ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின்
பதிப்பு வரலாறு
நா.இராசசெல்வம்,
தமிழ் விரிவுரையாளர்,
பள்ளிக்கல்வித்துறை,புதுவை அரசு.
புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு பிரஞ்சு அதிகாரிக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் இருந்தார். அம்மொழிப் பெயர்ப்பாளர்களைத் துபாஷ் என்றழைத்தனர். துபாஷ் என்பதற்கு இரு மொழி அறிந்தவர் என்று பொருள். அத்தகைய துபாஷிகளுள், ஆளுநருக்குத் துபாஷியாக இருந்தவர்கள் தலைமைத் துபாஷியாகவும், தமிழர்களின் தலைவராகவும் கருதப்பட்டனர். அவ்வாறு முதன்முதலாக புதுச்சேரிக்குத் துபாஷியாக வந்தவர் லசார் தெ மொத்தோ என்றழைக்கப்பட்ட பூந்தமல்லி தானப்ப முதலியார் ஆவார். அவருக்குப் பிறகு முத்தியப்ப முதலியார், நைனியப்பப்பிள்ளை, குருவப்பப்பிள்ளை, கனகராய முதலியார் எனப் பலரும் துபாஷியாக இருந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததாலும்,கனகராய முதலியார் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் துபாஷியாக இருந்ததாலும், இத் துபாஷ் உத்தியோகத்தை முதலியார் உத்தியோகம் என்றே அழைத்து வந்தனர். அவ்வாறு துபாஷியாக இருந்தவர்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாகவும் இருந்தனர். கிறித்துவர்கள் அல்லாதவர்கள் பிரஞ்சியர் காலத்தில் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள் என்பதும் வரலாறு காட்டும் நிகழ்வுகளாகும். ஆயினும் துய்ப்ளேக்சு ஆளுநராக இருந்தபொழுது, அவருடைய துபாஷியாக கனகராய முதலியார் இருந்த காலத்திலேயே கிறித்துவரல்லாத ஒருவர் தலைமைத் துபாஷியாகப் பணியாற்றி ஆளுநருக்கு அடுத்த நிலையில் பெரும் புகழோடு வாழ்ந்திருந்தார். அவரே ஆனந்தரங்கப்பிள்ளை என்பவர் ஆவார். ஆனந்தரங்கப்பிள்ளைக்கு முன்னரே பலரும் துபாஷியாகப் பணியாற்றியிருந்தாலும், அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிப்பெரும் சிறப்பு ஆனந்தரங்கருக்கு உண்டு. அவர் ஒரு வரலாற்று நாயகராகிப் புதுச்சேரி வரலாற்றிலும், பிரஞ்சிந்திய வரலாற்றிலும், பிரான்சு நாட்டு வரலாற்றிலும் கூட ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். அதற்குக் காரணம் ஆனந்தரங்கப்பிள்ளை 25 ஆண்டு காலத்திற்குத் தொடர்ந்து எழுதி வைத்த நாட்குறிப்பேயாகும். அவருடைய நாட்குறிப்பு, வெறும் நாட்குறிப்பாக மட்டும் அமையாமல் பிரஞ்சிந்திய வரலாற்றிற்கு ஆதாரமாகவும்,18-ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் புதையலாகவும், அக்காலச் சமுதாயத்தைக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் அமைந்துள்ளது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்குறிப்பு, அவருடைய காலத்திற்குப் பிறகு வெகுகாலம் உலகிற்குத் தெரியாமலே இருந்து விட்டது. அது எப்பொழுது வெளிப்பட்டது? அது எவ்வாறு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது? யார் யார் பிரதி எடுத்துக்கொண்டார்கள்? எப்பொழுது அச்சில் பதிப்பிக்கப்பட்டது? யாரால் பதிப்பிக்கப்பட்டது? நாட்குறிப்பின் மூலச்சுவடி இப்பொழுது கிடைக்கப்பெறுகின்றதா? போன்ற செய்திகளைத் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உலகிற்கு அறிமுகமான வரலாறு:
ஆனந்தரங்கருடைய இறுதிக்காலம், புதுச்சேரி வரலாற்றில் ஒரு நெருக்கடியான காலமாகும். அவர் மறைந்த நான்காவது நாளிலேயே புதுச்சேரி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது, கோட்டை கொத்தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, ஊர் சூறையாடப்பட்டது. இதனால் கவலையடைந்த அவரது சந்ததியினர், வீட்டிலிருந்த முக்கிய பொருட்களுடனும், முக்கிய சுவடிகளுடனும் தரங்கம்பாடிக்குச் செல்ல முயன்றனர். புதுச்சேரியை விட்டுக் கடல்வழி பயணம் செல்ல முயல்கையில், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால், தோணியில் பயணத்தைத் தொடர முடியாமல், மழையால் பாதிக்கப்பட்டு இடையிலேயே திரும்பினர். மழைக்குப்பின் மீண்டும் பயணமாகித் தரங்கம்பாடியை அடைந்து பொறையார் எனுமிடத்தில் குடியேறினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புதுச்சேரி மீண்டும் பிரஞ்சுக்காரர் வசமானது. இதனால் 1765-இல் பிள்ளையின் குடும்பத்தினர், தங்களுடன் கொண்டு சென்ற பொருட்களுடன் புதுச்சேரிக்குத் திரும்பினர். அப்பொருட்களுடன் சென்ற ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பும்; புதுச்சேரி திரும்பியது. இவ்வாறு போர்க் காலங்களிலும், மழையிலும் வெயிலிலும் அடிபட்ட நாட்குறிப்பு,அதன்பின் பல ஆண்டுகள் அதன் அருமை உணரப்படாமல் ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலேயே உறங்கிக் கிடந்து விட்டது.
ஆனந்தரங்கர் மறைந்து சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரியில் பிரஞ்சு அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கலுவா மொம்பிரான் என்பவர், ஒருமுறை ஆனந்தரங்கரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றார். ஆனந்தரங்கரின் வாரிசுதாரர்கள் கலுவா மொம்பிரானிடம் வீட்டிலிருந்த பழைய சுவடிகளைக் காண்பித்தனர்; அவை பெரிய கணக்குப் பேரேடுகளையொத்த சுவடிகளாக இருந்தன. தமிழ் அறிந்த கலுவா மொம்பிரான் அவற்றைக் கூர்ந்து நோக்கினார். அவற்றுள் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, அவரது தம்பிமகன் அப்பாவு என்றழைக்கப்பட்ட ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்பு மற்றும் வரலாற்றுத் தொடர்புடைய அரிய சாசனங்கள் பல இருப்பதைக் கண்டார். அது பெரும் வரலாற்றுப் புதையல் என்பதையும் உணர்ந்தார். அவற்றின் அருமையை உணர்ந்த கலுவா மொம்பிரான்,அவர்களது வீட்டிலிருந்த 1736 முதல் 1799 ஆண்டு வரையிலான 16 பதிவேடுகளையும் எழுத்தர்களை வைத்து நகல் எழுதிக் கொண்டார். 1846-இல் தாம் கண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை, 1849-இல் 16 பக்கங்கள் கொண்ட ஒரு பிரஞ்சுக் கட்டுரை மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
நாட்குறிப்பு எத்தனை பிரதி எழுதப்பட்டது?
1. ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மூலத்தைக் கண்ணுற்ற கலுவா மொம்பிரான்; தனக்காக ஒரு பிரதியை எழுதிக்கொண்டார். கலுவா மொம்பிரான் வீட்டிலிருந்த இம்முதல் பிரதி, பின்னர் 1916-இல் புதுச்சேரியில் வீசிய புயல் மழையில் பாழாகி விட்டதாகத் தெரிகிறது. அவற்றுள் சிதைந்தது போக மீதமுள்ள 5 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளது.
2. கலுவா மொம்பிரானின் பிரஞ்சுக் கட்டுரை மூலமாக நாட்குறிப்புப் பற்றி அறிந்த புதுச்சேரி அரசு ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்த எதுவார் ஆரியேல் என்பார், 1849-இல் ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலிருந்த மூலச்சுவடியைப் பார்த்து, மீண்டும் தமக்கொரு பிரதியை எழுதிக்கொண்டார். அவ்வாறு எழுத்தர்களை அமர்த்தி எழுதிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அப்பிரதியினை மூலத்தோடு சரிபார்க்கும் பணியிலும் எழுத்தர்களை ஈடுபடுத்தி மிகச் செம்மையான பிரதியாகப் படியெடுத்துக் கொண்டார். அச்செம்மையான இரண்டாவது பிரதி, எதுவார் ஆரியேலின் மறைவுக்குப் பிறகு, பாரீசு தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3. புதுச்சேரியிலிருந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பும், அதன் அருமையும் வெகுகாலம் வரை ஆங்கில அரசுக்குத் தெரியாமலே இருந்தது. புதுச்சேரியில் ஆங்கில அரசின் முகவராயிருந்த லெப்டினண்டு ஜெனரல் எச்.மெக்லீடு என்பாரும், அவர் மூலமாக இந்நாட்குறிப்புப் பற்றி அறிந்த கல்கத்தா இம்பீரியல் ஆவணக் காப்பகத் தலைவராயிருந்த பேரா.ஜி.டபிள்யூ.பாரஸ்ட் என்பாரும் ஆங்கில அரசுக்கு ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மதிப்பை உணர்த்தி, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஆவன செய்யுமாறு வேண்டினர். அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, சென்னையிலிருந்த வென்லாக் பிரபு அங்கில அரசுக்காக ஒரு பிரதி எழுதுமாறு கட்டளையிட்டார். இதனால் 1892 முதல் 1896 வரை கலுவா மொம்பிரானின் பிரதியிலிருந்து ஆங்கில அரசுக்காக மூன்றாவது பிரதி எழுதப்பட்டது. இம்மூன்றாவது பிரதி தற்பொழுது சென்னை மாநில வரலாற்று ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
4. காலம் கடந்து விழித்துக் கொண்ட புதுச்சேரியிலிருந்த பிரஞ்சு அரசு தமக்கென ஒரு பிரதி இல்லாமையை உணர்ந்தது. இதே நேரத்தில் மூலச்சுவடியும், கலுவா மொம்பிரானின் முதல் பிரதியும் காணாமல் போய்விட்டன. எனவே ஒரு எழுத்தரை நியமித்துச் சென்னைக்கு அனுப்பி, சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்திலிருந்து நான்காவது பிரதி எழுதப்பட்டது. ஆனால் அது எப்பொழுது செய்யப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அப்பிரதி, அந்நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு 12 தொகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இந்நான்காவது பிரதியிலும் முதல் 8 தொகுதிகள் காணாமல் போய்விட்டன. மீதமுள்ள 4 தொகுதிகள் மட்டும் தற்பொழுது புதுச்சேரி இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முதல் அச்சுப்பதிப்பு:
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலப் பதிப்பாகத்தான் வெளியிடப்பட்டது. அதுவும் ஆங்கில அரசால்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கலுவா மொம்பிரானின் எழுத்துப் பிரதியிலிருந்து ஆங்கில அரசிற்காக எடுக்கப்பட்ட மூன்றாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டு பிரடரிக் பிரைஸ் என்பார் ஆங்கில மொழியாக்கம் செய்து, முதல் 3 ஆங்கிலத் தொகுதிகளை வெளியிட்டார். அம்மொழியாக்கப் பணியின்பொழுது பல ஏடுகள் விடுபட்டுப் போயுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அவற்றைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனால் மேலும் சில பகுதிகள் கிடைத்தன. ஆயினும் முக்கியமான பல ஏடுகள்; கிடைக்கவேயில்லை. பாரீசில் உள்ள பிரதியிலும் சில பகுதிகள் இல்லை. விடுபட்ட அப்பகுதிகள் மூலத்திலிருந்து பிரதி எழுதும்பொழுதே கிடைக்காமல் போனவையாகும். அவ்விடுபட்ட பகுதிகள், உடல்நலமின்மை, வெளியூர் பயணம் போன்ற காரணங்களால் ஆனந்தரங்கப்பிள்ளையாலேயே எழுத முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு கிடைக்காமல் போன பகுதிகள் பற்றிப் பிரடரிக் பிரைஸ் கணக்கிட்டு 2 ஆண்டுகள், 7 மாதம்,15 நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரடரிக் பிரைஸ் முயற்சியைத் தொடர்ந்து, எச்.டாட்வெல் என்பார் முயற்சியால் மீதமுள்ளவை 9 தொகுதிகளாக ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுச் செம்மையான பதிப்பாக வெளியிடப்பட்டது. இஃது 1916 முதல் 1928 வரை நடைபெற்றது.
ஆங்கிலப் பதிப்பு வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.ஜி.ழுவோ துய்ப்ராய் பாரீசு தேசீய நூலகத்திலிருந்து அச்சேறாத சில பக்கங்களைப் பிரதி செய்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் அதனை “New Pages From Anandaranga Pillai’s Dairy” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
முதல் தமிழ்ப்பதிப்பு:
ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் ஆங்கில மொழியாக்கம் வெளிவந்த பின்னரே, புதுச்சேரியில் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரஞ்சு அரசுக்கு ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பை அச்சில் கொணர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பிரஞ்சு அரசு முனைந்த வேளையில் புதுச்சேரியிலிருந்த ஆனந்தரங்கரின் மூலப்பிரதியும், கலுவா மொம்பிரானின் முதல் பிரதியும் காணாமல் போயிருந்தன. எனவே பிரஞ்சு அரசு, சென்னையிலுள்ள பிரதியிலிருந்து நான்காவது ஒரு பிரதி படியெடுக்க முயன்றது. அது, சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக மூன்றாவது பிரதியைப் பார்த்தும், ஆங்கில மொழியாக்கப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்பட்டது.
இப்பணி தொடங்கிய காலத்தில், புதுச்சேரி பிரஞ்சு ஆட்சியின்கீழ் இருந்தது. அப்பொழுது சென்னையில், ஆங்கில அரசு அகற்றப்பட்டு இந்திய நாடு சுதந்திரமடைந்திருந்தது. புதுச்சேரி அரசின் தமிழ்ப்பதிப்புப்பணி தொடங்கி, 1948-இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து 4 தொகுதிகள் வெளி;வந்த நிலையில் புதுச்சேரியில் சுதந்திரப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது. இதனால் நான்காவது பிரதி எடுக்கும் பணியிலும், பதிப்பிக்கும் பணியிலும் பல தடைகள் ஏற்பட்டு தமிழ்ப்பதிப்புப்பணி தாமதமாகிக் கொண்டே வந்தது. சுதந்திரப் போராட்டத்தால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் பதிப்புப்பணியில் என்ன நடந்தது? தொடர்ந்து யார் பதிப்பித்து வந்தார்கள்? என்பன போன்ற செய்திகளைத் தெளிவாக அறிய முடியவில்லை. ஞானு தியாகு,ரா.தேசிகம்பிள்ளை போன்ற வரலாற்றுத் துறையில் ஆர்வமுள்ளவர்களால் 1 முதல் 8 தொகுதிகள் பதிப்பிக்கப்பட்டன என்பதும், அவை ஆங்கில மொழியாக்கப் பதிப்பையே அடிப்படையாகக் கொண்டு முதல் 8 தொகுதிகள் மட்டும் பதிப்பிக்கப்பட்டன என்பதும் தெரிகிறது. முதல் 7 தொகுதிகள் முறையே 1948, 1949, 1950, 1951, 1954, 1956, 1963 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை “பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் சொஸ்தலிகித தினப்படி சேதிக்குறிப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. 8 ஆம் தொகுதி இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை எப்பொழுது பதிப்பிக்கப்பட்டன என்ற பதிப்புச் செய்தியும் இல்லை. இவ்வெட்டாம் தொகுதியின் இரண்டு பகுதிகள் மட்டும் “பிரத்தியேகமான ஆனந்தரங்க பிள்ளையவர்களின் தினப்படி சேதிக்குறிப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெட்டுத் தொகுதிகளும் மறு பதிப்பாக, நகல் பதிப்பு (Photo-Print) முறையில்,புதுவைஅரசு, கலை பண்பாட்டுத் துறையால் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையுடன் 1988-இல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்குறிப்பின் முழுமைப்பதிப்பு:
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் தமிழ்ப்பதிப்பு முதல் எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு, மீதமுள்ள நான்கு தொகுதிகள் பதிப்பிக்கப்படாமலே இருந்துவந்த நிலையில், புதுச்சேரி மொழியியல்,பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மீதமுள்ள நான்கு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 12 தொகுதிகளாக வெளியிட்டது. இர.ஆலாலசுந்தரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2005-இல் இம்முழுமையான பதிப்பு வெளியிடப்பட்டது. இத்தமிழ்ப் பதிப்பின் 12 தொகுதிகளும்; ஆங்கிலப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் எங்கே போனது?
கலுவா மொம்பிரானும், எதுவார் ஆரியேலும் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலச்சுவடியைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டபின்,மூலத்தை, ஆனந்தரங்கரின் வாரிசுகளிடமே திருப்பிக் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆயினும் பின்னர் அம்மூலப்பிரதி என்னவாயிற்று? என்பது பற்றிய தகவல்கள் இல்லை. 1916-இல் புதுச்சேரியில் வீசிய கடும் புயல்ää மழையில் மூலப்பிரதியும், கலுவா மொம்பிரானின் முதல்பிரதியும் முற்றிலும் அழிந்து போய்விட்டன என்று புதுச்சேரி ஆவணக் காப்பகத்தின் தலைவராயிருந்த சிங்காரவேலுப்பிள்ளை கூறியுள்ளதாக இர.ஆலாலசுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் அருமை பெருமைகளைக் காலம் கடந்து உணர்ந்த ஆங்கில அரசும், பிரஞ்சு அரசும் மூல ஏடுகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஆயினும் அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. எனவே அவ்விரு அரசுகளும் அம்முயற்சியைப் பின்னாளில் கைவிட்டன.
எனவே, ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலப்பிரதி காணாமல் போய்விட்டது என்பதும், எதுவார் ஆரியேலால் பிரதி எடுக்கப்பட்டுப் பாரீசு தேசீய நூலகத்தில் உள்ள பிரதியே கிடைத்தவற்றுள் முழுமையானது என்பதும் அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிபுகளாகும்.
பிரான்சில் வாழ்ந்து வரும் ஒர்சே கோபாலகிஷ்ணன், பாரீசிலுள்ள இரண்டாவது பிரதியை அடிப்படையாகக் கொண்டும், பிற இடங்களில் கிடைக்கும் ஏடுகளை ஒப்பு நோக்கியும் நாட்குறிப்பை முழுமைப்படுத்தும் நோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளை-வி-நாட்குறிப்பு என்ற பெயரில் ஒரு விரிவான பதிப்பினை வெளியிட்டு வருகிறார். இதுவரை 3 தொகுதிகள் அவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
முடிவுரை:
ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார். இவ்வாறு ஆனந்தரங்கப்பிள்ளை ஒரு தனி ஆளாக இருந்து, பல்வகை அரசியல் ஆளுமைகளோடு தன்னேரிலாத தமிழராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் நாட்குறிப்பு எழுதி வைத்துள்ளமையால், அவர் வரலாற்று நாயகராகப் போற்றப்படுகிறார். அவருடைய நாட்குறிப்பு 18-ஆம் நூற்றாண்டின் பிரஞ்சிந்திய அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அள்ள அள்ளக் குறையாது அமுதசுரபியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய நாட்குறிப்பு ஆங்கிலத்திலும்,தமிழிலும் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது மட்டும் போதாது. அந்நாட்குறிப்பிலுள்ள பிரஞ்சு, போர்த்துகீசியம், பார்சி, தெலுங்கு முதலிய பல்வேறு மொழிகளின் சொல்லடைவையும், அதன் பொருளையும் தொகுத்து அகராதியாக்கித் தருவோமானால், ஆய்வுலகம் மேலும் பயனடையும். நாட்குறிப்பின் அருமையும் பெருமையும் மேலும்; மேலும் உலகம் அறிய ஏதுவாகும்.
**********
இக்கட்டுரையாக்கத்திற்குத் துணை நின்ற நூல்:
1. நா.இராசசெல்வம், ஆனந்தரங்கப்பிள்ளையும் நாட்குறிப்பும், 2012.
(புதுவைப் பல்கலைக்கழகம்ää “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு – காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் 30-03-2013 இல் பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் - பண்பாட்டு மாநாட்டுக்கூடத்தில் நடத்திய ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புக் கருத்தரங்கத்தில் படிக்கப்பட்ட கட்டுரை)
**********
No comments:
Post a Comment