Sunday, December 15, 2019


தொல்தமிழர் முருக வழிபாடு

கவிஞர், கலைமாமணி,  முனைவர்  நா. இராசசெல்வம்
தமிழ் விரிவுரையாளர் (ஓய்வு),
குறிஞ்சி நகர், புதுச்சேரி605008. இந்தியா.
கைபேசி: 0091 9486009909.

                                                            மின்னஞ்சல்: nrajaselvam@gmail.com




     உலகம் நீரால் சூழப்பட்டிருந்த பொழுது, உயிரினங்கள் தோன்றின. காலப்போக்கில் அந்நீர்மட்டம் குறையத் தொடங்கியபொழுது உயரமான நிலப்பகுதிகள் தோன்றின. அவை மலைகள் ஆயின. அதையடுத்துக் காடுகள் தோன்றின. அதன்கீழ் சமவெளிகள் உண்டாயின. உலகம் நிலைப்பட்டது. உலகின் பரிணாம வளர்ச்சியில் மேலும் மேலும் பல உயிரினங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. இறுதியில் மனிதன் தோன்றினான். இவ்வாறு தோன்றிய மனிதஇனம் முதலில் எங்கே தோன்றியது? மனித இனத்துள் மூத்த குடிகள் யார்? அம்மூத்த குடிகளுள் முதலில் நாகரிகம் அடைந்தவர்கள் யார்? பண்பாட்டில் சிறந்து விளங்கியவர்கள் யார்? அவர்கள் பேசிய மொழி எது? இவை போன்ற வினாக்களுக்கு விடை காண ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டறிஞர்களின் ஆய்வுகள், அம்முதல் மனிதஇனம், தமிழினமே என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழே என்றும் நிலைநாட்டி வருகின்றன.

     அத்தமிழினம் தோன்றிய முதல் இடம் மலைநிலம். அவர்கள், அந்நிலத்தைக் குறிஞ்சி என்றனர். அக்குறிஞ்சிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மலைவாழ் மக்கள். அவர்களின் தொழில் வேட்டையாடுதல். அவர்களின் தெய்வம் முருகன். அம்முருக வழிபாட்டின் தோற்றுவாய் எது? அதன் படிநிலைகள் யாவை? முருகனெனும் பெயர் எவ்வாறு உண்டாயிற்று? அப்பெயருக்குரிய பொருள் யாது? போன்ற வினாக்களுக்கு விடை காண இக்கட்டுரை முயல்கிறது. ஆயினும் கட்டுரையின் விரிவஞ்சி தொல்தமிழர் முருக வழிபாடு மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தொல்தமிழர் வழிபாடு:
    
     குறிஞ்சி நிலமக்கள், வேட்டையாடப் பல கருவிகளை உருவாக்கினர். அக்கருவிகளுள் முதன்மையானது ஈட்டி. அவ்வீட்டி மேலும் மேலும் செம்மைப்படுத்தப்பட்டு வேல் எனும் வடிவம் கொண்டது. அது, அவர்களை விலங்குகளிடமிருந்தும், பகைவர்களிடமிருந்தும் காத்தது. அதனால் அவர்கள், எப்பொழுதும் அதனைத் தங்கள் கையில் ஏந்திச் சென்றனர். காலப்போக்கில் அவ்வேல், அம்மக்களின் தோன்றாத் துணையாய் நின்றது. எனவே அவர்கள், அவ்வேலை வழிபாட்டிற்குரியதாகக் கருதினர்; அதனைத் தங்கள் குடிலின் எதிரில் வைத்து வணங்கத் தொடங்கினர். இவ்வாறு தொல்தமிழ் மக்களின் முதல் வழிபாடு, வேல்வழிபாடாகத் தொடங்கியது. இதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லையாயினும், அவ்வேல்வழிபாட்டின் எச்சங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

     மாமல்லபுர புலிக்குகைக்கு வடக்கே சாளுவன்குப்பத்தில், ஒரு கோயிலின் அடிப்பகுதி காணப்படுகிறது. அங்கு ஒரு கருங்கல்லாலான வேல் ஒன்று முழுமையாக நிற்கின்றது. அது 2004-ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையின்பொழுது (சுனாமி), அக்கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பினால் வெளிப்பட்டது. அது சங்க காலத்தைச் சார்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவ்வேற்கோயில், தொல்லியல்துறையால் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது நமக்குக் கிடைத்துள்ள தமிழரின் வேல் வழிபாட்டிற்கான மிகத் தொன்மையான சான்றாகும்.

     காவிரிப்பூம்பட்டினத்திலும் வேற்படையை வைத்து வணங்கப்பட்ட வேல்கோயில்கள் இருந்ததென்பதை,
“உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம்”,
எனச் சிலப்பதிகாரம் (புகார்.19. கனாத்திறம் உரைத்த காதை. 11) உரைக்கின்றது. இவ்வேல்வழிபாட்டின் எச்சங்களாக, இன்றும் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மேல்நாடுகளிலும் சில வேற்கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்களாக இருக்கின்றன. அத்தகைய கோயில்களை முற்காலத்தில் திருப்படைக்கோயில்கள் என்றும், பின்னர் வேல்கோயில்கள் என்றும் அழைத்து வந்தனர். தற்பொழுது அவை யாவும் பொதுவாக முருகன் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

      இவ்வேல்வழிபாடு, தொல்பழங்காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து வந்தது என்பதற்கான தமிழிலக்கிய, புராணச் சான்றுகள் கிடைக்கின்றன.

”சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்”
என்று அகநானூற்றிலும் (59),

”சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்”
என்று திருமுருகாற்றுப்படையிலும் (46),

“பாரிரும் பௌவத்தின் உள்புக்கப் பண்டொருநாள்
சூர்மா தடித்த சுடரிலைய வெள்வேலே”
என்று சிலப்பதிகாரத்திலும் (வஞ்சி. குன்றக்குரவை. 8),

“சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி”
என்று கந்தபுராணத்திலும் (காப்பு. 3),

“சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன்தன் கைவேலே”
என்று அருணகிரிநாதரின் பனுவலிலும் (வேல் விருத். 9) வேலைப் போற்றி வணங்குகின்ற மரபு காட்டப்படுகின்றன.

நடுகல் வழிபாடு:

     வேலை நட்டுத் தெய்வமாக வழிபட்டு வந்த தொல்தமிழர்கள், பின்னர் அவ்வேலைக் கையில் ஏந்திப் போரிட்டு வீரமரணம் அடைந்த மறவர்களை வணங்கத் தொடங்கினர். அதற்காக, அவர்களின் நினைவிடங்களில் ஓர் அடையாளக் கல்லை நட்டு வைத்தனர். அதனை நடுகல் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  அந்நடுகல் வழிபாட்டின் முறையைக்,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணர ”
என்று தொல்காப்பியம் (பொருள். புறத்திணை. 5) வரிசைப்படுத்துகின்றது.

     தமிழர்கள் அந்நடுகலை எவ்வாறு வழிபட்டனர்? அவர்கள் அந்நடுகல்லுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர்? என்பது பற்றியெல்லாம் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. அதன் பதச்சோறாகச் சிலவற்றைக் காட்டுவாம்.

     தொல்தமிழர், வீர மரணம் எய்திய மறவனுக்கு நடுகல் இட்டு, மயிலிறகு சூட்டித், துடிகொட்டி, நெல்லினால் சமைத்த கள்ளோடு, செம்மறியாட்டுக் குட்டியைப் பலி கொடுப்பர் என்பதனை,

“நடுகற் பீலி சூட்டி, துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்”
என அகநானூறும் (35),

     ஆற்றலுடைய தந்தங்களைக் கொண்ட யானையைக் கொன்று, தானும் இறந்த வீரனின் நடுகல்லை, வழிபடுதல்லது நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுளும் இல்லை எனும் கருத்தை,

“ஒளிறேந்து மருப்பின், களிறெறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலமே”
எனப் புறநானூறும் (335),

     வீரனொருவன், பகைவர்களை நோக்கி, ’என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்கள், அவன்முன் எதிர்த்து நின்று, நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்’ என முழங்கும் செய்தியை,

”என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்”
எனத் திருக்குறளும் (771) நடுகல் வழிபாட்டின் பெருஞ்சிறப்பைக் காட்டுகின்றன.

     அந்நடுகல்லில் எதிரிலேயே அவ்வீரனின் வேலையும் நட்டு வைத்திருந்தனர் என்ற செய்தி,
“கிடுகு நிரைத்து எகு ஊன்றி,
நடுகல்லின் அரண்போல”
எனும் பட்டினப்பாலை (78-79) அடிகளால் தெரிய வருகின்றது.
    
     பின்னர் அந்நடுகல்லில், அவ்வீரனின் பெயரையும் பெருமையும் எழுதி வைத்து வழிபட்டனர் என்ற செய்தி,

”. . . . .மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”
என்ற அகநானூற்றுப் பாடலாலும் (67),

“பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்”
என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் திருவாரூர் மும்மணிக்கோவையாலும் (16: 1-2) உறுதியாகின்றது.

     அதன்பின் அம்மறவனின் வேலேந்திய உருவத்தையும் அந்நடுகல்லில் பொறித்து வைத்து வழிபட்டனர் என்ற செய்தி தொல்லியல் ஆய்வின் மூலமாகக் கிடைத்துள்ளது. வீரனின் உருவங்களுடன் கூடிய நடுகற்கள் தென்னிந்தியப் பகுதிகளில் எண்ணற்ற அளவில் கிடைத்துள்ளன. (விக்கிபீடியா)

     மேற்கண்ட இலக்கியச் சான்றுகளாலும், தொல்லியல் சான்றுகளாலும், தமிழர்கள், வீரமரணம் எய்திய மறவர்களின் நினைவிடங்களில் நடுகல் வைத்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதும், நாளடைவில் அந்நடுகற்களில் மறவர்களின் பெயரையும், புகழையும், உருவத்தையும் பொறித்து வழிபட்டார்கள் என்பதும் தெள்ளிதின் விளங்கும்.

     அந்நடுகல் வழிபாட்டிற்குத் தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தைப் பின்பற்றி, இளங்கோவடிகள் வஞ்சிக் காண்டத்தில் காட்சிக்காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற்காதை, வாழ்த்துக்காதை என ஐந்து காதைகளை அமைத்து இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து, கண்ணகிக்குக் கோயில் எழுப்பப்பட்ட செய்தியைப் பாடியுள்ளார். இதனால் இந்நடுகல் வழிபாடே, பின்னாளில் உருவ வழிபாடு பரவியதற்கு அடித்தளமாகியது என்பதும் பெறப்படுகிறது. 
 
வேலன் வழிபாடு:

     பழந்தமிழர்கள், அக்காலத்தில் வேலையும், வேலேந்திய மறவர்களின் நினைவிடங்களையும் (நடுகற்கள்) வழிபட்டு வந்தமையைக் காண முடிகிறதே தவிர, வேலேந்திய உருவமைப்பு கொண்ட தெய்வத்தை வைத்து, வழிபாடு நடத்தியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சங்க காலத்தின் பிற்பகுதியினதாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல் மட்டும் அறுபடை வீடுகளைப் பற்றிப் பேசுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஆயினும் சங்க காலத்தில் வெறியாடல் எனும் ஒரு வகை நிகழ்வு பரவலாக நடைபெற்றமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இலக்கியங்கள், அவ்வெறியாடலை, வெறியாட்டு, வெறியயர்தல், வெறிகோள், வெறிக்கூத்து, வேலனாட்டம் எனப் பல பெயர்களில் சுட்டுகின்றன. இவ்வழிபாட்டு முறை குறிஞ்சி, முல்லை நில மக்களிடம் பெருவாரியாக இருந்துள்ளது.

     காதல் வயப்பட்ட தலைவியின் மேனி மாற்றத்தினைத் தீர்க்க இவ்வெறியாட்டை நிகழ்த்தி, முருகனை வழிபட்ட செய்திகள், இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. முருகனுக்குரிய வேலினைக் கையில் ஏந்தி ஆடியோன் வேலன் எனப்பட்டான். அவ்வேலன் வெறிவந்து ஆடியதால், அது வேலன் வெறியாட்டு என வழங்கப்பட்டது. அது இக்காலக் கோயில் பூசாரிகள் தெய்வமேறி ஆடுதலை ஒத்தது.

     அவ்வெறியாடல் நிகழ்வில், வேலன் களம் அமைத்து வழிபாடு செய்கிறான்; வேலைக் கையிலேந்தி, முருகனப் போற்றிப் பாடுகிறான்; வேலன் வெறி கொண்டு ஆடுகிறான். தலைவியின் நோய்க்குக் காரணம் முருகனே என மொழிகிறான். இதனைப்,

“பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்குமெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகென மொழியுமாயின்”
என ஐங்குறுநூறு (245) காட்டுகின்றது.

     அப்பழங்கால தமிழர்கள், தலைவியின் காதல் நோய்க்கான காரணத்தைத் தெய்வத்தின்மீது ஏற்றி, அத்தெய்வத்தை முருகன் எனப் பெயரிட்டு அழைத்தார்கள் என்பது இங்குப் பெறப்படுகிறது.

     இவ்வெறியாடலையொத்த நிகழ்வுகள் இன்றும் பல கேரள மலைவாழ் மக்களிடம் காணப்படுகின்றன. (பக்தவத்சல பாரதி. 2014: 175)

தொல்தமிழர் முருக வழிபாடு:

     தமிழர்கள் இயற்கையோடியந்த வாழ்வினை மேற்கொண்டிருந்தார்கள். தொடக்க காலத்தில் அவர்களுடைய வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. தங்கள் வீரத்தின் அடையாளமாகிய வேலையே வழிபட்டனர். அவ்வேல் வழிபாடு, நடுகல் வழிபாடாக மாறியபொழுது மெல்ல உருவ வழிபாடு முளைக்கத் தொடங்கியது. பின்னர் அது வேலன் வழிபாடு என்றானபொழுது, வீர மறவனை, முருகனாக உருவகிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு தொடங்கிய வழிபாட்டில் முருகன் எனும் பெயர் எவ்வாறு வந்தது? அம்முருகன் எனும் பெயரின் பொருள் யாது? எனும் வினாக்கள் எழுகின்றன. அது பற்றித் தொடர்ந்து ஆராய்வோம்.

     முருகன் எனும் சொல் முருகு, முருக்கு, முருக்கி எனும் வேரிலிருந்து வளர்ந்திருக்க வேண்டும். முருகு என்பதற்கு இளமை, அழகு என்றும், முருக்கு என்பதற்கு அழித்தல், உருக்குதல், கொல்லல் என்றும் தமிழகராதி பொருள் கூறுகின்றது.

     இந்நிலையில் திரு.வி.க. அவர்கள் முருகன் எனும் பெயர்க்குப்,

‘பண்டைத் தமிழ்மக்கள், இயற்கைவழி வாழ்வு செலுத்தி, அதற்கு அடிப்படையாயுள்ள அழகுண்மை கண்டு, அவ்வழகால் இயற்கை அழகு பெறுவதை நோக்கி, அவ்வியற்கையை வழிபட்டு, முழுமுதற் பொருட்கு அழகு என்னும் பொருள்பட முருகன் என்னும் பெயரணிந்தார்கள்’,

என்று விளக்கிக் கூறுவார் (1950: பக்.18). திரு,வி,க.வின் இக்கருத்து பொருந்துமோவெனில், அது முற்றிலுமாகாது. முருகன் என்பதற்கு அழகுடையவன் என்று பொருள் கொள்ளுதல் ஓரளவே பொருந்தும். பழந்தமிழ் மக்கள், தாங்கள் வணங்கிய வேலேந்திய வீரமறவனை, வெறும் அழகுடையவன் என்று மட்டும் கருதியிருக்க வாய்ப்பில்லை. அவனை வலிமையுடையவனாகவும், வீரம் மிகுந்தவனாகவும் கருதியே வழிபட்டிருக்க வேண்டும். அவர்கள் மொழிந்த ’முருகன்’ எனும் பெயருக்கு அழகு என்பதோடு, வலிமை, வீரம் எனும் பொருள்களும் பொருந்தியிருத்தலை இனி நிறுவுவோம். அதற்கான ஆதாரமாக நமக்குக் கிடைப்பது, நம் பழந்தமிழ் இலக்கியங்களேயாகும்.

அகநானூற்றில்,

                “முருகன் நற்போர் நெடுவேள் ஆவி”  (அகம். 1)
எனும் அடியில், முருகனைப் போன்ற வெற்றியை உடையவன் தலைவன் என்று கூறப்பட்டுள்ளது.

மதுரைக்காஞ்சியில்,

“விரிகடல் வியந்தானையொடு
முருகுஉறழ்ப் பகைத்தலைச்சென்று”  (அடிகள். 181-182)
எனும் அடிகளில், போர்த் தலைவனே! நீ பரந்த, கடல் போன்ற பெரிய படையுடன், முருகனைப் போன்று பகைவரிடத்துச் சென்றாய் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்விடங்களில், முருகன் எனும் பெயரில் ’போரில் வலிமையும் வெற்றியும் உடையவன்’ எனும் பொருள் தொனிப்பதை உணரலாம்.

     மேலும், முருகன் எனும் சொல் பெருஞ்சினம் கொண்டவன் என்ற பொருளிலும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.

”சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து” எனும் அகநானுற்றுப் பாடல் (59) அடியிலும்,
”முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்” எனும் புறநானூற்றுப் பாடல் (16) அடியிலும்,
                  ”காஅய் கடவுள் சேஎய்! செவ்வேள்!” எனும் பரிபாடல் அடியிலும் (5: 13) முருகன் எனும் சொல் பெருஞ்சினம் மிக்கவன் என்ற பொருளில் வந்துள்ளமையைக் காணலாம்.
      
     இதுபற்றி பி.எல்.சாமி எனும் ஆய்வறிஞர் (புதுச்சேரி மாநில முன்னாள் ஆட்சியர்) தமது நூலில்,

”முருகன் என்ற பெயர் எப்படித் தோன்றிற்று என்பதை ஆராய வேண்டும். ஆராய்ச்சியாளர் பலர் இளமை, அழகு என்ற பொருள்களில் முருகன் என்ற பெயர் தோன்றியதாகக் கூறுவர். ஆனால் அக்கருத்துக்குச் சங்கநூல்களில் சான்றுகள் ஏதும் இல்லை. இக்கருத்து சங்க காலத்திற்குப் பின்னர் தோன்றியதாகும். . . . . . . . . முருகன் வீரமிக்கவன், சீற்றமுடையவன், வலிமையுடையவன் என்றே சங்க நூல்கள் கூறுகின்றன”,

என்று விளக்குகின்றார். (1990: பக். 9) மேலும் அவர்,”முருகன் என்ற பெயர்க்கு, வேர்ச்சொல் முரு என்பதாகும். 
இந்த ’முரு’ என்ற வேர்ச்சொல்லிருந்தே முருக்கிய என்ற வினைச்சொல் தோன்றிற்று,” எனக் கூறி,

”ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி”
எனப் புறநானூறும் (312)

“மூஎயில் முருக்கிய, முரண்மிகு செல்வனும்”
எனத் திருமுருகாற்றுப்படையும் (154)

“முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கி”
எனச் சிலப்பதிகாரமும் (10: 247-248) காட்டும் அடிகளைச் சான்றுகளாக்கி, முருகன் என்ற பெயர் போரில்வல்லவன், வீரமிக்கவன், பெருஞ்சினம்கொண்டவன் என்ற பொருள்களையுடையதே என நிறுவியுள்ளார். (1990. பக்.12-13)

     இவ்வெடுத்துக்காட்டுகளில் ’முருக்கி’ எனும் சொல் ’போரிட்டு, அழித்த’ எனும் பொருள்களில் வந்துள்ளமையைக் காண்க.

     எனவே, பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய ‘முருகன்’ என்ற சொல், பெருஞ்சினம் கொண்டு போர் புரிந்து வீரமரணம் எய்திய வீர மறவனைக் குறித்தது என்பது தெள்ளிதாம். இதனால் தொல்தமிழர் வழிபாட்டில் வீரத்தின் அடையாளக்குறியாக இருந்த ’முருகன்’ எனும் பெயரே, நாளடைவில் வழிபடு தெய்வத்தின் பெயராகியது என்பது உறுதியாகிறது.

தொல்தமிழர் வழிபாட்டில் முருகனின் வாகனம்:

     பழந்தமிழ் இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானையே காட்டப்பட்டுள்ளது. பின்னால் வந்த இலக்கியங்களே மயிலைக் குறிப்பிடுகின்றன. வடவரின் ஆதிக்கத்தால், தமிழ் மரபில் கலந்துவிட்ட புராணக்கதைகளால் இம்மயில் வாகனம் தோன்றியது என்பது பெறப்படும்.

     பதிற்றுப்பத்தில், சூரனை வென்ற முருகப்பெருமான் தன் யானைமீது அமர்ந்து சென்றதைப் போல எனும் கருத்தில்,
”சூருடை முழுமுதல் தடிந்த பேர்இசை,
கடுஞ்சின விறல்வேள் களிறுஊர்ந் தாங்கு’’ (11) எனவும்,

     புறநானூற்றில், நீலமணி போலும் மயில் கொடியை ஏந்தியவனும், உறுதியான வெற்றியை உடைய பிணிமுகம் எனும் யானையை வாகனமாகக் கொண்டவனுமாகிய முருகனும் என்பதை,
”மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்” (56) எனவும் குறித்துள்ளதைக் கொண்டு,

பழந்தமிழர் வழிபாட்டில் முருகனின் வாகனமாக யானையே சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. (பி.எல்.சாமி. 1990: பக்.71-72)

     பழந்தமிழரின் வழிபாட்டில் வீரமறவனையே முருகனாக உருவகித்தார்கள் என்பதற்கு, இங்கு வாகனமாகச் சொல்லப்பட்டுள்ள யானையும் ஒரு வலுவான சான்றாகும். ”களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” எனும் புறநானூற்று (312) அடி, இதற்கு மேலும் அணி செய்வதாகும்.

முடிவுரை:

     தொல்தமிழர் வழிபாடு, வேல்வழிபாடு, நடுகல் வழிபாடு, வேலன் வழிபாடு, முருக வழிபாடு எனும் தொடர்ந்து கொண்டிருந்தபொழுது, ஆரியக் கலப்பு ஏற்பட்டது. அக்கலப்பு சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. இதனைச் சூரபதுமனை அழித்த முருகன் எனக் குறிப்பிடும், ‘சூர்மருங் கறுத்த’(அகம்.59), ‘சூர்முதல் தடிந்த’(திருமுருகா.46) போன்ற சங்க இலக்கியத் தொடர்களால் தெளிவாக உணரலாம். இவ்வாரியக் கலப்பால், தமிழர்களின் வீரமறவனாக இருந்து, முருகனாக உருவகிக்கப்பட்டவன், வடவர்களின் புராணக் கதைகளோடு இணைக்கப்படுகின்றான். வேலாயுதனாக இருந்தவனுக்குக் கந்தன், கடம்பன், கார்த்திகேயன், குகன், சண்முகன், சுப்பிரமணியன் எனப் பல பெயர்கள் சூட்டப்படுகின்றன. முருகனுக்கு வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியர்கள் கற்பிக்கப்படுகின்றார்கள். முருகனுக்கெனத் தனிக்கோயில்கள் உருவாக்கப்படுகின்றன. அறுபடை வீடுகள் எழுப்பப்படுகின்றன. அவ்வறுபடை வீடுகளுக்குத் திருமுருகாற்றுப்படை நமக்கு வழிகாட்டுகிறது. குன்றுதோறும் ஆடும் குமரன், தமிழரின் தனிப்பெரும் தெய்வமாகின்றான்.

“ஒன்றுதொறு ஆடலை ஒருவி ஆவிமெய்
துன்றுதொறு ஆடலைத் தொடங்கி ஐவகை
மன்றுதொறு ஆடிய வள்ளல் காமுறக்
குன்றுதொறு ஆடிய குமரன் போற்றுவாம்.” (கந்தபுராணம். 21)



**********

உசாத்துணை நூல்கள் மற்றும் கட்டுரைகள்:

1.    அகநானூறு.
2.    ஐங்குறுநூறு.
3.    கந்தபுராணம்.
4.    சிலப்பதிகாரம்.
5.    திருக்குறள்.
6.    திருமுருகாற்றுப்படை.
7.    திருவாரூர் மும்மணிக்கோவை
8.    தொல்காப்பியம்.
9.    பட்டினப்பாலை.
10.   பதிற்றுப்பத்து.
11.   பரிபாடல்.
12.   புறநானூறு.
13.   மதுரைக்காஞ்சி.
14.   வேல்விருத்தம்.
15.   ……….. 2014. பல்நோக்குப் பார்வையில் முருகத் தத்துவம் – II. மலேசியா: திருமுருகன் திருவாக்குத் திருபீடம்.
16.   ……….. 2016. பல்நோக்குப் பார்வையில் முருகத் தத்துவம் – III. மலேசியா: திருமுருகன் திருவாக்குத் திருபீடம்.
17.   அறிவரசன். பேரா. 2017. நடுகல் வழிபாடு. (இணையதளக் கட்டுரை)
18.   கதிரைவேற்பிள்ளை.நா. 2011. தமிழ்மொழி அகராதி (செம்பதிப்பு). சென்னை: சாரதா பதிப்பகம்.
19.   கலியாணசுந்தரனார்.திரு.வி. 1950. முருகன் அல்லது அழகு. சென்னை: பாரி நிலையம்.
20.   கனிமொழி.ம.வீ. வழக்கறிஞர். 2017. நடுகல் வழிபாடு பற்றிக்கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் (இணையதளக் கட்டுரை)
21.   கோமகன். 2013. நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள். (இணையதளக் கட்டுரை)
22.   சாமி. பி.எல். 1990. சங்கநூல்களில் முருகன். சென்னை: சேகர் பதிப்பகம்.
23.   பக்தவத்சல பாரதி. 2014. திராவிட மானுடவியல். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
24.   பாண்டுரங்கன்.அ. 2011. சங்க இலக்கியங்களில் வெறியாடல் (கட்டுரை). செம்மலர் இதழ்.(ஆகஸ்டு).
25.   மாதவிப்பந்தல்.கே.ஆர்.எஸ். 2014. சங்கத்தமிழில் வேல்வழிபாடு. (இணையதளக் கட்டுரை).

**********

No comments: