Friday, February 21, 2020

வாழ்வியல் சடங்குகளில் மஞ்சள் நீராட்டு


வாழ்வியல் சடங்குகளில் மஞ்சள் நீராட்டு

கவிஞர், கலைமாமணி நா. இராசசெல்வம்,
ஆசிரியர் (ஓய்வு), புதுச்சேரி, இந்தியா.
முன்னுரை:
       உலகில் மக்களினம் தோன்றிய காலத்தில், அவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்தனர். காலவோட்டத்தில் அவர்களிடையே சமூக அமைப்புத் தோன்றியது. அச்சமூக அமைப்புகளினால் மெல்ல மெல்ல நாகரீகம் மலரத் தொடங்கியது. அந்நாகரீக வாழ்வில் ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கெனத் தனித்தனியாகச் சில செயல்பாடுகளைப் பழக்கமாக்கிக் கொண்டன. அப்பழக்கங்கள் நாளடைவில் அவர்களின் வழக்கங்களாகிப் போயின. அவ்வழக்கங்களே காலச்சுழற்சியில் சடங்குகளாக மாறின. அச்சடங்குகளுள் மிக முக்கிய சடங்காகக் கொண்டாடப்படுகிற மஞ்சள் நீராட்டு விழா என்றழைக்கப்படும் பூப்புச்சடங்கு பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
சடங்கு:
       சடங்கு என்பதனைச் சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு எனக் கூறுவர். அச்சடங்குகள் மக்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிலைகளிலும் காணப்படுகின்றன. சடங்கு என்பது பேச்சு வழக்கில் சாங்கியம் என்றும், சம்பிரதாயம் என்றும் ஐதீகம் என்றும் சொல்லப்படுகிறது. இச்சடங்கு பற்றிய தொன்மைச் சான்றாகத் தொல்காப்பிய நூற்பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன. தொல்காப்பியர் சடங்கைக் ‘கரணம்’ எனக் குறிக்கின்றார்.
’’கற்பெனப் படுவது கரணமொடு புணர…” (தொல். பொருள். கற்பியல். 1)
இந்நூற்பாவிற்குப் பொருள் கூற வந்த இளம்பூரணர், கரணம் என்பது ’வதுவைச் சடங்கு’ எனக் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் ‘கரணமொடு புணர’ என்பதற்கு ’வேள்விச் சடங்கோடு கூட’ என உரை வகுத்துள்ளார்.
மேலும் தொல்காப்பியர்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
 ஐயர் யாத்தனர் கரணம் என்ப”   (தொல். பொருள். கற்பியல். 4)
எனக் காட்டுகின்றார். இதற்குப் பொருள் யாதோவெனின், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைச் செம்மைப்படுத்த, அவற்றை ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர, கரணங்களைச் சான்றோர்கள் யாத்தனர் என்பதாகும். சடங்குகள் வாழ்வு முறைகளுக்கு அரணாக நிற்பது; பாதுகாப்பை அளிப்பது என்ற அடிப்படையில் அரண் என்ற சொல் அரணம் என்றாகிப் பின்னர், அனல் – கனல் ஆவது போல, அரணம் - கரணம் எனத் திரிந்ததாகலாம்.
       சடங்குகள் என்பதனை வடநூலார் ‘‘ஷட் அங்கங்கள்’ என்கின்றனர். சிட்சை, வியாகரணம், நிருத்தம், கல்பம், சந்தஸ், ஜ்யோதிஷம் எனும் ஆறு அங்கங்களைக் கொண்டு செய்யும் செயல்கள் ‘ஷட் அங்கங்கள்’ ஆகும். அந்த ‘‘ஷட் அங்கங்கள்’ என்பதே ’சடங்குகள்’ என மருவியது என்றும் கூறுகின்றனர்.
       மாணிக்கவாசகர், ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கனாகிய நான், உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும் என்ற அறிவில்லாதவனாக இருக்கின்றேன் எனக் கூறும் முகத்தான்,
                     ”சட்ட நேர்ப்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”
(திருவாசகம். திருக்கழுக்குன்றப்பதிகம் 2)
எனப் பாடியுள்ளார். இங்குச் ’சட்ட’ என்ற உரிச்சொல்லாகிய பழைய வழக்குச்சொல்லை, அவர் கையாண்டுள்ளார். ‘சட்ட’ என்ற சொல்லிற்குச் செவ்விதான, ஒழுங்குமுறையான என்பன பொருள்களாகும். இந்தச் சட்ட என்ற சொல்லிலிருந்தே, சட்ட + அம் + கு – சடங்கு என்றாகியது என்று சிலர் கூறுகின்றனர். (விக்கிப்பீடியா)
பதச்சோறாக மேலே காட்டப்பட்ட சான்றுகளால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே சடங்குகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது உறுதியாகின்றது.
வாழ்க்கை வட்டச் சடங்குகள்:
       உலகின் பல நாடுகளிலும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. ஆயினும் நம்நாட்டில் பின்பற்றப்படும் சடங்குகள் பாரம்பரியம் மிக்கவை; உற்றார் உறவினர்களை அழைத்துப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுபவை. தமிழரின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளதற்கு நம்முடைய பாரம்பரிய சடங்குமுறைகளும் ஒரு காரணமாகும். அச்சடங்குமுறைகள் காலந்தோறும் சிற்சில மாற்றங்களைக் கண்டு வந்தாலும், அவற்றை அழியாமல் பாதுகாத்து வருவதில் நம் நாட்டுப்புற மக்களின் பங்கு மிகப் பெரியதாகும். அதிலும் குறிப்பாகப் பெண்களின் பங்கு மிக மிக அதிகமாகும்.
நம் சமூக வாழ்க்கையில் பின்பற்றப்படும் சடங்குகளை வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்பர். அவற்றுள் 1. பிறப்பு, 2. பூப்பு, 3. திருமணம், 4. இறப்பு எனும் நான்கும் அடங்கும். ந்நான்கினுள் பெண்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் குறிப்பிடத்தக்கன. அப்பெண்களுக்கான சடங்குகள் பற்றி பக்தவச்சல பாரதி, “மானுடவியல் நோக்கில் தமிழ்ப்பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் உள்ளன. அவை பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகியன” என்பார். அப்பிரிவுகளுக்குள் பூப்பு எனப்படும் பெண் பருவமடைந்த பின் நடத்தப்படும் நிகழ்வே மிக முக்கிய சடங்காகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் சடங்கு என்றாலே, பெண்ணுக்குச் செய்யப்படும் பூப்புச்சடங்கையே குறிக்கும்.
பூப்புப் பருவம்:
       உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் உடல்சார்ந்த பருவநிலை மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. அப்பருவநிலை மாற்றங்கள் மனித இனத்திலும் ஏற்படுகின்றன. அவை மனித இனத்தின் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதாகும். ஆயினும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை பெண்ணின் 8 வயது முதல் தொடங்குகின்றன. அவ்வயதில் பெண்களின் உடற்கூறு, உளக்கூறு எனும் இருகூறுகளும் வளர்ச்சியடைகின்றன.
உடல்கூறாகச் சிறப்பு ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குகின்றன; மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன; பிறப்புறுப்பில் முடி வளரத் தொடங்குகிறது. உடல் மெருகேறி அழகு பெறுகிறது. இடுப்பெலும்பின் வளர்ச்சி அதிகரித்து இடுப்பு விரிவடைகிறது. இடுப்புப்பகுதியில் சதைப்பற்று அதிகமாகிறது. இறுதியாக அக்குள்களில் முடி வளரத் தொடங்குகிறது.
உளக்கூறாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நால்வகைக் குணங்களும் முந்தி நிற்கின்றன. பெண் ஏறக்குறைய 12 வயதை அடையும்பொழுது பூப்புப்பருவம் எய்துகிறாள். (விக்கிப்பீடியா)
       தமிழிலக்கியங்களில் பன்னிரு பாட்டியல் பருவ வயதையொட்டி ஏழு பருவப் பெண்களைச் சுட்டுகின்றது. அவை  பேதை ( 5 - 8 ), பெதும்பை ( 9 - 10 ), மங்கை ( 11 - 14 ), மடந்தை ( 15 - 18 ), அரிவை ( 19 - 24 ), தெரிவை ( 25 - 29 ), பேரிளம்பெண் ( 30 - 36 ) என்பனவாகும். இதில் மங்கைப் பருவமே பூப்பெய்துகின்ற காலமாகும். அதுவரை சிறுமியாகக் கருதப்பட்டவள், பருவமெய்திய காலம் முதல் திருமணம் ஆகின்ற காலம் வரை கன்னியென அழைக்கப்படுகின்றாள்.
பூப்படைதல்:
       ஆண் குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே ஆண் பிறப்புறுப்பும் அதன்கீழ் விந்தணு உற்பத்தி பைகளும் (விதை பைகள்) அமைந்திருப்பதைப் போல, பெண் குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே பெண் பிறப்புறுப்பும் அதனுள்ளே கர்ப்பப்பையும் (UTERUS) அதன் மேற்புறமாகச் சினை முட்டைகளை உருவாக்கக்கூடிய சினைப்பைகளும் (OVARIES) அமைந்திருக்கும்.
பூப்பு என்பது ஒரு பெண் பருவமடைய தொடங்கும் காலத்தில், அதாவது பெண்பிள்ளையின் 8 முதல் 10 வயது காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களாகும். அது பெண்ணின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் தொடங்குவதாகப் பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் அவை உண்மையல்ல. அவை அப்பெண்ணின் மூளையிலிருந்தே தொடங்குகின்றன. மூளையின் அடித்தளச் சுரப்பி ஹைபோதாலமஸ் (HYPOTHALAMUS) GnRH’ (Gonadotropin – Releasing Hormone) எனும் இயக்குநீரைச் (HORMONE) சுரக்கச் செய்யும். பூப்படைதலுக்கு மூலக்காரணமான இந்த ஹார்மோன் பாலணுக்களை உற்பத்தி செய்யும் உறுப்புகளைத் தூண்டும் கொண்டோட்ராபின் (Gonadotropin) எனும் இயக்குநீரை ’உருவாக்கி வெளியேற்று’ எனப் பிட்யூட்டரி சுரப்பிக்குக் (PITUITARY GLAND) கட்டளையிடும். உடனே அப்பிட்யூட்டரி சுரப்பி FSH எனும் (Follicle stimulating hormone) முட்டைக்கூட்டைத் தூண்டும் இயக்குநீரையும், LH எனும் (Luteinizing hormone) லூட்டின் ஊக்கி இயக்கநீரையும் உருவாக்கி வெளியேற்றும். இவையிரண்டும் சினைப்பைக்குச் சென்று தங்கள் வேலைகளைத் தொடங்கும். அவ்வியக்கநீர்களுள் FSH முட்டைக்கூட்டைத் தூண்டி, கருமுட்டையையும் அதனைச் சுற்றிவரும் செல்களையும் விருத்தியடையத் தூண்டும். அதே நேரத்தில் LH பெண்மைஇயக்குநீரையும் (ESTROGEN), கருப்பைஇயக்குநீரையும் (PROGESTERONE) சுரக்கச் செய்து, கருமுட்டையை வெளியேற்றத் தூண்டும். இவற்றுள் பெண்மைஇயக்குநீர் கருமுட்டை வளர்வதற்கு வசதியாகக் கருப்பையின் அகஉறை (ENDOMETRIUM) வளர்ச்சியையும், கருப்பைஇயக்குநீர் சினைமுட்டை விருத்தியையும் கவனித்துக் கொள்கின்றன.
இந்நிகழ்வுகள் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன. ஆயினும் அவை தொடக்கக்காலத்தில் மிக மிகக் குறைவான அளவில் இரவில் மட்டுமே நடக்கும். பின்னர் இப்பூப்புப் பருவத்தில் அந்நிகழ்வுகள் விரைவுபடுத்தப்படுகின்றன. அதனால் சுமார் 20 கருமுட்டைகள் உருவாகும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும். ஆயினும் அவ்வாறு உண்டாகும் கருமுட்டைகளில் ஒன்று மட்டுமே முதிர்ச்சியடைந்து கருப்பையைச் சென்றடையும். அவ்வாறு முதிர்ந்து கருப்பையைச் சென்றடைகின்ற வாழ்வின் முதல் கருமுட்டை, சிதைந்து கருப்பையிலிருந்து பெண்ணுறுப்பின்வழி இரத்தப்போக்காக வெளியேறும். அப்பொழுது கருமுட்டையோடு, கருப்பையின் உள்ளே கரு வளர்வதற்கு வசதியாக வளர்ந்திருந்த அகஉறையும் (ENDOMETRIUM) சிதைந்து இரத்தப்போக்கோடு சேர்ந்து வெளியேறும். இந்த முதல் இரத்தப்போக்கே பூப்படைதல் (PUBERTY) எனப்படும். சரியான பருவத்தில் முதல் இரத்தப்போக்கு ஏற்பட்டுப் பூப்படைவது, பெண்ணின் ஆரோக்கியத்தையும், அவள் உடல் தாய்மைக்குப் பக்குவப்பட்டுள்ளமையையும் குறிக்கும். அதன்பின் இந்த இரத்தப்போக்கு ஒரு சுழற்சி முறையில் 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். இதுவே மாதவிடாய் எனப்படும். இது ஆளுக்கு ஆள் மாறுபடுவதும் உண்டு. (அன்னா. 2011)
பூப்புச்சடங்கு:
பெண்ணின் முதல் பூப்புக் காலத்தை ஒட்டி நடைபெறும் சடங்குகள் பூப்புச்சடங்கு என்றழைக்கப்படுகிறது. பூப்பெய்திய பெண்ணைத் தனிமைப்படுத்திக் குறிப்பிட்ட நாட்கள் வரை செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளனைத்தும் சடங்குகளாகக் கருதப்படுகின்றன. உடற்கூற்றின்படி நிகழும் இப்பூப்பு, மகளிர்க்கு மங்கலத்தன்மையைக் கொடுக்கிறது; தாய்மைக்கான அடித்தளத்தை இடுகிறது; சந்ததி விருத்திக்கான வாய்ப்பைத் தருகிறது. இதனாலேயே பூப்படைந்த பெண்ணைப் பாராட்டிச் சீராட்டிக் குடும்பமே மகிழ்ந்து கொண்டாடுகிறது.
ஒரு பெண் பூப்படைதலைப் பேச்சு வழக்கில் வயசுக்கு வந்துட்டா, பெரிய பொண்ணு ஆயிட்டா, பெரியவளாயிட்டா, பெரிய மனுஷியாயிட்டா, புஷ்பவதி ஆயிட்டா, ஆளாயிட்டா, சமைஞ்சிட்டா, உட்காந்துட்டா, ருதுவாயிட்டா என்றெல்லாம் பலவாறு குறிப்பிடுகின்றனர்.
பூப்படைதல் என்பது ஒரு இயற்கை நிகழ்வேயாயினும், அதை ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு கோணத்தில் நோக்கி வரவேற்கிறது. அதனால் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு வகையான சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. ஆயினும் பொதுவாக நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தில் பூப்படைந்த பெண் தீட்டுக்குரியவளாகக் கருதப்படுகிறாள். முதல் இரத்தப்போக்கு 5 முதல் 9 நாட்களுக்கு நீடிக்கும். அதனாலேயே சுகாதாரம் கருதி, 9 நாட்கள் வீட்டிற்குப் புறத்தே பாதுகாப்பான இடத்தில் பெண் தனித்து இருத்தப்படுகிறாள். அல்லது வீட்டினுள்ளேயே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்த்தப்படுகிறாள். இவ்வாறு தனித்து விடப்படுவது பலவிடங்களில் மாறுவதுண்டு.
பூப்ப்படைந்த பெண் தனித்து விடப்படுகின்ற செய்தி, சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால், பிறரால் காண்பதற்கு அரியவளாகப் பெண்மை நிரம்பிய பொலிவோடு, நன்கு வெளுத்த மடித்த துகில் போல், அகிலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று புறநானூற்றில் (337) குறிக்கப்பட்டுள்ளது.
பூப்படைந்த பெண் தனியாகத் தங்குவதற்குரிய குடிலைப் பச்சை ஓலையால் தாய்மாமன்தான் கட்டித்தர வேண்டும் என்பது மரபாக இருந்தது. அதுவும் கிராமப்புறங்களில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர் பச்சைவோலைக் குடிசைக்குப் பதிலாகப் பச்சை ஓலையைப் பாய்போலப் பின்னி, அதில் அந்தப் பெண் உட்கார வைக்கப்பட்டாள். தற்பொழுது அப்பெண் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் பச்சை ஓலையைச் சாங்கியம் என்று சொல்லிச் சார்த்தி வைக்கிறார்கள். தனித்திருக்கின்ற அவளுக்குத் தனிப்படுக்கை, தனித்தட்டு, மரஉலக்கை, கத்தி, உப்பு, வேப்பிலைக்கொத்து முதலியன கொடுக்கப்படுகின்றன. தனித்திருக்கின்ற பெண்ணைத் தீய ஆவிகள் துன்புறுத்தாமல் இருக்க இவையெல்லாம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், பெண்ணின் பாதுகாப்பிற்கும், மன தைரியத்திற்கும் அளிக்கப்படுகிறது என்பதே சரியான காரணமாக இருக்கலாம்.
இந்த நாட்களில் அந்தப் பெண்ணிற்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு இருக்குமென்பதால், பச்சை முட்டை, பச்சரிசிப் புட்டு, உளுந்துமாவில் செய்யப்பட்ட பலகாரங்கள் எனச் சத்தான, சுகாதாரமான உணவுப்பண்டங்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும் தனித்திருக்கின்ற இந்நாட்களில் நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான சத்தான உணவுகளை அப்பெண்ணுக்குக் கொடுத்து மகிழ்விக்கிறார்கள்.
பூப்பெய்திய பெண்ணிற்குச் சடங்கு என்பதே, அவளைத் தூய்மைப்படுத்தலேயாகும். இரத்தப்போக்கு ஏற்பட்ட முதல்நாள் அப்பெண்ணை மஞ்சள் கலந்த நீரில் நீராட்டித் தூய்மைப்படுத்தித் தனியிடத்தில் தங்க வைப்பர். அது தாயல்லாத நெருங்கிய உறவினர்களால் செய்யப்படும். தாய் அருகில் இருந்தால் அவள் அச்சமும் கூச்சமும் அடைவாள் என்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. அந்நீராட்டும் வெளிச்சம் மங்கி இருள் கவ்வத் தொடங்கும் மாலை வேளையில் செய்யப்படும். நீராட்டும்பொழுது இரத்தப்போக்கினைக் கண்டு பெண் அஞ்சாது இருக்கவே, அந்நாளில் அவ்வாறு செய்யப்பட்டது. அது இப்பொழுதும் தொடர்கிறது. அதனாலேயே அம்மாலை வேளையை “மாடும் கன்னும் வர வேள…. மஞ்சாத் தண்ணி சுத்தற வேள” எனக்கூறும் நாட்டுப்புற வழக்கும் உள்ளது. இதை முதல் தண்ணி என்று சொல்லுவார்கள். இவ்வாறு நீராட்டுவது ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும். அதாவது மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது, ஒன்பதாவது என் ஒற்றைப்படை நாட்களில் மஞ்சள் நீராட்டிப் புனிதப்படுத்துகிறார்கள். இவ்வாறு 8 நாட்களுக்கு நெருங்கிய உறவினர்களைக் கொண்டு சடங்குகள் நடத்தி வந்தவர்கள், ஒன்பதாவது நாள் உற்றார் உறவினர்களை அழைத்து, மஞ்சள் நீராட்டி வீட்டுக்கு அழைத்துக் கொள்வார்கள்.
மஞ்சள் நீராட்டு விழா:
பூப்படைந்த பெண்ணை ஒன்பதாவது நாள் மஞ்சள் கலந்த தூய நீரில் நீராட்டி வீட்டுக்கு அழைத்தலை நமது சமூகத்தினர் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அதனை வீட்டுக்கு அழைத்தல், தண்ணீர் ஊற்றுதல், சடங்கு செய்தல், மஞ்சள் நீராட்டு, பூப்புப்புனித நீராட்டு எனப் பல பெயர்களிட்டு அழைக்கின்றார்கள். தற்பொழுது பூப்படைந்த பெண்ணை வீட்டுக்கு அழைக்கும் சடங்கைச் பலர் எளிமையாகச் செய்துவிட்டு, பின்னர் தனியாக வெகு விமர்சையாக மண்டபத்தில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
எவ்வாறாயினும் பூப்படைந்த பெண்ணுக்குத் தாய்மாமன் சீர் செய்தல் என்பது ஒரு முக்கியச் சடங்காகக் கருதப்படுகிறது. தாய்மாமன் சீர், அவருடைய குடும்பத்தாரால் வீட்டிலிருந்து மேள தாளத்துடன் கொண்டு வரப்படும். அவை தாய்மாமன் சீர் அல்லது வரிசைத்தட்டுக்கள் எனப்படும். அவற்றில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர் முதலிய அலங்காரப் பொருட்கள் நிரம்பிய தட்டுக்களும், புடவை, ஜாக்கெட், பொன்நகை, மாலை முதலியன கொண்ட ஒரு தட்டும், பலவிதமான இனிப்பு மற்றும் பழங்கள் நிரம்பிய தட்டுக்களும் அடங்கும். அவை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமையும். இந்தத் தாய்மாமன் சீர் ஒரு கட்டாயச் சடங்காகக் கருதப்படுகிறது. இது வசதிக்கேற்ற வகையில் எண்ணிக்கையிலும், செலவிலும் மாறுபடும். மேலும் இது போல நெருங்கிய உறவினர்களின் வரிசைத் தட்டுக்களும் கொண்டு வந்து சபையில் வைக்கப்பட்டுப் பூப்படைந்த பெண்ணுக்கு அன்பளிப்பாகத் தரப்படுகின்றன.
இம்மஞ்சள் நீராட்டு விழா முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் சடங்கேயாயினும், பின்னர்த் தனி மண்டபத்தில் பெருவிழாவாகாகக் கொண்டாடும்பொழுது, ஐயர் வைத்துச் சடங்குகளைச் செய்வது இப்பொழுது வழக்கமாகி வருகிறது.
மஞ்சள்நீராட்டு விழாவில் பூப்படைந்த பெண்ணுக்கு நீராட்டுச் செய்தல், அலங்கரித்தல், சபைக்கு அழைத்து வருதல், குலதெய்வ மற்றும் இறைவழிபாடு செய்தல், தாய்மாமன் சீர் செய்தல், மற்ற நெருங்கிய உறவினர்கள் சீர் செய்தல், தாய்மாமனால் கொடுக்கப்பட்ட புத்தாடைகளைக் கட்டிக்கொண்டு வந்து மனையில் உட்காரவைத்தல், நலங்கு வைத்தல், நலங்கு வைத்த பெண்களுக்குத் தாம்பூலம் அளித்தல், கண்ணேறு கழித்தல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், விருந்தளித்தல் எனச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இச்சடங்குகள் சாதி மற்றும் ஊர் வழக்கப்படி மாறுபடுவது உண்டு.
பிற நாடுகளில் மஞ்சள் நீராட்டு விழா:
பெண்கள் பூப்படைதல் என்பது இயற்கையான நிகழ்வாதலால், அந்நிகழ்வினை உலகிலுள்ள பல நாட்டினர் ஒரு விழாவாகக் கொண்டாடுவதில்லை. ஆயினும் உலகின் பல நாடுகளில் உள்ள பழங்குடியினர் பூப்பெய்தலை வாழ்க்கையின் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொண்டு, சில சடங்குகளைச் செய்கிறார்கள். அவை யாவற்றையும் விரிக்கிற் பெருகும். எனவே அவற்றுள் சிலவற்றை மட்டும் சிற்சில வரிகளில் விளக்குவாம்.
இந்தியாவில் சில பழங்குடியினர் பூப்படைந்த பெண்ணைச் சிலநாட்கள் தனியிடத்தில் ஒதுக்கி வைத்திருந்து, பின்னர் ஓடையில் குளிக்கச் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்வர். சில பழங்குடியினர் பூப்படைந்த பெண்ணைக் கிழக்கு நோக்கிக் கதிரவனைப் பார்த்து அமரச் செய்து நீரூற்றிக் குளிக்கச் செய்வர். பச்சை கோழிமுட்டையை நல்லெண்ணெயில் கலந்து கொடுப்பர். 13 நாட்கள் கழித்துப் பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து கொடுப்பர். இதைப் பச்சமா எனக்கூறி அனைவருக்கும் கொடுப்பர்.
இலங்கையில் தமிழகத்தைப் போன்றே விரிவான சடங்குகளுடன் செய்யப்படுகிறது. அவர்கள் பூப்பு நீராட்டுச் சடங்கினைச் ‘சாமத்தியச் சடங்கு” என்றழைக்கிறார்கள்.
ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளின் சில பகுதிகளில் பெண் பருவமடைந்ததும், வீட்டின் வாசலில் கொடியைக் கட்டிப் பறக்கவிடுவர். இதைப் பார்த்துப் பெண் கேட்டு வருவார்கள் என நம்புகிறார்கள்.
ஆப்பிரிக்காவின் சுலு இனத்தவர் பெண் பருவமெய்திய நாளில் ஆட்டைப் பலியிடுவர். பின்னர் அப்பெண்ணை நதியில் நீராடச் செய்து, உடலெங்கும் சிவந்த களிமண்ணைப் பூசிவிடுவர்.
இந்தோனேசியா, பாலித்தீவு பழங்குடியின மக்கள், பருவமடைந்த பெண்ணின் பற்களைக் கூர்மையாக்குவர். இதனால் அப்பெண்ணைச் சுற்றியுள்ள தீயசக்திகள் விலகுவதாக நம்புகின்றனர்.
உருசியாவில் பருவமடைந்த பெண்ணின் முகத்தில் தாய் ஓங்கி அடிக்க, கன்னம் சிவக்குமானால், அதை நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்வர்.
கானாவில் பருவமடைந்த பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊரைச் சுற்றி வரச் செய்வர். இச்சடங்கை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர்.
நேபாளத்தில் பூப்படைந்த பெண்ணை இருட்டறையில் அடைத்து வைத்திருந்து, ஒரு நல்ல நாளில் அப்பெண்ணுக்கும் சூரியபகவானுக்கும் திருமணச் சடங்கு செய்வர்.
ஜப்பானில் காரணம் ஏதும் சொல்லாமல் உற்றார் உறவினர்களை விருந்துக்கு அழைத்து, உணவில் சிவந்த அரிசியும் பீன்சும் பரிமாறுவர். இதைக் கண்டு வீட்டில் பெண் பருமடைந்துள்ள செய்தியை அறிந்து கொள்வர். (விக்கிப்பீடியா)
முடிவுரை:
மேலைநாட்டினர் பெண்கள் பூப்படைதலை ஒரு வாழ்க்கை நிகழ்வாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் தமிழ்ச்சமூகம் மனித இன வளர்ச்சிக்கு அடிப்படையான பூப்படைதலை, ஓர் ஆதார நிகழ்வாகக் கருதுகிறது. அதனால்தான் அதனை ஒரு முக்கிய சடங்காகவும், ஒரு விழாவாகவும் கொண்டாடி மகிழ்கிறது. ”பெண் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள் என்பதை சமுதாயத்திற்குத் தெரியப்படுத்தவே பூப்புச்சடங்கை எல்லா இனத்தவர்களும் நடத்துகின்றனர்” எனப் பெரியோர்கள் கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. ஆயினும் இந்நாகரீக உலகில் விடாப்பிடியான சடங்குகளுடன் இவ்விழா தேவையா? எனும் வினா ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சுகாதாரத்தின் அடிப்படையில் இச்சடங்குகள் செய்யப்பட்டாலும், அது தீட்டு எனும் போர்வையில் பெண்ணடிமைக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது எனும் குரல் வலுத்து வருவதையும் மறுக்க முடியாது. ஆய்வுலகம் இச்சடங்கினைப் பெண்களின் உளவியல் நோக்கிலும் ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதற்கான தீர்வு கிடைக்கலாம்.
**********
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள்:

1.   தொல்காப்பியம், பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை
2.   தொல்காப்பியம், பொருளதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
3.   பன்னிருபாட்டியல்.
4.   புறநானூறு.
5.   திருவாசகம்
6.   மெய்நிகர்ப் பல்கலைக்கழகம். தமிழ்ப்பட்டப்படிப்புப் பாடப்பொருள்கள்.
7.   பக்தவத்சல பாரதி. 2008. தமிழர் மானுடவியல். கோவை: அடையாளம் பதிப்பகம்.
8.   விக்கிப்பீடியா. 2017. சடங்கு. (இணையதளக் கட்டுரை).
9.   விக்கிப்பீடியா. 2016. பூப்பு. (இணையதளக் கட்டுரை).
10.  தமிழாசான். 2007. தமிழரின் வாழ்வியல் சடங்குகள். (இணையதளக் கட்டுரை).
11.  அன்னா. 2011. அடிப்படை அறிவியல் தொடர் - பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதி. (இணையதளக் கட்டுரை)
**********

No comments: