அட்சரம் மாறாத அல்-குர்ஆன்
(தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 08,09,10-07-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 ஆவது மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை)
கவிஞர் நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
இந்தியா.
அரபு நாட்டில் பிறந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இறைநெறியை ஒரு மார்க்கமாக கொண்டார்கள். அம்மார்க்கத்தை வழிநடத்திய காலங்களில்,இறைவனால் அவருக்கு அருளப்பட்ட வசனங்களையெல்லாம்; தம் மக்களுக்கு வேதமாகத் தந்தார்கள். அது அல்-குர்ஆன் என்று வழங்கப்படுகிறது. அதனைத் தமிழில் நாம் திருக்குர்ஆன் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் தொடக்கத்திலேயே முழுமையாக எழுதப்பட்ட நூலன்று. அவ்வப்பொழுது ஒவ்வொரு வசனமாக இறைவனால் இறக்கியருளப்பட்டது. அதன் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இசுலாமிய மார்க்கப் போராட்டக் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வு காண வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளில் அது இறைவனால் பெருமானுக்கு அருளப்பட்டது. மனித குலத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே திருக்குர்ஆனாகும். திருக்குர்ஆன் நபி பெருமானாரால் (ஸல்) இயற்றப்பட்ட நூலன்று. இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத ‘உம்மி’யாகவே இருந்தனர். இறைவன் வானவர் ஜிப்ராயீல் (அலை) வாயிலாக நபிகளாருக்குத் தெரிவித்த செய்திகளின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும்.
அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு, அத்திருக்குர்ஆன் அரபு நாடுகளிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் பரவிய திருக்குர்ஆன் நாளடைவில் பல நிலைகளில் ஓதப்பட்டது. அதில் பல திரிபுகளும் ஏற்பட்டன. அதனால் அண்ணலாருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலீபாக்கள் (ரலி) பெரிதும் கலக்கமுற்றனர். திருக்குர்ஆன் வசனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ஓதப்படவும், எதிர்காலத்தில் அட்சரம் (எழுத்து மற்றும் ஒலி) மாறாது நிலையாக இருக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் பெருமுயற்சியின் பயனாகத் திருக்குர்ஆன் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் அவ்வேதம்; அருளப்பட்டு 1432 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரே மாதிரியாக இன்றளவும் ஓதப்பட்டு வருகின்றது. இவ்வாறு அட்சரம் மாறாது நிலைத்து நிற்கும் அல்-குர்ஆனின் வரலாற்றை இசுலாம் அல்லாதவர்களும்;; அறிந்துகொள்ளும் வகையில் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இறைத்தூதர்:
எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தைப் படைத்தான். மனிதர்களைத் தோற்றுவித்தான்; அவர்களுக்கு உணரவும், சிந்திக்கவும், அறியவும் வேண்டிய ஆற்றலை அளித்தான். கீழ்ப்படிவதற்கும்ää அடிபணிவதற்கும்ää வணங்குவதற்கும் உரியவன் இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தினான்;தன்மீது நம்பிக்கை கொண்டவர்களை நல்லடியார்களாகத் தேர்ந்தெடுத்தான். அவர்களைத் தன் தூதுவர்களாக நியமித்தான். தன் செய்திகளையும் கட்டளைகளையும் அவர்களிடம் அனுப்பினான். அத்தகைய இறைத்தூதர்கள் எல்லா நாடுகளிலும் தோன்றினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல இறைத்தூதர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஆயிரமாயிரம் எண்ணிக்கையில் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இதுவரை 124 000 இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றது. அவர்களுள் சிலரிடம் இறைவன் தன் வழிகாட்டுதல்களை அருளினான். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் யார் மீது இறக்கியருளப்பட்டதோ அவர்கள்; நபி எனப்பட்டார்கள்;. மோசசு நபி என்பாரிடம் தவுறாத் வேதத்தையும், தாவூத் நபி என்பாரிடம் ஸபூர் வேதத்தையும், ஈசா நபி என்பாரிடம் இன்ஜீல் வேதத்தையும் இறைவன் அருளினான். ஆயினும் காலம்; செல்லச்செல்ல மக்கள் தவறான பாதைகளில் செல்லத் தலைப்பட்டனர். இறைவன் அருளிய நெறிமுறைகளிலிருந்து (தீன்) வழுவித் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இறைவன் வகுத்த நியதிகளை விட்டுவிலகித் தம் இச்சைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றவகையில் தம் வாழ்வின் சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு இறைவன் படைத்த இனிய உலகத்தை அநீதியாலும் கொடுமைகளாலும் நிரப்பினர். இதனால் காலப்போக்கில் பல பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர். எனவே இறைவன் இறுதியாக மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக அரபு நாட்டில் தோற்றுவித்தான். அவர்கள் முஹம்மது நபி (ஸல்) என்றழைக்கப்பட்டார்கள். அவர்களிடம் இறைவன் தன் வழிகாட்டுதல்களாக நான்காவது வேதமாகிய புறுக்கான்; வேதத்தை அருனிளான். அதுவே திருக்குர்ஆன் என்று அழைக்கப்படுகின்றது.
முஹம்மது நபி:
முந்திய நபிமார்கள் எந்தப் பணிக்காக அனுப்பப்பட்டார்களோ, அதே பணிக்காக அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவன் அனுப்பி வைத்தான். முஹம்மது நபி அவர்கள் இறைவன் அளித்த மார்க்கத்தை (இசுலாத்தை) மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்கள். அதனைத் தலைமையேற்று நடத்தத் தொடங்கினார்கள். வாழ்வின் உண்மைகளைப் பற்றி மனிதன் ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான எண்ணங்களைப் போக்கி, அவர்களின் உள்ளத்தில் அடிப்படை உண்மைகளை வேரூன்றச் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டார்கள்.
தொடக்கத்தில் பெருமானார் தாம் வாழ்ந்த மக்காவில் இசுலாத்தை ஒரு மார்க்கமாக நடத்திச் செல்ல மக்களிடம் அழைப்பு விடுத்தார்கள். தம் இனிய அறிவுரைகளால் மக்களை நல்வழிப்படுத்த முயன்றார்கள். பெருமானாரின் அழைப்பையேற்றுச் சிலர் இசுலாமிய மார்க்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டாhகள்;. பலர் சுயநலத்தாலும் அறியாமையாலும் மூதாதையர்களின் வழிமுறைகளில் கொண்ட பற்றினாலும் அண்ணலாரின் அழைப்பையேற்கத் தயங்கினார்கள். அவர்களுள் சிலர், பெருமானாரை எதிர்க்கவும் தலைப்பட்டார்கள். இதனால் நாளடைவில் இசுலாமிய மார்க்கத்தினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே போராட்டம்; உருவானது. எதிர்ப்பாளர்கள் இசுலாம் மார்க்கத்தை நசுக்கிவிட முயன்றனர். அம்மார்க்கத்தை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் செயல்பட்டனர். அம்மார்க்கத்தாருடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ளாதிருக்கப் பொய்ப்பிரச்சாரம், குற்றச்சாட்டுகள், ஐயப்பாடுகளைக் கிளப்புதல், ஆட்சேபனைகள் என அனைத்துத் தடைகளையும் ஏற்படுத்தினர். அண்ணலாரின் பேச்சைக் கேட்காதவாறு மக்களைத் தடுத்தனர். இசுலாத்தை ஏற்றுக் கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர். அதனால் பெரும்பாலான மக்கள் அச்சமுற்று மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்றனர். மக்கா நகரில் பதிமூன்று ஆண்டு காலம் பல இன்னல்களைச் சந்தித்து வந்த இசுலாமிய மார்க்கம், வீறு கொண்டு எழுந்தது. தன் மார்க்கச் செயல்பாடுகளை இணக்கமான மதீனாவிற்கு மாற்றியது. நபிகளாரின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தம் சொத்து சுகங்களையெல்லாம் துறந்து, மதீனாவிற்குக் குடிபெயர்ந்தனர்.
பெருமானாரின் அழைப்பையேற்றுச் செயல்பட்டு வந்த உம்மத்தே முஸ்லிமா குழு அதிகாரப்பூர்வமான ஆட்சியை மதீனாவில் நிறுவியது. அங்கும் நயவஞ்சகர்கள் சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர். அவர்களின் சதியால் பல இடையூறுகள் ஏற்பட்டன. இத்தகைய இக்கட்டான காலத்தில் இறைவன் தன் வழிகாட்டுதல்களை நம் பெருமானாருக்கு அருளினான். இறைவனிடமிருந்து பெற்ற அண்ணலாரின் அருளுரைகளை ஏற்றுக் கொண்டு, உம்மத்தே முஸ்லிமா குழு மதீனாவில் பத்தாண்டு காலப் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்திற்குப் பிறகு, உம்மத்தே முஸ்லிமா குழுää அரபு நாடு முழுவதையம் தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது.
வஹி எனப்படும் திருவசனம்:
எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நபிகளாரின்மீது இறக்கியருளப்பட்ட வழிகாட்டுதல்கள் (திருவசனங்கள்) வஹி எனப்பட்டது. இவ் வஹி எனப்படும் சொல்லுக்கு இரகசியமாக அறிவித்தல், மறைவாக இருந்து அறிவித்தல், உள்ளத்தில் ஒரு செய்தியைப் போட்டுவிடுதல் எனும் பொருள்கள் கூறப்படுகின்றன. எனவே வஹி என்பதற்கு அல்லாஹ்வின் வாக்கு எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாக இருக்கலாம்.
இத்தகைய வஹி, இறைவனால் நபிகளாரின் உள்ளத்தில் இறக்கி வைக்கப்படுவதென்பது ஒரு சாதாரண செயலல்ல. இறைவனால் அருளப்பட்ட ஓர் அருட்கொடை போன்றது. அண்ணலார் உள்ளத்தில் வஹி இறக்கியருளப்படும்பொழுது, உள்ளத்தின் ஆற்றல்களை ஒன்று திரட்டி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடும் நிலை அவர்களிடம் காணப்படும். அவர்கள் சுற்றுச்சூழலுடன் தொடர்பு அற்றவர்களாகிவிடுவார்கள். வெளிப்படையான புலனுணர்வுகள் எதுவும் துணை போகாது. முகம் சிவந்துவிடும். அண்ணலாரின் நரம்புகள் மீதும் கடுமையான சுமை ஏற்பட்டிருக்கிறது என்று தெரியும். அண்ணலார் மிகவும் சோர்ந்து போவார்கள். வஹி இறங்கும்பொழுது, கடுமையான குளிர் காலமானாலும் அண்ணலாரின் நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடும். இவ்வாறு மேலோங்கிய, இறைவன் இறக்கியருளிய வஹியை உள்ளத்தில் பெற்றுக் கொள்ளும் ஆற்றல் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டிருந்தது.
திருக்குர்ஆன் இறங்கியது:
இசுலாமிய மார்க்கப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. இப்போராட்டக் காலம் முழுவதும் வஹி நபிகளாரிடம் இறங்கிக் கொண்டேயிருந்தது. இறைவனால் இறக்கியருளப்பட்ட திருவசனங்களால் பெருமானார் மக்களை நல்வழிப்படுத்த முயன்றார்கள். மக்காவில், தொடக்கத்தில் பலர் அதற்குச் செவி சாய்க்கவில்லை. சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து வசனங்கள் அருளப்பட்டுக்கொண்டேயிருந்தன. இந்நிலையில் சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு வளர்ந்தது. இப்புதிய இசுலாம் மார்க்கத்தை நசுக்கப் பலரும் பல வழிகளில் முயன்றனர். எதிர்ப்புகளுக்கிடையே மார்க்கமும் வலிமை பெற்றுக் கொண்டே வந்தது. இத்தகைய சோதனையான காலத்தில் இறைவனின் வசனங்கள் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தன. எதிர்ப்பு மிகவும் பயங்கரமான நிலையை அடைந்தபொழுது, இறைத்தூதரும் அவருடைய தோழர்களும் இணக்கமான சூழ்நிலை இருந்த மதீனாவை நோக்கிச் சென்றனர். அங்கே ஒரே இரவில், இசுலாமிய அரசுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. மதீனாவிலும் நயவஞ்சகர்கள் தொடர்ந்தனர். அவர்கள் செய்த சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது.
மதீனாவில் அரசு நிறுவப்பட்டவுடன் நீண்ட வசனங்கள் இறங்கலாயின. மக்காவிலும், மதீனாவிலும் ஏற்பட்ட இச்சோதனை மிகுந்த இருபத்துமூன்று ஆண்டு காலத்தில் இறைவனால் அருளப்பட்ட திருவசனங்களால் பெருமானார் மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்கள். மார்க்கம் எவ்வாறு போற்றப்பட வேண்டும்? அரசு எவ்வாறு செயல்பட வேண்டும்? பண்பாடும் தூய்மையும் கொண்ட சமூகம் எப்படி உருவாக்கப்பட வேண்டும்? வாழ்வின் பல்வேறு நிலைகளில் மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? எவ்வித நியதிகளின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்? Nghன்ற வி\யங்களையெல்லாம் தெளிவாக அறிவுறுத்திவந்தார்கள். இசுலாமிய மார்க்கம் தொடங்கி, அது எந்தெந்தச் சூழ்நிலைகளில் வளர்ந்ததோ, அதன் தேவைகளுக்கேற்பவும்,அதன் சூழ்நிலைக்கேற்பவும் திருக்குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டுக் கொண்டே வந்தது. பல சமயம், சிக்கலான பிர்ச்சனைகள் எழும்பொழுது,இறைவழிகாட்டுதல் (வஹி) வரும்வரை அண்ணலார் காத்திருக்க வேண்டியிருந்தது. தொடக்கத்தில் மக்காவில் சிறு சிறு அத்தியாயங்களில் இறங்கிய வஹி, பின்னர் மதீனாவில் அரசு நிறுவப்பட்டவுடன் நீண்ட அத்தியாயங்களாக இறங்கலாயின. அதில் மனிதனின் முழுவாழ்வுக்கும் தேவையான எல்லா விதிமுறைகளும் அருளப்பட்டன. இவ்வாறு இருபத்துமூன்று ஆண்டுகள் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும்.
எழுதி வைக்கப்பட்டன:
அண்ணலாரின் உள்ளத்தில் இறைவசனம் இறங்கியவுடன், பெருமானார் காதிப் (எழுதுபவர்) ஒருவரை அழைத்து அதனை முழுக்கச் சரியாக எழுதும்படிச் செய்துவிடுவார்கள். அப்பொழுது காதிப்கள், அவற்றைத் தோல் துண்டுகளிலேயும். எலும்புகளிலேயும், மரப்பட்டைகளிலேயும், இலைகளிலேயும் எழுதிவைத்தனர். அண்ணலாருக்கு இறைவசனம் இறங்கியதும் தம் தோழர்கள் பன்னிருவரில் (காதிப்கள்) எவரையாவது அழைத்து அதை எழுதச் செய்து, அதை எந்த அத்தியாத்தில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் கூறிவிடுவார்கள். பின்னர் அதே வரிசைப்படி பெருமானார் அவர்கள் தொழுகையிலும் இதர நேரங்களிலும் அவ்வசனங்களை ஓதி வந்தார்கள். பெருமானாரின் தோழர்கள் அதை உடனுக்குடன் மனனம் செய்தும் வந்தனர். பெருமானார் காலத்திலேயே, நூற்றுக்கணக்கானவர்கள் திருக்குர்ஆனை இதயத்தில் செதுக்கி வைத்தது போல மனனம் செய்து ஓதும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். அவர்கள் ஹாஃபிள்கள் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்) என்றழைக்கப்பட்டனர்.
பெருமானார் மறைவுக்குப் பிறகு, ஒரு சிலர், ‘நாங்களும் தீர்க்கதரிசிகளே! எங்கள் உரைகளும் இறை வசனங்களே!’ என்று கூற ஆரம்பித்தனர். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இக்குழப்பத்தை நீக்கப் பல போர்களும் நடைபெற்றன. அப்போர்களில் பல ஹாஃபிள்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள். இந்த ஹாஃபிள்களின் தியாகமே, திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.
கலீபாக்களின் முயற்சி:
அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு, பெருமானாருடன் உடனுறைந்து வாழ்ந்துவந்த கலீபாக்கள் (ரலி) இசுலாமிய அரசைக் கட்டிக் காத்து வந்தார்கள். அவர்களில் ஹசரத் அபூபக்கர், ஹசரத் உமர், ஹசரத் உஸ்மான், ஹசரத் அலீ எனும் நால்வரும் முக்கியமானவர்கள். நம் தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் வழங்கப்படும் பேச்சுத் தமிழில் உள்ள மாறுபாட்டைப் போல, அரபுநாடுகள் முழுவதிலும் பேசப்பட்டு வந்த அரபு மொழியிலும் பல மாறுபாடுகள் இருந்தன. இதனால் அரபு மொழியிலும், அரபு மொழியுடன் தொடர்பு கொண்டிருந்த பிற மொழிகளிலும் திருக்குர்ஆன் பல நிலைகளில் ஓதப்பட்டு வந்தது. இதனால் மாவட்டம்தோறும், மாநிலந்தோறும், நாடுகள்தோறும் ஓதப்பட்டுவரும் திருக்குர்ஆனில் பல மாற்றங்கள் இருந்தன. இதனைக் கண்ட ஹசரத் உமர் அவர்கள் பெரிதும் கவலை கொண்டார்கள். திருக்குர்ஆன் ஓதப்படுவதில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தை ஹசரத் அபூபக்கர் அவர்களிடம் வற்புறுத்தினார்கள். பெருமானார் தந்த திருக்குர்ஆன் பற்றிய பிரச்சனையில் முதலில் தயக்கம் காட்டிய அபூபக்கர் அவர்கள்ää பின்னர் உமர் அவர்களின் திட்டத்திற்கு உடன்பட்டார்கள்.
அட்சரம் மாறாத திருக்குர்ஆன்:
திருக்குர்ஆனை ஒழுங்குபடுத்தும் பணிக்காகப் பெருமானாரின் உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜைத்பின் ஃதாபித் அன்ஸாரி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. பெருமானார் விட்டுச் சென்ற சுவடிகளைத் தொகுத்தல், பெருமானாரின் கண்ணியம் மிகுந்த தோழர்களிடம் உள்ள சுவடிகளைத் திரட்டுதல், மனனம் செய்து வைத்துள்ள ஹாஃபிள்களின் உதவியைப் பெறுதல் எனும் மூன்று நிலைகளில் திருக்குர்ஆனின் வசனங்கள் முழுவதையும் ஒப்புநோக்கி, ஆதாரப்பூர்வமான, சரியான வசனங்களைப் பதிவு செய்தல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் திருக்குர்ஆனின் முழுமையான ஒரு பிரதி தொகுக்கப்பட்டது. அது உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டு, மக்கள் அனைவரும் இந்த ஆதாரப்பூர்வமான தொகுப்பிலிருந்து நகல் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அல்லது தங்கள் சுவடிகளை இதனுடன் ஒப்பு நோக்கித் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஹசரத் அபூபக்கர் அவர்களின் ஆணையை ஏற்று, ஹசரத் உஸ்மான் அவர்கள் இசுலாமிய நாடுகள் அனைத்திற்கும் அதிகாரப்பூர்வமான திருக்குர்ஆனின் படியை அனுப்பி, இதிலிருந்து எழுதப்பட்ட வசனங்களே ஓதப்பட வேண்டும் என்றும், பிறவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டுமென்றம் ஆணையிட்டார்கள். இன்று நம்முடைய கரங்களிலே இருக்கும் திருக்குர்ஆன், அன்று உஸ்மான் அவர்கள் இசுலாமிய உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பிய பிரதிகளுக்கு முற்றிலும் சரியான நகலேயாகும். இவர்களின் பெருமுயற்சியால்தான் திருக்குர்ஆனின் வசனங்கள் 1432 ஆண்டுகளுக்கு மேலாகியும் அட்சரம் பிசகாமல் இன்றளவும் ஓதப்பட்டு வருகின்றன. பாடவேறுபாடு இல்லாத ஒரே வேதமாக உலகம் முழுவதும் இருந்து வருகின்றது. உலகின் எம்மூலையில் ஓதப்படும் திருக்குர்ஆனும், உலகின் எம்மூலையில் விற்கப்படும் அரபு மொழியிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களும் அட்சரம் மாறாமல் இருந்து வருவதற்கு இம்மாபெரும் கலீபாக்களின் முயற்சிகளே முழுமுதற் காரணங்களாகும்;.
எழுத்தெண்ணிக் காக்கப்படும் வழிமுறை:
திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயங்கள், திருவசனங்கள், சொற்கள், எழுத்துக்கள், கோடுகள்,புள்ளிகள் என அனைத்தும் கணிக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆனின் உட்பிரிவுகள்:
1. மன்ஸில்கள் 7
2. ஜூஸ்வுகள் என்னும் பாகங்கள் 30
3. ஸ_ராக்கள் என்னும் அத்தியாயங்கள் 114
4. ருகூவுகள் 588
5. ஆயாத் என்னும் வசனங்கள் 6666
(கூஃபா நகர அறிஞர்களின் கணக்குப்படி வசனங்களின்
எண்ணிக்கை 6236 ஆக குறிக்கப்பட்டுள்ளது.)
6. கலிமாத் என்னும் சொற்கள் 76,430
7. ஹ_ருஃப் என்னும் எழுத்துக்கள் 3.26,671
8. ஜபர் என்னும் அகர உயிர்க்குறிகள் (மேற்கோடு) 4,53,143
9. ஜேர் என்னும் இகர உயிர்க்குறிகள் (கீழ்க்கோடு) 39,582
10. பே~ஷ் என்னும் உகர உயிர்க்குறிகள் (மேல்வளைவுக்;கோடு) 8,804
11. நுக்தா என்னும் புள்ளிகள் 1,05,684
12. மத்து என்னும் நீட்டல் குறிகள் 1,771
13. ஷத்து என்னும் அழுத்தல் குறிகள் 1,274.
இவ்வாறு திருக்குர்ஆனில் உள்ள அனைத்து வகை அம்சங்களும் எழுத்தெழுத்தாக எண்ணி காக்கப்பட்டுவருவதால், இறைவன் மூலமாக அண்ணலார் பெற்றுத் தந்த திருக்குர்ஆனில் எவ்வித மாற்றமும் நடைபெற வாய்ப்பில்லாமல் இன்றளவும் நிலைத்து வாழ்ந்து வருகின்றது.
முடிவுரை:
மிகப் பழமையான ஒரு வேத நூல், பல காலமாக ஓதப்பட்டு வரும்பொழுது, அதில் காலந்தோறும் மாற்றங்களும் திரிபுகளும் ஏற்படுவது இயற்கை. ஆனால் 1432 ஆண்டுகளுக்கும் மேலாக ஓதப்பட்டு வரும் திருக்குர்ஆனில் எவ்வித மாற்றமுமில்லாமல் எழுத்திலும் ஒலியிலும் கூட ஓர் அட்சரமும் பிசகாமல் காத்து வருவதென்பது ஓர் எளிய செயலல்ல. அதனைச் சாதித்துக் காட்டி வரும் இசுலாமும், இசுலாமியர்களும் அதற்காக எத்துணை மனஉறுதியுடனும், கட்டுப்பாடுடனும் செயலாற்றி வருகின்றார்கள் என்று எண்ணும்பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காகப் பாடுபட்டு ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்திய கலீபாக்கள் முதற்கொண்டு அனைவரையும் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் திருக்குர்ஆனின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக, இசுலாமியர்கள் எந்த நாட்டவராயினும் எந்த மொழியினராயினும் அது அல்லாஹ்வினால் அருளப்பட்ட அரபு மொழியிலேயே ஓதப்பட்டுவர வேண்டும் என்பதையும் கடைப்பிடித்து வருவதை அறிந்து, வியந்து, மகிழவும், நெகிழவும் வேண்டியதாயுள்ளது.
“இது அல்லாஹ்வின் வேதமாகும்.
இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.” (2.2)
“(முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டுவர வேண்டும் என்பதற்காக!” (14:1-2)
oooooooooooooooo
இக்கட்டுரை ஆக்கத்திறகுத் துணைநின்ற நூல்கள்:
1. தர்ஜூமதுல் குர்ஆன் ( அல்லாமா ஆஃகா அப்துல் ஹமீது பாகவி,
தமிழ்மொழி பெயர்ப்பு), 1986.
தமிழ்மொழி பெயர்ப்பு), 1986.
2. தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் (திருக்குர்ஆன் விளக்கவுரை),
அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி,வேலூர், 1993.
அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி,வேலூர், 1993.
3. திருக்குர்ஆன் - I F T வெளியீடு – 13வது பதிப்பு, சென்னை, 2010.
4. அபுல் அஃலா, மொழியாக்கம் குறித்து (கட்டுரை), திருக்குர்ஆன்,I F T வெளியீடு –
13வது பதிப்பு, சென்னை, 2010.
5. அபுல் அஃலா,தோரண வாசல் (கட்டுரை), திருக்குர்ஆன், I F T வெளியீடு –
13வது பதிப்பு, சென்னை, 2010.
6. பேரா.அத்ஹர் ஹ_ஸைன், தலைவாசல் (கட்டுரை), திருக்குர்ஆன், I F T வெளியீடு –
13வது பதிப்பு, சென்னை, 2010.
7. மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி, சொல்லின் பின்னணி (கட்டுரை),திருக்குர்ஆன்,
I F T வெளியீடு – 13வது பதிப்பு, சென்னை, 2010.
8. சிலம்பொலி சு.செல்லப்பனார், நெஞ்சையள்ளும் சீறா,
நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2004.
நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2004.
oooooooooooooooooooo
1 comment:
It's a Good post....
Post a Comment