Friday, February 21, 2020

பெண்ணுரிமை தந்திட்ட பெருமகனார்


பெண்ணுரிமை தந்திட்ட பெருமகனார்

கவிஞர், கலைமாமணி நா.இராசசெல்வம்,
ஆசிரியர் (ஓய்வு) புதுச்சேரி, இந்தியா.

      உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது. முதலில் அது  காட்டுமிராண்டியாய் இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல நாகரிகம் அடையத் தொடங்கியது. அந்நாகரிக வளர்ச்சியில் குடும்ப அமைப்பு முறை தோன்றியது. ஆண்கள் வேட்டையாடுவதும் ஆடு, மாடுகளை மேய்ப்பதுமாகச் சுற்றித் திரிந்தனர். பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பேணி வளர்த்தனர்; வாழிடங்களைக் காத்தனர்; தங்களைச் சுற்றியிருந்த இடங்களில் விவசாயம் செய்தனர். எனவே தொடக்கத்தில் பெண்களை மையமிட்டுக் குடும்ப முறை அமைந்திருந்தது. அது தாய்வழிச் சமூகம் எனப்பட்டது. அச்சமூகம் பெண்களை உயர்வாகக் கருதியது; தெய்வமாகப் போற்றியது. நாளடைவில் அந்நிலை மாறி விவசாயம் ஆண்கள் கைக்கு மாறியது. உற்பத்திப் பொருள்கள் ஆண்களை அடைந்தன. உடைமை வழி உரிமையும் மாறியது. ஆண்களின் கை ஓங்கியது. தாய்வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாறியது. பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலை, 18-ஆம் நூற்றாண்டு வரையும் தொடர்ந்து கொண்டிருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் பெண்களிடையே மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது. பெண்களின் உரிமை பற்றிப் பேசப்பட்டது. பெண்ணுரிமைக் குரல் எழுந்தது. 20-ஆம் நூற்றாண்டில் பெண்கள் உரிமை பெற்றனர்; சமமாக மதிக்கப்பட்டனர். ஆயினும் இன்றும் அவ்வடிமை நிலை பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில் இசுலாமியம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு உரிமைகள் வழங்கியது; பெண்களைப் போற்றியது எனச் சொல்லப்படுகிறது. அதுபற்றிய ஆய்வில் உலக மதங்களில் பெண்களின் நிலை என்ன? உலக வரலாற்றில் பெண்களின் நிலை என்ன? பெண்ணியம் என்ற சிந்தனை எப்பொழுது தோன்றியது? உலகில் பெண்களுக்கான உரிமைகள் எப்பொழுது வழங்கப்பட்டன?  இசுலாமியர்களின் வேதமாகிய திருக்குரானில் பெண்ணியம் எவ்வாறு பேசப்படுகிறது? என்பன பற்றியும் அதற்கான வரலாற்றுப் பின்னணிகளையும் இனிக் காண்போம்.
உலக மதங்களில் பெண்கள்:
     குடும்பம் குடும்பமாக வாழத் தொடங்கிய மனிதன், பின் குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்தான். நாளடைவில் குழுக்களுக்குள் சண்டை ஏற்பட்டது. சண்டையில் பலர் மாண்டனர். இதனால் மனிதன் அமைதியை வேண்டி அரச வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். அரசை நிலைநிறுத்துவதற்காகப் போர் புரியத் தொடங்கினான். இவ்வாறு எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் அவனது வாழ்க்கையில் அமைதி ஏற்படவில்லை. அதற்கான வழிகளைத் தேடினான். நன்னெறி கூறும் மதங்களை உருவாக்கினான். பல்வேறு மதங்கள் தோன்றின. அவற்றுள் இந்து, கிறித்துவம், இசுலாம், புத்தம், ஜைனம், சீக்கியம், யூதம் என ஒரு சிலவே உலகமெலாம் பரவி நின்றன. உலகில் பரவிய மதங்கள் அனைத்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவே வழி காட்டின. ஆயினும் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்கும் அன்பு உருவாகவில்லை. ஆண்பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழைபணக்காரர் எனப் பாகுபாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாகப் பெண்களை அடிமைப்படுத்துவது முற்றிலுமாக நீங்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆயினும் மதங்களைப் போதித்த வேதங்களும் சில நேரங்களில் இதற்குக் காரணங்களாகின்றன.

     கடவுள் முதலில் ஆணைப்படைத்தான். ஆதாமாகிய அவ்வாணின் விலா எலும்பிலிருந்தே ஏவாளைப் படைத்தான். அந்த ஏவாளே முதல் மனிதனாகிய ஆதாம் தவறிழைக்கக் காரணமானாள். எனவே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டார்கள்
என்று விவிலியம் கூறுகிறது.

      கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணமில்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல் பூசிக்க வேண்டியது
என்று இந்திய வடமொழி வேதங்கள் கூறுகின்றன.

      பெண்ணே! நீ குழந்தைப் பருவம்வரை அப்பன் சொன்னதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்
என மனுநீதி கூறுகிறது.
     மதங்கள் அனைத்தும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. உலகப் பெரு மதங்களாகிய கிறித்துவம், இசுலாம், இந்து போன்ற எந்த மதங்களும் பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. பெண்கள் தீண்டத்தகாதவர்கள்; கோயில்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்று பெண்களை ஒதுக்கி வைக்கின்றன. அதற்கு அவர்களின் மாதவிடாய் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணங்களாக்கப்படுகின்றன. இவ்வாறு பல நிலைகளில் மதங்களும், மதத்தின் அடிப்படையில் எழுந்த வேதங்களும் பெண்ணடிமைக்கு வழி வகுத்தன.
உலக வரலாற்றில் பெண்ணுரிமை:
     ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள்என்பதிலிருந்து, தாவது மனிதகுல வரலாறு தொடங்கியதிலிருந்தே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
     கி.பி. 586-இல் பிரஞ்சுக்காரர்கள், ’பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா?’ என்பது பற்றி ஆராயக் கமிட்டி அமைத்தார்கள் என்ற செய்தி, அக்காலத்தில் பெண்கள் எந்தளவிற்குத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
     கி.பி. 1567-இல் ஸ்காட்லாந்து பாராளுமன்றம், ‘பெண்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாதுஎன்றே சட்டம் இயற்றியுள்ளது.
     கி.பி. 1805 வரை, ’ஒரு கணவன் தன் மனைவியை 6 பென்னி காசுகளுக்கு விற்க முடியும்என ஆங்கிலேயச் சட்டம் இருந்தது என்றும், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, ’ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் குடியுரிமையின்றியே இருந்தார்கள்என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.
     பெண்களையும் பிராமணரல்லாதவர்களையும் கொல்லுதல் பாதகமாகாதுஎன வடமொழி சாத்திரங்கள் கூறி வந்தன.
     இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டு வரை தோஷம், பால்ய விவாகம், சதி, விதவைத் திருமண மறுப்பு, சொத்துரிமையின்மை எனப் பெண்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தார்கள்.  
     இத்தகைய சூழலில் 19-ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பெண் விடுதலை பற்றிப் பேசப்பட்டது. கி.பி. 1837-இல் சார்லஸ் ப்யூரியே என்பவர்தான் முதன் முதலாகப் பெண்ணியம்(Feminism) என்ற சொல்லைக் கையாளத் தொடங்கினார். அதன் பின்னரே பெண்ணியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.
     பழங்காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. கி.பி. 1780-இல்தான் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்என்கிற இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கப்பட்டது.
     கி.பி.1860-இல் சுவீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் மட்டும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
     கி.பி.1893-இல் நியூசிலாந்து நாடு வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாகத் திகழ்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1895-இல் பெண்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றனர்.
      ஐரோப்பா நாடுகளில் பின்லாந்து நாடுதான் 1907-இல் முதன் முதலாகப் பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. 
     இந்தியாவில் 1919-இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
     இவ்வாறு உலக வரலாறு நெடுகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததும், 20-ஆம் நூற்றாண்டில்தான் முழுமையான பெண்ணுரிமை உலகமெலாம் மலர்ந்தது என்பதும் பெண்ணுரிமை பேசிய மேல்நாட்டாரின் நிலையாகக் காணக் கிடைக்கின்றது.  
இசுலாம் மார்க்கத்தில் பெண்ணுரிமை:
      உலகமெலாம் 20-ஆம் நூற்றாண்டு வரை பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டும், உரிமை மறுக்கப்பட்டும் வந்திருக்கும் சூழலில், 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கும் உரிமைகளை வழங்கிய ஒரு சமுதாயம் மலர்ந்திருக்கிறது என்பதை அறியும்பொழுது வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணுரிமை வழங்கிய சமூகம் இசுலாம் சமூகம் ஆகும்.
     இசுலாம் என்பது ஒரு மார்க்கம். அம்மார்க்கம் அண்ணல் நபிபெருமானால் வகுத்தளிக்கப்பட்டது. இறைவனால் அருளப்பட்ட திருவசனங்களை நபிகளார் தொகுத்துத் தந்தார்கள். அத்திருவசனங்களாகிய வேதங்கள் சொல்லும் வழியில் நடப்பவர்களே இசுலாமியர்கள். அதுவே இசுலாம் மார்க்கம். அம்மார்க்கமே திருக்குரான்.
     நபி பெருமானாரால் அளிக்கப்பட்ட திருக்குரானில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகளை இனிக் காண்போம்.
சொத்துரிமை:
     “( மரணமடைந்த ) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்
         பாகம்.5. அத்.4 அன்னிஸா - 7
உலகமெலாம் காட்டுமிராண்டித் தனமாகப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாட்களிலேயே, நபி பெருமானார் பெண்களுக்குச் சொத்துரிமையை அளிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது பெரும் வியப்பாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் உலகமெலாம் பெண்ணுரிமைக்காகப் போராடி உரிமை பெற்றுத் தந்த உலகப் பெண்ணியச் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் அவரே முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதும் பெருமை கொளத்தக்கதாகும்.
மறுமண உரிமை:
     கணவன் இறந்த பிறகு அல்லது விவாகரத்து ஆன பிறகு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவளுக்குத் தடையாக இருக்கக்கூடாது, அவளை அனுமதிக்க வேண்டும் என்று பெண்களுக்குரிய உரிமையை நிலைநாட்டிய பெருமகனாரின் திருவசனத்தைப் பாருங்கள்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணமடைந்துவிட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமதமாகக் காத்திருக்க வேண்டும். அப்படித் தங்களின் தவணையை நிறைவு செய்துவிட்டு தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்திற்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு.”
    பாகம்.2. அத்.2 அல்பகறா - 234
நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா) தவணையை நிறைவு செய்தால், பிறகு அவர்கள், தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும்பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். இவ்வாறு (ஒருபோதும் செயல்படக் கூடாது என்று) உங்களில்அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரை கூறப்படுகின்றது. இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும், பண்புமிக்கதுமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ் நன்கு அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.”      
    பாகம்.2. அத்.2 அல்பகறா – 232
     இன்றைக்கும் விதவைப் பெண்களை வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், வக்கிரத்தோடும் பார்க்கின்ற உலகிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால், பெண்களுடைய மறுமணம் பற்றிச் சிந்தித்ததோடு மட்டுமல்லமல், அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டி, அதற்கான தீர்க்கமான முடிவையும் சொல்லியிருக்கிறார் என்றால் அண்ணலின் துணிவை என்னென்று போற்றுவது?
     அதுமட்டுமல்லாமல், மன வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்ட பிறகு, அவர்களை நல்ல முறையில் வாழச் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறார். அல்லாது அப்பெண்களைப் பழிவாங்குகின்ற நோக்கில் யாரேனும் ஈடுபடுவார்களேயானால் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்வதையும் காணுங்கள்.

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்ல முறையில் அவர்களை உங்களுடன் வாழச் செய்யுங்கள்: அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள்! ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும், தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள்! அப்படி எவரேனும் செய்தால், உண்மையில் அவர் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலும் அல்லாஹ், உங்கள் மீது பொழிந்திருக்கும் அருட்கொடையை நினைவில் வையுங்கள்! மேலும் அவன் உங்கள் மீது இறக்கியிருக்கும் வேதத்தையும், ஞானத்தையும் கண்ணியப்படுத்துங்கள் என உங்களுக்கு அவன் அறிவுரை கூறுகின்றான். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.”
                                                           பாகம்.2. அத்.2. அல்பகறா -  231.
கணவனை இழந்த பிறகும் பெண்ணுக்குப் பாதுகாப்பு:
      கணவனை இழந்தபின், ஒரு பெண்ணுக்கு அவனுடைய உற்றார், உறவினர்கள் பாதுகாப்பு அளிக்காமல் விட்டு விட்டால், அவளுடைய நிலை என்னாவது என்பது பற்றிக் கூட பெருமானார் சிந்தித்து வழி கூறியிருக்கிறார் என்று எண்ணும்பொழுது அவர்தம் தீர்க்க தரிசனத்தை எண்ணி எண்ணிப் போற்றாமல் இருக்க முடியாது. இதோ அவர்தம் திருவசனத்தை நோக்குங்கள்.
உங்கள் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால், அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விஷயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப் பொறுப்புமில்லை. மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றான்.”
                                                           பாகம்.2. அத்.2. அல்பகறா - 240.
ஒழுக்கமுள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு:
     இறை நம்பிக்கையோடும் கற்போடும் வாழும் பெண்களுக்குப் பெருமானார், எத்தகைய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்.

இறை நம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும் அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.”
                                                                             பாகம்.18. அத்.24. அந்நூர் – 19.
கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது”.
                                                                  பாகம்.18. அத். 24. அந்நூர் – 23.
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் அவர்களே தீயவர்கள்.”
                                                             பாகம்.18. அத். 24. அந்நூர் – 4.
விபச்சாரம் செய்யும் ஆண்களுக்கும் தண்டனை:
     இன்றைய சமுதாயம், உலகில் விபச்சாரம் செய்யும் பெண்களை மட்டும் குற்றவாளியாக்கிப் பார்ப்பதும், அவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கத் துடிப்பதுமாக இருக்கின்றது. இயேசுநாதர் வாழ்ந்த காலத்திலும் இக்கொடுமைகள் இருந்ததாக விவிலியம் காட்டுகின்றது. திருவள்ளுவரும் பாரதியாரும் கூடக் கற்பினை இருபாலார்க்கும் பொதுவாக்கிய சமுதாயத்தையே காண விழைந்தனர். இதையெல்லாம் தமது தீர்க்க தரிசனத்தால் நன்குணர்ந்த நமது நபிபெருமானார், விபச்சாரம் செய்யும் ஆண், பெண் இருபாலாரையும் குற்றவாளிகளாக்கித் தண்டனை அளிக்கும்படி அருளியுள்ளார்.
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின்மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள் மீதுள்ள இரக்கம் உங்களைப் பாதித்து விடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும் போது, இறை நம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.”
                                                             பாகம்.18. அத்.24. அந்நூர் – 2.
ஆண் அளிக்க வேண்டிய வரதட்சணை:
     உலகிலுள்ள பல நாடுகளில் வரதட்சணை என்பது இல்லையாயினும், இருக்கின்ற சில நாடுகளில், அது பெரும் தீய பழக்கமாகப் பரவியிருக்கின்றது. வரதட்சணை என்பது, மணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு, மணமகள் வீட்டார் தரவேண்டிய பொருட்கொடையாக இருக்கின்றது. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, இன்றைய சமுதாயத்தில் கட்டாயமாகத் தர வேண்டிய பெரும் பொருட்கொடையாகி விட்டது. இதனால் பல பெண்களின் திருமணம் தடையாகிப் போவதும், திருமணமானப் பெண்கள், வரதட்சணைக் கொடுமையால் சித்ரவதை அனுபவிப்பதும், இறந்து போவதும், பலர் வாழாவெட்டியாவதும் வாடிக்கையாகி வருகின்றது. இது ஒரு பெரும் சமுதாயப் பிரச்சனையாகி, அரசாங்கமே தடைச்சட்டம் போட வேண்டிய கெடுநிலையும் ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தமது தீர்க்க தரிசனத்தால் நண்குணர்ந்த நபிபெருமானார், அன்றைக்கே அதற்கான நல்வழியைக் காட்டிச் சென்றிருக்கிறார். இன்றைய நிலைக்கு மாறாகத் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளுக்குக் கட்டாயமாக வரதட்சணை (மஹர்) கொடுக்க வேண்டுமென அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும், பெண்களுக்கு அவர்களுடைய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்து விடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரைலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம்.”
      பாகம்.4. அத்.4. அன்னிஸா – 4.
முடிவுரை:
      இவ்வாறு பல நிலைகளில் நபிபெருமானர் தமது தீர்க்க தரிசனத்தால், எந்தெந்த வகைகளிலெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை எண்ணி எண்ணிப் பார்த்து, அவர்களுக்கான உரிமைகளை அளிக்கும்படி தமது திருவசனத்தால் வழிகாட்டியிருக்கிறார்கள்.
      ஆயினும் திருக்குரான் அருளப்பட்ட காலச் சூழலை அறியாமலும், பெருமானார் வாழ்ந்த நிலச் சூழலை அறியாமலும், இசுலாம் மார்க்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமலும், வேத வசனங்களை முழுமையாகப் படித்தறியாமலும் இசுலாம், பெண்ணுரிமையை மறுக்கிறது எனச் சிலர் கூறுகின்றனர். இசுலாம் பெண்கள் பர்தா அணிவதையும், கல்வி மறுக்கப்படுவதையும் அதற்கான காரணங்களாகக் காட்டுகின்றனர். பாலைவனப் பகுதியில் வாழுகின்ற ஆண்கள் உடலையும் தலையையும் மூடி உடை அணிவதன் தேவையை உணர்ந்தவர்களும், இன்றைய நவ நாகரீக மோகத்தால் அரை குறை ஆடை அணிகின்ற பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தவர்களும், உலகில் பெரும்பான்மையான இசுலாம் பெண்கள் இன்று கல்வி பெற்றுச் சிறந்து வருவதையும் கண்ணுறுவோர் தம் கருத்தை மாற்றிக் கொள்வாராக! பெண்ணுரிமை தந்திட்ட பெருமகனாரின் பெருமையை உணர்வாராக!


ஆதாரம்:  திருக்குரான். 2009. சென்னை: IFT வெளியீடு.

**********

No comments: