ஆட்சிக்கும் மீட்சிக்கும் வித்திட்டவர்
சுவாமி விபுலாநந்தர்
கவிஞர், கலைமாமணி நா.
இராசசெல்வம்,
ஆசிரியர் (ஓய்வு), புதுச்சேரி, இந்தியா.
இன்று தமிழரெனும் உணர்வில் விஞ்சி நிற்பவர்கள் ஈழத்தமிழர்களாவர்.
அத்தமிழர்களின் தாயகமாகிய ஈழத்தில் கடந்த இரு நூற்றாண்டுகளில் ஆறுமுகநாவலர், சி.வை.
தாமோதரம்பிள்ளை, சுண்ணாகம் அ. குமாரசுவாமிப்புலவர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்,
சுவாமி விபுலாநந்தர், சேவியர் தனிநாயகம் அடிகள், ம.மு. உவைஸ், கார்த்திகேசு சிவத்தம்பி
போன்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் தோன்றித் தமிழ்த்தொண்டாற்றி வந்தனர். அவர்களுள் சுவாமி
விபுலாநந்தர் ஆற்றிய தமிழ்த்தொண்டு குறிப்பிடத்தக்கது; அளவிடற்கரியது.
பல்வேறு காலகட்டங்களில்
ஏற்பட்ட அந்நியர்களின் ஆதிக்கத்தால் 19-ஆம் நூற்றாண்டில் நமது தமிழுலகம் மதம், மொழி,
பண்பாடு முதலியவற்றில் தமது தனித்துவத்துவத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. நமது
தாய்மொழியாம் செந்தமிழின் சீர்மை கெட்டு, வடமொழி, ஆதிக்கம் பெற்றிருந்தது. அவ்வாதிக்கப்
போக்கினால் அழிந்து கொண்டிருந்த தமிழையும் தமிழ்மக்களையும் காக்க, தம் வாழ்நாள் முழுமையையும்
அர்ப்பணித்தவர் சுவாமி விபுலாநந்தர். அவர் ஒரு சமூகத்துறவியாகவும், பல்துறை சார்ந்த
பேரறிஞராகவும் விளங்கினார். அவர் தமிழுக்காற்றிய தொண்டு என்றென்றும் நினைவிற் கொள்ளத்தக்கது;
காலமெலாம் போற்றிப் புகழத்தக்கது. அவர்தம் தமிழ்த் தொண்டினைப் போற்றிப் பல கட்டுரைகள்
வெளிவந்துள்ளன. ஆயினும் சுவாமி விபுலாநந்தர் அறிவியல்தமிழின் ஆட்சிக்கும், இயல், இசை,
நாடகமெனும் முத்தமிழின் மீட்சிக்கும் வித்திட்டுத் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினை வெளிப்படுத்தும்
நோக்கில் இக்கட்டுரை தொடர்கின்றது.
இளமைப்பருவம்:
சுவாமி விபுலாநந்தர் இலங்கையின்
கிழக்கு மாகாணத்தின் கல்முனைக்கருகில் உள்ள காரைத்தீவு எனுமிடத்தில் பிறந்தார். அவருக்குப்
பெற்றோர் முதலில் இட்டபெயர் தம்பிப்பிள்ளை. அவ்விளம்வயதிலேயே அவரைக் கடுமையான நோய்
தாக்கியது. அந்நோய் நீங்க அவரது பெற்றோர், கதிர்காமம் சென்று இறைவனை வேண்டி நின்றனர்.
இறைவன் அருளால் நோய் குணமாகவே, பெற்றோர் முருகப்பெருமானின் பெயரான மயில்வாகனன் எனும்
பெயரை இரண்டாவதாக அவருக்குச் சூட்டி மகிழ்ந்தனர்; அதனால் தம்பிப்பிள்ளை எனும் பெயர்
மறைந்து மயில்வாகனன் எனும் பெயர் நிலைத்தது.
மயில்வாகனனாரின் கல்வி:
மயில்வாகனனார் தமது பள்ளிப்பருவத்தை அடைந்ததும்,
தொடக்கக் கல்வியைத் தனது தந்தை சாமித்தம்பியிடமும், நல்லரத்தினம், குஞ்சித்தம்பி ஆசிரியர்களிடமும்
பயின்றார். பின்னர் அவர், பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ந்து, ஆங்கிலக்கல்வி பயின்று
அறிவியல் பட்டம் பெற்றார்; இதற்கிடையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் காரைத்தீவு வைத்தியலிங்க
தேசிகரிடமும், புராணங்களைத் தனது மாமன்களான சிவகுருநாதப்பிள்ளை, வரதராசப்பிள்ளையிடமும்
கற்றுத் தேர்ந்தார்; ஆசிரியர்ப் பயிற்சிக்காகக் கொழும்பு சென்றபொழுது, தென்கோவை கந்தையாப்பிள்ளையிடமும்,
சி.தாமோதரம்பிள்ளையிடமும், கயிலாசப்பிள்ளையிடமும் பண்டைய தமிழிலக்கியங்களைப் பயின்று
ஆழ்ந்த புலமை பெற்றார்.
மயில்வாகனனார்
பேராசிரியராதலும் துறவு பூணலும்:
மயில்வாகனனார்
தமது 16-வயதிலேயே மட்டக்கிளப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்;
பின்னர் கொழும்பில் ஆசிரியர்ப் பயிற்சி முடித்தபின், மீண்டும் இரண்டு ஆண்டுகள் அதே
கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் மீண்டும் கொழும்பு சென்று அரசினர் தொழில்நுட்பக்
கல்லூரியில் சேர்ந்தார்; அங்கு அறிவியல் பட்டயப் படிப்பு முடித்து, அக்கல்லூரியில்
இராசயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்; அங்குப் பணியாற்றிய காலத்தில் மாணவர்கள்
மத்தியில் அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் 1917-இல் யாழ்ப்பாணம் புனித
பேட்ரிக் கல்லூரியில் (சம்பத்தரிசியார் கல்லூரி) அறிவியல் ஆசிரியர்ப் பணியை ஏற்றுக்கொள்ளுமாறு
அவரை அழைத்தனர். அதனையேற்று அவர் அங்கு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சென்னை, மயிலாப்பூர்
இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய மயில்வாகனனாரின் உள்ளம், துறவறத்தில் நாட்டம்
கொள்ளத் தொடங்கியது.
மயில்வாகனனார்,
தமக்கு ஏற்பட்ட துறவு நாட்டத்தால் 1922-இல் சென்னைக்குச் சென்று, இராமகிருஷ்ண மடத்தில்
தம்மைச் சங்கமித்துக் கொண்டார். அங்கு அவருக்குப் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச
தீட்சையும் வழங்கப்பட்டன; அங்கு இரண்டு ஆண்டுகள் பயின்ற பின் 1924-ஆம் ஆண்டு சித்திரைத்
திங்கள் பௌர்ணமி நாளில் அம்மடத்தின் தலைவர் சுவாமி சிவானந்தரால் அவருக்குச் சுவாமி விபுலாநந்தர் எனும் துறவறப் பெயர்
சூட்டப்பட்டது. அதுமுதல் மயில்வாகனனார் சுவாமி விபுலாநந்தர் என்றழைக்கப்பட்டார்.
1931-இல் சிதம்பரத்தில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அப்பொழுது, பல்கலைக்கழக் வரலாற்றிலேயே
முதன் முதலாகத் தமிழ்த்துறை தனியாகத் தோற்றுவிக்கப்பட்டுத் தமிழ்ப்பேராசிரியர் பதவியும்
ஏற்படுத்தப்படவிருந்தது. அப்பதவியினை ஏற்குமாறு அண்ணாமலைச் செட்டியார் சுவாமிகளுக்கு
அழைப்பு விடுத்தார். அவர் சிதம்பரம் சென்று, உலக முதல் தமிழ்ப் பேராசிரியர்ப் பதவியினை
ஏற்றுக்கொண்டார். அங்குப் பணியாற்றிய காலத்தில் சுவாமிகள் தம் வாழ்நாளின் பெருஞ்சாதனையான
தமிழர்தம் இசை பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்; 1934-இல் அப்பதவியிலிருந்து தம்மை விடுவித்துக்
கொண்டு, இராமகிருஷ்ண மடத்தின் கல்விப் பணியில் ஈடுபட்டார்; இதற்கிடையில் தமது இசை ஆராய்ச்சிக்காகத்
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து தகவல்களைத் திரட்டி வந்தார்.
1943-இல் இலங்கையில்
பல்கலைக்கழகம் தொடங்கியபொழுது, அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி, அப்பல்கலைக்கழகத்தின்
முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராகத் தம்மை இணைத்துக் கொண்டார்; பேராசிரியர் பதவியுடன்
பாடநூற் சபை, தேர்வு சபை, கல்வியாராய்ச்சி சபை ஆகியவற்றின் கௌரவ உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அங்குத் தமிழ் ஆய்வுத்துறைக்கான விரிவான பாடத்திட்டத்தை முதன் முதலாக வகுத்தளித்தார்.
இவ்வாறு சுவாமி
விபுலாநந்தர் ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, பின் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு,
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும்
இருபதாம் நூற்றாண்டின் தனிப் பெரும் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தார்.
சுவாமிகள் ஆற்றிய மக்கள்தொண்டு:
சுவாமிகள் தாம் பணி செய்த இடங்களிலெல்லாம் ஏழை மக்களைச்
சந்தித்து வந்தார்; குறிப்பாகச் சாதிய பாதிப்பால் நலிவுற்ற மக்களைச் சந்தித்து அவர்களின்
குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறி வந்தார். இதனால் ஏழை மக்கள் யாவரும், சுவாமிகளைப்
‘பெரிய கோவில் வாத்தியார்’ என்றழைத்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணிபுரிந்த பொழுது, சுவாமிகள் சேரிப்புறங்களுக்கு அடிக்கடிச் சென்று
வந்தார்; அங்கு ஏழை மக்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குத் தக்க
ஆலோசனைகளை வழங்கி வந்தார்; திருவேட்களம் எனும் பகுதியில் இருந்த சேரிப் பகுதியில் ஒரு
பாலர்ப் பள்ளியையும், ஒரு முதியோர்க் கல்விக்கூடத்தையும் ஏற்படுத்தி அம்மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படச் செய்தார். சேரிப்பகுதி மக்களிடையே சுவாமிகள் நெருங்கிப் பழகியதால்,
பார்ப்பனர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர்; நன்னீர் தர மறுத்தனர்; ஆயினும் அவ்வெதிர்ப்புகளையெல்லாம்
மீறி ஏழை மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வந்தார்.
அறிவியல்தமிழின் ஆட்சிக்கு வித்திட்ட
சுவாமி விபுலாநந்தர்:
ஆங்கிலத்தில் மட்டுமே அறிவியல் கற்பிக்கப்பட்டு
வந்த காலத்தில், சுவாமிகள் நம் தாய்மொழியாம் தமிழிலேயே அதனைப் போதிக்க வேண்டுமென ஆர்வம்
கொண்டார்; வளர்ந்துவரும் அறிவியலுக்கேற்பத் தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டியது
அவசியம் என்பதை உணர்ந்தார்; அதனால் கலைச் சொல்லாக்கத் துறையில் ஈடுபட்டார்; அதற்கான
பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்; 1934-இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால், பச்சையப்பன்
கல்லூரியில் அமைக்கப்பட்ட கலைச் சொல்லாக்கப் பேரவையின் தலைமைப் பொறுப்பினையேற்றார்;
அறிவியல்தமிழை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கினார். சுவாமிகளின்
இக்கலைச் சொல்லாக்க முயற்சியே அறிவியல்தமிழுக்கு வித்தாக அமைந்தது.
சுவாமிகள் கணிதம்,
வரலாறு, தாவரவியல், விலங்கியல், பௌதிகவியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல்,
விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளின் வல்லுநர்களைக் கொண்டு, கலைச்சொல்லாக்க அறிஞர்க்
குழுவினை ஏற்படுத்தினார்; அதன் பொதுத் தலைவராகவும், இராசாயனவியல் இயல்தலைவராகவும் இருந்து,
பத்தாயிரம் தமிழ்க் கலைச் சொற்களைக் கொண்ட ‘கலைச்சொல் அகராதி’ ஒன்றை 1938-இல் வெளியிட்டார்.
உலகில் அறிவியல்தமிழ்
மலர்ச்சிக்கும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் சுவாமி விபுலாநந்தர் ஆற்றிய தொண்டு காலமெலாம்
நினைவிற் கொள்ளத்தக்கது.
முத்தமிழின் மீட்சிக்குச் சுவாமிகள் ஆற்றிய தொண்டு:
அக்காலத்தில் ஆங்கிலமொழிக் கல்வியே ஆதிக்கம் பெற்றிருந்தது.
அப்பொழுது ஆங்கிலத்தில் அறிவியல் பட்டம் பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர், நந்தமிழ்
மீது கொண்ட காதலினால் பெரும் புலவர்களிடம் பாடம் கேட்டுத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக்
கற்றார்; தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தார்.
வடவர்களின் ஆதிக்கத்தாலும், ஐரோப்பிய மொழிகளின்
மோகத்தாலும் நமது இயல், இசை, நாடகமெனும் முத்தமிழும் அழிந்து கொண்டிருந்தன. அதனை உணர்ந்து
கொண்ட சுவாமிகள், தமிழர்தம் தொன்மைச் சிறப்பைத் தோண்டியெடுத்தார். சுவாமிகளின் முயற்சியின்றேல்
நந்தமிழின் பழம்பெருமை புதைந்து போயிருக்கும்; இசைத்தமிழ் முற்றிலும் நசிந்து போயிருக்கும்;
நாடகத்தமிழ் பற்றிய செய்திகள் மறைந்து போயிருக்கும். சுவாமிகளின் அரும்பெரும் முயற்சியால்
முத்தமிழும் மீட்சி கண்டன.
சுவாமிகள் ஆற்றிய இயற்றமிழ்த்
தொண்டு:
தமிழ்க்கல்விக்கு
வழி வகுத்தார்:
தமிழர்கள் தமிழை மறந்தனர்; தமிழ்க் கல்வியைத் துறந்தனர்;
பிற மொழி மோகத்தால் தமிழ்ப் பண்பாட்டை இழந்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய சுவாமிகள்,
யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடன் இணைந்து, தாய்மொழிக் கல்விக்கு மக்களை ஊக்குவித்தார்;
யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் மூலமாகப் பல இளைஞர்களைத்
தமிழ்ப் படிக்கச் செய்தார்; இச்சங்கத்தின்வழி பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர்
எனும் மூன்று தேர்வுகளை நடத்தி இலங்கையில் பல பண்டிதர்களை உருவாக்கினார்; தாம் செல்லுமிடமெல்லாம்
பாமர மக்களைச் சந்தித்து, அவர்களைக் கல்வி கற்கச் செய்தார்; பல கல்விக்கூடங்களை நிறுவினார்.
இலங்கையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வருமாறு:
o மட்டக்கிளப்பு உப்போடை “சிவானந்த வித்தியாலயம்”
எனும் ஆண்கள் பாடசாலை.
o யாழ்ப்பாணம் வைத்தீசுவர வித்தியாலயம்.
o திரிகோணமலை இந்துக் கல்லூரி.
o மட்டக்கிளப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக் கல்லூரி.
o காரைத்தீவு சாரதா வித்தியாலயம்.
o தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத
குறையைப் போக்க விவேகானந்தா வித்தியாலயம்.
o கொழும்பு, மட்டக்கிளப்பு, திரிகோணமலை ஆகிய இடங்களில்
இராமகிருஷ்ண ஆசிரமம் மற்றும் பள்ளிகள்.
உரைநடை மற்றும் கவிதைகள்:
சுவாமி விபுலாநந்தர் பல ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும்
ஆங்கிலத்திலும் எழுதித் தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். சங்ககாலத்துத் தெய்வ வழிபாடு,
தொல்காப்பியமும் சைவமதமும், யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலவர் சரித்திரம், சோழமண்டலத்தமிழும்
ஈழமண்டலத்தமிழும், இலக்கியச்சுவை, ஐயமும் அழகும், வண்ணமும் வடிவும், நிலவும் பொழிலும்,
கவியும் சால்பும் போன்ற பல கட்டுரைகள் அதற்குச் சான்றாக விளங்குகின்றன. இவையேயன்றி
நடராஜ வடிவம், தில்லை திருநடனம், உமாமகேஸ்வரம் போன்ற வசன நூல்களையும் அவர் எழுதினார்;
கணேச தோத்திர பஞ்சகம், குமார வேணவ மணிமாலை, விபுலாநந்தக் கவிமலர் போன்ற கவிதைத் தொகுதிகளையும்
வெளியிட்டார்.
மொழிபெயர்ப்புப் பணி:
சுவாமிகள் தாகூர், மில்டன் கவிதைகளில் சிலவற்றையும்,
சேக்ஸ்பியரின் நாடகங்களின் சில பகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்தார்; ஆழ்வார் பாடல்கள்
மற்றும் திருவிளையாடற் புராணத்தின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; மேலும்
பல ஆன்மீகக் கட்டுரைகளையும், விவேகானந்த ஞான தீபம் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும்
எழுதி வெளியிட்டுள்ளார்.
இதழியல்பணி:
சுவாமிகள் 1922-இல் இராமகிருஷ்ண மடத்தில் தம்மை இணைத்துக் கொண்டு,
இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்ற ஆங்கில் சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து
பல அரிய கட்டுரைகளை எழுதினார். அவர் வட இந்தியாவின் அல்மோராவில் இருந்த காலத்தில் பிரபுத்த
பாரதம் என்ற இதழின் ஆசிரியராக இருந்து பல ஆன்மீகக் கட்டுரைகளை எழுதி, நமது இந்தியப்
பண்பாட்டின் தனித்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
பகைவர்களிடமிருந்து பாரதியை மீட்டெடுத்தார்:
பாரதியாரின் முற்போக்குக்
கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, சாதி வெறி பிடித்த பண்டிதர்கள் பாரதியை வெறுத்தார்கள்;
அவமதித்தார்கள்; அவர் பாடல்களை இலக்கியமாக ஏற்க மறுத்தார்கள்; அதனை மக்களிடம் கொண்டு
செல்ல முடியாதபடி தடை செய்தார்கள்; பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.
இவற்றையெல்லாம் மீறி, பாரதியார் இன்று ஒரு மகாகவியாகப் போற்றப்படுகிறார் என்றால், அதற்கொரு
முக்கிய காரணமானவர் நம் சுவாமிகளேயாவார்.
சுவாமிகள்
1932-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் கழகம் (Bharathi Study Circle) ஒன்றை
ஏற்படுத்திப் பாரதியாரைப் பல்கலைக் கழக மட்டத்திற்குக் கொண்டு சென்றார்; அவருடைய பாடல்களைப்
பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்தார்; தாம் ஆற்றிய சொற்பொழிவுகளில் எல்லாம் பாரதியின்
பாடல்களை மேற்கோள் காட்டி, அனைவர் நெஞ்சிலும் பாரதியைப் பதியச் செய்தார். சுவாமிகளின்
முயற்சி இல்லாது போயிருந்தால், பாரதி மறைவுக்குப்பின், அவரது பாடல்களும் மறைந்தே போயிருக்கும்.
கலைச்சொல்லாக்கப் பணி:
வளர்ந்து வரும் அறிவியலைப் புரிந்து கொள்ளவும், புதிய புதிய
ஆக்கங்களத் தெரிந்து கொள்ளவும் தமிழில் கலைச்சொல்லாக்கம் தேவையென அனைவரும் கருதினர்.
சொல்லாக்கக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அம்முயற்சிக்குத் தாமே தலைமையேற்றுத் தமிழில்
கலைச்சொல்லகராதி ஒன்றை வெளியிட்டார்.
இவ்வாறு சுவாமிகள்
எழுதிக் குவித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கவிதைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், கலைச்சொல்லகராதியும்
இன்னபிறவும் இயற்றமிழின் தொண்டுக்குச் சாட்சிகளாக, இன்றளவும் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
சுவாமிகளின் நாடக ஆராய்ச்சி:
சுவாமிகள் 1924-இல் மதுரைத் தமிழ்ச் சங்க 23-வது
ஆண்டுவிழாவில் சங்கச் செயலாளர் டி.சி. சீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கிணங்க ‘நாடகத்
தமிழ்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவ்வுரையினைக் கேட்ட பெரும்புலவர் உ.வே. சாமிநாதய்யர்
உள்ளிட்ட தமிழன்பர்கள் யாவரும், அதனை நூலாக்க வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி,
அதனை ‘மதங்க சூளாமணி’ எனும் நூலாக்கித்
தந்தார். அந்நூல் உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் எனும் முப்பிரிவினைக் கொண்ட
ஒருபெரும் நாடக ஆராய்ச்சி நூலாகத் திகழ்கிறது.
நமது முத்தமிழின்
ஒரு கூறாகிய நாடகத்தமிழின் இலக்கண, இலக்கிய நூல்களெல்லாம் கடற்கோள்களால் அழிந்துபட்டன;
எஞ்சியவை நமது அறியாமையால் நீருக்கும் நெருப்பிற்கும் இரையாக்கப்பட்டன. இந்நிலையில்
சுவாமிகளின் மதங்க சூளாமணி ஒரு புதையலாய் நமக்குக் கிடைத்தது நாம் பெற்ற பேறேயாகும்.
இதுமட்டுமன்றி,
ஆங்கில நாடக ஆசிரியர் சேக்சுபியரின் நாடகங்களின் சில பகுதிகளையும் சுவாமிகள் தமிழில்
மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.
சுவாமிகளின் இசைத்தமிழ் ஆராய்ச்சி:
அக்காலத்தில்
காரைத்தீவு கண்ணகிக் கோவிலில் (ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்), ஆண்டுதோறும் கண்ணகி வாழ்க்கை
வரலாற்று நிகழ்வுகள் நாட்டியமாகவும், இசைப்பாடலாகவும் அரங்கேறி வருவது வழக்கமாயிருந்தது.
விபுலாநந்தர் சிறுவனாயிருந்த காலத்தில் ஆண்டுதோறும் வழக்குரை காதையைப் பாடலாகக் கேட்டுப் பழகியதால், அச்சிறு வயதிலேயே
சிலப்பதிகாரத்தின்மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது; பிற்காலத்தில் கொழும்பில்
கயிலாசப்பிள்ளையிடம் சிலப்பதிகாரம் பாடம் கேட்ட காலத்தில், அவ்வீர்ப்பு, இசையின்மீது
ஓர் ஆர்வமாக மாறியது; அவ்வார்வம் இசை பற்றிய தேடலாக மலர்ந்தது; இத்தேடல் 1931-இல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கிய பொழுது, இசை ஆராய்ச்சியாகத் தொடர்ந்தது.
சுவாமிகள் பழந்தமிழர்
இசை பற்றியும், பல்வகை யாழ் பற்றியும் ஆராயத் தொடங்கினார்; சிலப்பதிகாரத்தின் இசை நுட்பங்களையெல்லாம்
புரிந்து கொள்வதற்காக, இசை மேதை பொன்னையாப்பிள்ளையிடம் இசை இலக்கண நுட்பங்களைப் பாடம்
கேட்டு, அறிந்து கொண்டார்; தமிழுக்கெனத் தனியான இசைமரபு உண்டென்பதைக் கண்டார். ஆனால்
அங்குப் பார்ப்பனர்களும், தெலுங்கர்களும் இதற்கெதிரான கருத்தையுடைவர்களாக இருந்தார்கள்.
அதனால் அவரின் இசையாராய்ச்சி அங்கே தடைபட்டது. 1934-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து
விலகி, இராமகிருஷ்ண மடத்தின் கல்விப் பணியில் ஈடுபட்டார். பின்னர் 1936-இல் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் சுவாமிகள் பழந்தமிழருடைய யாழ்கள் பற்றியும்,
அதன் அமைப்புகள் பற்றியும் விரிவாக ஓர் உரையாற்றினார். தமது அறிவியல் அறிவையும், கணிதத்
திறனையும் கொண்டு படங்களுடன் சுவாமிகள் ஆற்றிய ஆய்வுரையைக் கேட்ட அனைவரும் அதனை நூலாக்க
வேண்டினர். பணிச்சுமையின் காரணமாக அது தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. ஆயினும்
சுவாமிகளின் உள்ளத்தில், அது பற்றிய சிந்தனை கனன்று கொண்டேயிருந்தது. வங்கியம், சங்கீத
பாரிஜாதகம், நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள், பாரிஜாத வீணை, நீரர மகளிர் இன்னிசைப்பாடல்,
பண்ணும் திறனும், சூழலும் யாழும், எண்ணும் இசையும், பாலைத்திரிபு, சுருதி வீணை, இயலிசை
நாடகம் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார்.
இந்நிலையில் சுவாமிகள்
இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இமயமலைப் பகுதிக்குச் சென்றார். அங்கு அல்மோராவில் மாயாவதி
ஆசிரமத்தில் ’பிரபுத்த பாரதம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்; அங்குக்
கிடைத்த ஓய்வு நேரத்தில் யாழ் பற்றிய ஆய்வில் மீண்டும் ஈடுபட்டார்; பின்னர் அவ்வாராய்ச்சியை
முழுமை செய்யும் நோக்கில் ’பிரபுத்த பாரதம்’ ஆசிரியர்ப் பணியையும் விடுத்தார்; தமிழ்நாடு
முழுவதும் பயணம் செய்து யாழ் பற்றிய தகவல்களைத் திரட்டினார்; சென்றவிடமெல்லாம் முத்தமிழின்
சிறப்புகளை எடுத்துரைத்தார். சுவாமிகளின் ஆய்வில் கண்டுணர்ந்தவை யாவும் ’யாழ்நூல்’ எனும் முழு வடிவம் கண்டது. அது
பாயிரவியல், யாழுறுப்பியல், இசைநரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல்,
ஒழிபியல் எனும் ஏழு இயல்களைக் கொண்டிருந்தது. அதன் மூலம் தமிழிசையின் தொன்மையையும்
ஆழத்தையும் நிறுவினார்; அடியார்க்குநல்லார் உரையிலும் விளங்காத சிலம்பின் இசைநுட்பங்களை
வெளிப்படுத்தினார். பண்டைத் தமிழரின் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ்,
சீறியாழ், சகோடயாழ் போன்றவற்றிற்கு உயிர் கொடுத்தார்.
சுவாமி விபுலாநந்தரின்
பல்லாண்டு கால ஆய்வில் கண்டுணர்ந்த ’யாழ்நூல்’, 1947-இல் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரவுடன்
திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞான சம்பந்தர் சந்நிதானத்தில்
அரங்கேற்றம் செய்யப்பட்டது. இசை விற்பன்னர்கள் முன்னிலையில் தேவாரப் பண்களைச் சுவாமிகள்
தாமே இசையமைத்து 1947 ஆனித் திங்களில் நூலை அரங்கேற்றினார்.
யாழ்நூல் அரங்கேறிய காலத்தில் சுவாமிகள்
பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்; தமது 45 ஆண்டு கால கனவு நிறைவேறிய மகிழ்ச்சியோடு,
நூல் அரங்கேறிய அடுத்த ஒரு திங்களில் 1947 ஆடி 19-ஆம் நாள் விண்ணுலகடைந்தார். தம் குருவின்
பெயரால் மட்டக்கிளப்பில், அவர் தோற்றுவித்த சிவானந்த வித்தியாலயத்தின் முன்றலிலுள்ள
மரத்தின்கீழ் சுவாமிகளின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. முத்தமிழின் மீட்சிக்குத்
தம் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்து, ஓயாதுழைத்த சுவாமிகள் அங்கு ஓய்வெடுத்துக்
கொண்டார்கள்.
முடிவுரை:
ஓர் அறிவியல் ஆசிரியராகத்
தம் வாழ்க்கையைத் தொடங்கிய விபுலாநந்த சுவாமிகள், தமிழர்கள் செய்த தவப் பயனால் ஒரு
தமிழ்ப் பண்டிதராக உருவெடுத்தார்கள். அவர் ஓர் ஆத்ம ஞானி, சமூகத்துறவி, அறிவியல் ஆசிரியர்,
பன்மொழிப் புலவர், இயற்றமிழ்வாணர், இசைத்தமிழ் ஆய்வாளர், நாடகத்தமிழ் வல்லுநர், பாடசாலை
முகமையாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், பாடத்திட்ட
வரைவாளர், கலைச்சொல்லாக்க அறிஞர் எனப் பல்துறைப் பேரறிஞராகப் பணியாற்றினார்கள்; இன்று
நான்காம் தமிழாகப் போற்றப்படும் அறிவியல்தமிழுக்கு வித்திட்டு, அதன் வளர்ச்சிக்குக்
கால்கோள் இட்டார்கள்; இயற்றமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்தினார்கள்; பல்வகை யாழையும்
மீட்டு இசைத்தமிழுக்கு உயிர் கொடுத்தார்கள்; நாடகத்தமிழுக்கு வாழ்வளித்தார்கள். இவ்வாறு
அறிவியல்தமிழின் ஆட்சிக்கும், முத்தமிழின் மீட்சிக்கும் சுவாமிகள்
ஆற்றிய தொண்டு, என்றுமுள தென்தமிழின்
காலமுள்ள அளவும் போற்றப்படும். போற்றப்படவேண்டியது தமிழரின் கடமையுமாகும். வாழ்க சுவாமி
விபுலாநந்தர்! வளர்க அவர்தம் புகழ்!
*****
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்:
1.
அந்தனி
ஜீவா. 1992. சுவாமி விபுலாநந்தர். கொழும்பு:
சுவாமி விபுலாநந்த நூற்றாண்டு விழாச்சபை.
2.
அரங்கராஜ்.
ஜெ.முனைவர் (தொகுப்பாசிரியர்). 2009. சுவாமி
விபுலானந்தர் பேச்சும் எழுத்தும். சென்னை: தோழமை வெளியீடு.
3.
அருள்
செல்வநாயகம். 1956. விபுலாநந்தத் தேன்.
சென்னை: பாரி நிலையம்
4.
அருள்
செல்வநாயகம். 1965. விபுலாநந்த ஆராய்வு.
சென்னை: கலைமகள் காரியாலயம்.
5.
விபுலானந்த
சுவாமிகள். 1926. மதங்க சூளாமணி என்னும் ஒரு
நாடகத் தமிழ்நூல். மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை.
இணையதளக் கட்டுரைகள்:
1.
ஆறாம்திணை, இணையத் தமிழிதழ். 26.09.2007.
2.
இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர், தேசிகன், தமிழ்மணி (தினமணி) 08.02.2009.
3.
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்தர். க. ஜீவரதி. உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்,
தினகரன் வாரமஞ்சரி. 31.03.2013.
4.
சுவாமி விபுலாநந்த அடிகள். மதுசூதனன்.
5.
சுவாமி விபுலானந்தர். கலாநிதி பேரா. சி. மௌனகுரு. தினகரன் வாரமஞ்சரி.
31.03.2013.
6.
தமிழறிஞர் விபுலானந்தர். எஸ். சுதர்சன்.
7.
பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் தமிழ்ப்பணிகள். மேகராசா. த. (கவிஞர் மேரா), வலயக்கல்வி அலுவலகம்,
மட்டக்கிளப்பு.
**********
No comments:
Post a Comment