செல்ல வேண்டிய வழியை இறைவன் காட்டாவிட்டாலும் நாம் அவன்மீது இடையறா அன்பு கொண்டு, நம் நெஞ்சம் அவர்க்கென வாழத் தொடங்கிவிடும் என்பதனை,
‘இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும்; எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு’
(அற்புதத்திருவந்தாதி .2)
என்றும்,
‘அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு)
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்’
(அற்புதத்திருவந்தாதி. 3)
என்றும் காரைக்காலம்மையார் பாடியுள்ளமை உன்னி உன்னி உணரத்தக்கதாகும்.
இறைவனிடம் கொள்ளும் இத்தகைய அன்பையே பக்தி என்று வடநூலார் குறிக்கின்றனர். அப்பக்திக்கு இலக்கணம் கூற வந்த வடநூலார் ‘பகவ தாகார விருத்தி பக்தி” என்று கூறுவர். பக்தி செய்பவருடைய எண்ணமெல்லாம் இறைவனுடைய வடிவமாகவே ஆகிவிடும் என்பதே அதன் பொருளாம். இதனையே திருவள்ளுவரும், “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்É அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு” என்று அருளினார். இத்தகைய ஆழ்ந்த பக்தி கொண்டதனாலேயே வள்ளலாரும்,
‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுத
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவ
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புறு வாம்பர சிவமே”
(அருட்பா. பரசிவ வணக்கம்.)
என்று இறைவனைத் துதிக்கின்றார்.
இவ்வாறு இறைவன்மீது உண்மையான அன்புகொண்ட அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், இன்பநிலை தானே வந்து நம்மை எய்தும் என்று தாயுமானவர் உறுதி கூறுகின்றார்.
‘அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கிவிட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே
(தாயு.பாடல்கள். பராபரக்கண்ணி.. 155)
எனவே, அன்பே சிவம் என்றும், அன்பின் உருவமே இறைவன் என்றும், உண்மையான அன்பு கொண்ட அடியவர்களுக்குச் செய்யும் தொண்டே இறைத்தொண்டு என்றும் சைவ சமயச் சான்றோர்கள் அனைவரும் கூறியுள்ளமை, நாம் அவர்களின் பாடல்களைப் பாடிப் பரவுவதோடு, அவர்கள் காட்டியுள்ள அன்புநெறியில் வாழ்ந்து இறையருளைப் பெற வேணடுமென்பதேயாம்.
“அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்”
(திருகளிற்றுப்படியார். 55)oooooooooooooooooooo
(மலேசிய கோலாலம்பூரில் 27, 28, 29-05-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற பன்னிரு திருமுறைகள் மாநாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.)
No comments:
Post a Comment