Tuesday, December 17, 2019


திருவள்ளுவரும் வாத்சாயனரும்


கவிஞர், கலைமாமணி,  முனைவர்  நா. இராசசெல்வம்
தமிழ் விரிவுரையாளர் (ஓய்வு),
குறிஞ்சி நகர், புதுச்சேரி605008. இந்தியா.
கைபேசி: 0091 9486009909.

                                                            மின்னஞ்சல்: nrajaselvam@gmail.com


     தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதும், அதனை அழியாமல் பாதுகாப்பதும் எல்லா உயிர்களுக்கும் உள்ள பொதுவான குணம். இயற்கையில் ஒவ்வோர் உயிரும் அதற்கான திறன்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் எல்லா உயிர்களும், அதற்குரிய பருவம் எய்தியதும் அம்முயற்சியில் ஈடுபடுவது இயற்கையில் நடக்கின்ற செயல்களாகும். அம்முறையில் செடி, கொடி, பூச்சி, பறவை மற்றும் விலங்கினங்கள் யாவும் உரிய பருவம் எய்தியதும், பருவ உந்துதலால் உறவில் ஈடுபட்டுத் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இவ்வினப்பெருக்க முயற்சி, மனித இனத்திற்கும் பொருந்துவதாகும். ஆனால் மனிதஇனம் மட்டும் தன் இனம் அழியாமல் பாதுகாப்பதில் முன்னிற்கிறது. அது பிற உயிரினங்களை அடக்கியும், நசுக்கியும், அழித்தும் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதில் முனைந்து செயல்படுகிறது. தொன்மைக் காலத்தில் மனிதஇனம், இவ்வினப்பெருக்க முயற்சியில் பெண்களுக்காகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு மடியத் தொடங்கியது. அதைக் கண்ட ஆன்றோர்கள் சிலர், சிந்திக்கத் தொடங்கிக் குடும்ப முறையை அறிமுகப்படுத்தினர். அப்படிச் சிந்தித்து வாழ்ந்த மக்களுள் தமிழர்கள் சிறந்து விளங்கினர். ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டு முறையில் உயர்ந்து நின்றனர். அதில் களவு, கற்பு எனும் உயர் பண்பாட்டு நிலையைக் கொண்டனர். இவ்வாறு உயர்ந்த நாகரிகத்தோடு வாழ்ந்த தமிழர்களின் வாழ்விடங்களில் மெல்ல ஆரியர்கள் புகுந்தனர். இதனால் நமது தமிழ்ப் பண்பாட்டோடு ஆரியம் கலந்தது. ஆரியக் கலப்பால் சாதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களுள் பலர் அடிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு அடிமைப்பட்ட மக்கள் நாளடைவில் அறியாமையில் மூழ்கினர். அறவாழ்விலிருந்து நெறிபிறழ்ந்தும் முறை தவறியும் நடக்க ஆரம்பித்தனர். இதனால் மக்களைக் காக்க அறவோர் பலர் முயன்றனர். அவர்களுள் திருவள்ளுவரும் ஒருவர். அவர் தமிழர்தம்அறம் பொருள் இன்பம்எனும் முப்பொருள் கோட்பாட்டை மையமாகக் கொண்டு திருக்குறளைப் படைத்தார். அது முப்பால் என வழங்கப்பட்டது. அப்முப்பாலுள் ஒன்றாகிய காமத்துப்பாலையும், வடமொழி நூலாகிய வாத்சாயனரின் காமசூத்திரத்தையும் ஒப்பிட்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறளில் முப்பொருள் மரபு:

     தொன்மைக் காலத்தில் தமிழர்தம் வாழ்க்கை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மூன்றாக விரிவடைந்தது. இதனைத் தொல்காப்பியர்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
 கன்பொடு புணர்ந்த ஐந்திணை(தொல்.பொருள்.கள. 1)
என்றும்,

அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
 மும்முதற் பொருட்கும் உரிய என்ப(தொல்.பொருள்.செய்.102)
என்றும் கூறியிருப்பதிலிருந்து உணரலாம்.

இதனையே,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்எனப் புறநானூறும், (28-15)
அறம் பொருள் இன்பமென் றம்மூன்றின்எனக் கலித்தொகையும், (141 -3)
ஆற்றல்சால் கேள்வி யறம்பொரு ளின்பம்எனக் குறிஞ்சிப்பாட்டும், (வெண்பா- 2)
வடுவிலா வையத்து  மன்னிய மூன்றுஎன நாலடியாரும் (114)
கூறியுள்ளன. இதனால் பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருள் கோட்பாட்டைக் கொண்டு வாழ்ந்திருந்தனர் என்பது தெளிவாம்.
      
     ஆயினும் பரிமேலழகர், காமத்துப்பால் உரையின் தோற்றுவாயில்,

இவர் பொருட் பாகுபாட்டினை அறம், பொருள், இன்பம் என
வடநூல் வழக்கு பற்றி ஓதுதலான்
என்று மொழிந்துள்ளதைக் காட்டித் திருக்குறளின் முப்பொருள் கோட்பாடு வடமொழி வழக்கமே என்று சிலர் கூறி வந்த பொழுது,

மறைமலையடிகள்,

வடமொழி மனுமுதலான மிருதி நூல்கள் எல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது அறம் பொருளின்ப வழக்கு பற்றியோதாமையும்..”  (மேற்கோள். .. திருநாவுக்கரசு. 1979. பக். 71)
என்று கூறியுள்ளமையாலும்,

..திருநாவுக்கரசு,

இந்த முப்பொருள் மரபு, இந்தியாவிற்கு வெளியே சமசுகிருத மொழியோடு தொடர்புடைய மொழிகளிலும், தொல் பாரசீக மொழியின் வேதமாகிய அவஸ்தாவிலும் காணப் பெறவில்லை. மற்றும் வடமொழியின் வேதங்களிலோ, பழமையான உபநிடதங்களிலோ திரிவருக்கமெனும் முப்பொருள் மரபைக் காண இயலவில்லை……….. வடநாட்டில் தோன்றிய புறச்சமயங்களான பெளத்த, சமண சமய நூல்களில் மும்முதற் பொருள் பற்றிய குறிப்பே கிடையாது. எனவே இதனை வடநாட்டு மரபு எனக் கருத இயலவில்லை. மேலும், திருக்குறளைப் போன்ற அமைப்பில் அறம், பொருள், இன்பம் பற்றிய அறநூல், சமஸ்கிருத மொழியிலோ, பாலி மொழியிலோ, அர்த்தமகதி, அபப்பிரமிசம் போன்ற பிராகிருத மொழியிலோ இன்று வரையில் கிடைக்கவில்லை.”   (.. திருநாவுக்கரசு. 1978. பக். 10)

என்று கூறியுள்ளமையாலும், முப்பொருள் மரபு தமிழர்தம் மரபேயாகும் என்பது உறுதியாம். இம்மரபையொட்டியே திருவள்ளுவரும் தமது நூலை முப்பாலாக வகுத்துத் தந்தார். திருவள்ளுவருக்குப் பின், இடைக்காலத்தில் வடமொழி மரபையொட்டி இலக்கணம் வகுத்த புலவர்கள்தாம்,

அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே(நன். பொதுப். 10)
என விரித்துக் கொண்டனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
காமம் என்றால் என்ன?

     இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் என இருபாலர் படைக்கப்பட்டிருக்கின்றனர். உரிய பருவம் எய்தியதும் இவ்விருவரும் இணைவதற்கு அடிப்படைப் பாலமாகப் பாலுணர்வு படைக்கப்பட்டிருக்கின்றது. அவ்வுயிரினங்கள் அதனைத் துய்க்கும் வகையும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவை அத்தனையையும் இயங்கச் செய்வதற்கான இயற்கையின் அற்புத உணர்வே காமமாகும். காமம் என்பது, பசி, தாகம் போல எல்லா உயிர்கட்கும் இயல்பானது. அது ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்துணர்வது. காமம் இல்லையேல் உலகத் தோற்றமில்லை. எனவே காமம் என்பது எல்லா உயிர்களும் பெறும் இயற்கையான இன்ப உணர்வாகும். இதனை உணர்த்தவே தொல்காப்பியர்,

எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்   (தொல்.பொருள்.பொது. 118)
என்றும்,

காமப்பகுதி கடவுளும் வரையார்  (தொல்.பொருள்.புறத். 23)
என்றும் கூறியுள்ளார்.

     அத்தகைய காமத்தின் இனிமையைத் திருவள்ளுவரும்,

எனைத்தொன்று இனிதேகாண் காமம்  (1202)
என்று மொழிந்துள்ளார். எல்லாவற்றிலும் இனியது என்ற இப்பொருளிலேயே தொல்காப்பியர் காலந்தொடங்கி காமம் என்ற சொல் பயிலப்பட்டு வந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் முழுமையிலும் காண முடிகிறது. தொல்காப்பியம்(3:53-1), திருமுருகாற்றுப்படை(134), பட்டினப்பாலை(39), நற்றிணை(23-9), குறுந்தொகை(2-2), ஐங்குறுநூறு(237-1), பதிற்றுப்பத்து(22-1), பரிபாடல்(6-71), கலித்தொகை(12-12), அகநானூறு(28-1), புறநானூறு(212-3) மற்றும் சங்கம் மருவிய காலப் பாடல்களிலும் காமம் என்ற சொல் காதலின்பம் என்ற உயர் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிற்காலப் புலவர்களுள் பலர், வடமொழி தாக்கத்தால் இத்தகைய உயர்ந்த பொருளுடைய காமம்என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். நாற்றம் என்பதற்கு முற்காலத்தில் மணம் என்ற பொருள் பயன்பாட்டில் இருக்க, வாசம் என்ற வடசொல் புகுந்தவுடன் எதிர்மறைப் பொருளுக்குத் தள்ளப்பட்டது போல, காமம் என்பதைத் திருவள்ளுவர் காதல் எனப் பயன்படுத்தியிருக்க, சரசம் என்ற வடசொல் புகுந்தவுடன் எதிர்மறைப் பொருளுக்குத் தள்ளப்பட்டது. இதனால் பிற்காலத்தில் தூய்மையுடைய காமம் என்ற உயர்நிலைச்சொல் இழிநிலை பொருளுக்குத் தாழ்ந்தது.
காமத்துப்பால்:

     தமிழரின் வாழ்வின் இலக்கணத்தைக் கூறுவது பொருளிலக்கணம். அது அகம், புறம் என இருவகைப்படும். அவற்றுள் அகமென்பது, ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் உள்ளத்திற்கு மட்டுமே புலனாகும் இன்ப நிகழ்வாகும். அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கத்தை அகத்திணைஎன்பர். அவ்வகத்திணையைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்தனர். அவற்றைஅன்பின் ஐந்திணைஎன்றனர். அவ்வன்பின் ஐந்திணைக்கோர் இலக்கியமாகத் திகழ்வது திருவள்ளுவரின் காமத்துப்பால். அது  தலைவன், தலைவியரின் காதல் உணர்வுகளை நுண்ணிதின் விளக்குவது; உளவியல் நோக்கில் அமைந்தது.

     இந்நிலையில் தமிழர்தம் கோட்பாடாகிய அறம், பொருள், இன்பம் என்பதைத் திருவள்ளுவர் கொள்ளாது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனப் பெயரிட்டது,

 தர்மார்த்த காமேப்யோ நம
(அறம் பொருள் இன்பமே போற்றி) என்று காமசூத்திரம் (முதல் நூற்பா) கூறும் வடமொழி மரபையொட்டியே என ஒருசாராரும், காமத்துப்பால் என்பதே திருவள்ளுவர் இட்ட பெயரன்று என ஒருசாராரும் கூறி வந்தனர். அதுமட்டுமல்லாது காமத்துப்பாலைப் பிற்காலத்தவர் வாத்சாயனரின் காமசூத்திரத்தை நினைவில் கொண்டும், காமம் என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டும் குழப்பமடைந்தனர். மேலும் காமம் என்ற சொல்லைக் கொண்டு, காமசூத்திரத்தின் மொழிபெயர்ப்புதான் காமத்துப்பால் என்றும் சிலர் கூறி வந்தனர். இதற்கு

ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்(1109)
என்ற குறளுக்குப் பழைய உரையாசிரியர் பரிப்பெருமாள் பொருள் கூறுமிடத்து,

இது காமப்பகுதியன்றே, இதனை வடநூலாசிரியர் கூறியவாறுபோல விரித்துக் கூறாதது என்னையெனின், அந்நூலகத்து விரித்துக் கூறியதெல்லாம் அளவும் காலமும் வேகமும் ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும், கைக்கிளை, பெருந்திணைப் பாற்பட்ட கன்னியரைக் கூடுந்திறனும், கணிகையர் சீலமும் கூறினார்; ஈண்டு உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின், இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கும் ஆதலான் கூறாராயினார் என்க (திருக்குறள் உரைக்கொத்து. 1958. பக்.41)

என்று கூறியுள்ளமை அவர்கட்குப் பதிலேயாகும். இத்தனை தெளிவுறுத்திய பிறகும், சிலர் காமத்துப்பால்என்ற பெயரை உச்சரிக்கவும் பயந்து, ‘இன்பத்துப்பால்என்று கூறியும் எழுதியும் வரத் தொடங்கினர். இத்தகைய தவறான புரிதலினால் பலர் காமத்துப்பாலைப் படிக்கவும் அஞ்சிப் பலகாலம் தவிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ஐரோப்பியர்களுக்கும் காமத்துப்பாலின் அருமை, பெருமையை உணர்த்தாமல் பலகாலம் இருந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் காமம்என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில்Lustஎன்ற சொல்லிற்குக் கூறப்படும் பொருள்களை (இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா, தகாச் சிற்றின்ப வேட்கை, மட்டில் புலனுகர் ஈடுபாடுசென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி) மனத்தில் கொண்டும் குழப்பமடைந்தனர். 1886-இல் ஜி.யு.போப் திருக்குறள் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னரே, காமத்துப்பாலின் தூய்மையை உலகம் அறியத் தொடங்கியது.
வாத்சாயனர்:

     உலகப் பழமையான மொழிகளுள் வடமொழியும் ஒன்று. அம்மொழி வல்லுநர்கள் வடமொழியை இரு பிரிவுகளாக்கிக் காட்டுவர். அவற்றுள் ஒன்று காலத்தினால் மிகவும் பழமையான வைதிக மொழி. மற்றொன்று பாணினி காலத்திற்குப் பிந்தைய, செப்பனிடப்பட்ட சமஸ்கிருத மொழி. இவற்றுள் வைதிக மொழி எனப்படும் பழமையான மொழியில்தான் இருக்கு, யசூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களும் உள்ளன. இந்நான்கு வேதங்களின் பிரிவுகளாகவும், விரிவுகளாகவும் எழுதப்பட்டவையே சமஸ்கிருத மொழியில் உள்ள பல சாஸ்திரங்களும் நூல்களுமாகும். அச்சமஸ்கிருத மொழியில் பல அரிய செய்திகளை எடுத்துக் கூறும் சாஸ்திரங்களின் மூல நூல்கள் யாவும் சூத்திரங்களாகப் பாடப்பட்டவையாகும். சூத்திரம் என்பது சுருங்கிய நடையில் அமையும் சிறுசிறு வாக்கியங்களால் பாடப்படுவது. அவ்வாறு சூத்திரங்களாகப் பாடப்பட்டுள்ள நூல்களுள் தனியிடம் பெற்ற நூல் காமசூத்திரம். இது வாத்சாயனரால் எழுதப்பட்டது.

     காமசூத்திரத்தின் தோற்றம் நந்திதேவரால் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. கையிலாயத்தில் பரமசிவன் பார்வதிக்கு இடையில் காமம் குறித்து நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திதேவர், அதன் அடிப்படையில் 1000 அத்தியாயங்களைக் கொண்டதாக ஒரு நூல் எழுதியதாகவும், பின்னர் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் ஸ்வேதகேது என்பவர் நந்திதேவரின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் ஒரு நூல் எழுதியதாகவும், அதன் பின்னர் பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும் ஸ்வேதகேதுவின் நூலைச் சுருக்கிக் காமசாஸ்திரம் எழுதியதாகவும், பின்னர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்றாம் நூற்றாண்டிற்கிடையில் பாப்ரவியரின் நூலை ஆராய்ந்து சாராயனர், சுவர்னாபர், கோதகமுகர், கோனர்தியர், கோனிகபுத்திரர், தத்தகர் முதலிய பலராலும் காமசாஸ்திரம் சுருக்கி எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்குச் சில நூற்றாண்டுகளூக்குப் பின் வாத்சாயனர், நந்தி தேவரின் மூல நூலிலிருந்து ஒரு சிறு பகுதியை விளக்கிக் காமசூத்திரத்தைப் படைத்தாகவும், அதை அவரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அச்சூத்திரம்,

மஹாதேவானுசரஸ் நந்தீ சஹஸ்ரேஹ் யாயானாம்
ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச

என்பதாம். இவருக்குப் பின் பலரும் காமசாஸ்திர நூல்களை இயற்றினர். ஆயினும் அவற்றுள் ஒரு சிலவே காமசாஸ்திரம் குறித்துத் தன்னிச்சையாக எழுதப்பட்ட நூல்களாகும். மற்றவை யனைத்தும் வாத்சாயனரின் காமசூத்திரத்தின் உரை நூல்களேயாகும். எனவே காமசாஸ்திர நூல்களிலேயே, வாத்சாயனரின் காமசூத்திரமே மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. காமசூத்திரத்தில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ள நூல்கள் யாவும் இப்பொழுது கிடைக்கவில்லை. அவை அனைத்தும் மறைந்துவிட்டன.
காமசூத்திரம்:

     காமசூத்திரம் என்ற நூல், காம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. காமசூத்திரத்தின் முன்னுரை, மனித வாழ்வில் காமம் இருக்க வேண்டிய பருவத்தைச் சுட்டிப் பேசுகின்றது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், இந்த பூமிக்கு வரும் பயணிகளாகக் கருதப்படுகின்றார்கள் என்று ரிஷிகளும் ஞானிகளும் மொழிந்துள்ளனர். அதனடிப்படையில் வாத்சாயனரும் மனிதனின் வாழ்க்கையை ஒரு பயணமாகக் கருதி, வடமொழி சாஸ்திரங்கள் கூறும் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை புருஷார்த்தங்களை, நான்கு கட்டங்களாகக் கூறுகின்றார்.

1. முதல் கட்டம் பிரம்மச்சரியம். இவ்விளம்பருவம் மற்ற ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலமாகும்.

2.   இரண்டாவது கட்டம் கிரகஸ்த்தம். இப்பருவம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இன்பம்
அனுபவிப்பது, குடும்பத்தைக் காப்பாற்றுவது என இணைந்து கடமைகளாற்றும் காலமாகும்.

3.   மூன்றாவது கட்டம் வானப்பிரஸ்த்தம். இப்பருவம் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட
மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி நின்று அவனுக்கு வழிகாட்ட வேண்டிய காலமாகும். இப்பருவம் எந்த அதிகாரமும் இல்லாமல், ஆனால் அனைத்துமே தன் கண்ணசைவில் நடப்பதைப் பார்த்துப் பெருமிதமாக வாழும் காலமாகும்.

4.   நான்காவது கட்டம் சந்நியாசம். இப்பருவம் எல்லா பொறுப்புகளையும் துறந்துவிட்டு,
ஓய்வாகக் காட்டிலிருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ, வீட்டிலோ பொழுதைக் கழிக்கின்ற காலமாகும்.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அவன் மேற்கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது அரசனின் கடமை என்றும், அவற்றுள் இரண்டாவது கட்டமாகிய கிரகஸ்த்தமே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டிய பருவம் என்றும் வாத்சாயனர் தம் நூலில் கூறுகின்றார். எனவே அவரின் காமசூத்திரம், அவ்விரண்டாவது கட்டத்தில் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. அது வெறும் உடலுறவு முறைகளைப் பற்றி மட்டுமே பட்டியலிடாமல், வாழ்க்கைத் தத்துவங்கள் முழுவதையும் தெளிவாகக் கூறுகின்றது.

     காமசூத்திரம் 7 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

1.   சாதாரணம் (முன்னுரை)
2.   சாம்பிரயோகிகம் (கலவி)
3.   கன்யாசம் பிரயுக்தகம் (மனைவியைத் தேர்ந்தெடுத்தல்)
4.   பார்யாதிகாரம் (மனைவி அதிகாரம்)
5.   பாராதாரிகம் (பிற மனைவியர்)
6.   வைசிகம் (வேசி)
7.   ஒளபமிஷாதிகம் (மருத்துவ அதிகாரம்)

     இவற்றுள் இரண்டாவது அத்தியாயமாகிய சாம்பிரயோகிகம் 10 பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பத்துப் பகுதிகளும் உடற்புணர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. அவையாவன.

1.   பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்ஹாபனம்கலவி வகைகள்
2.   ஆலிங்கன விசாரஆலிங்கனம் செய்தல்
3.   சும்பன விகல்பாஸ்முத்தமிடுதல்
4.   நகார தன ஜாதி - நகங்களைப் பயன்படுத்துதல்
5.   தசன சேதவிஹயோ கடித்தல் மற்றும் பிறதேசத்தாருடன் உறவு கொள்ளுதல்
6.   சம்வேஷன பிரகாராஷ் சித்ரரதானிபல்வேறு பாலுறவு நிலைகள்
7. பிரஹணன பிரயோகாஸ் தத்யுக்தாஷ்ச சித்கிருதகிருமாஉறவின்பொழுது அடித்தல் மற்றும் ஒலி எழுப்புதல்
8.   புருஷோ பாசிருப்தானி புருஷாதியம்ஆண்போல் செயல்படும் பெண்கள்
9.   ஒளபரிஷ்டகம் நவமோவாய்வழிப் பாலுறவு
10. ரத ஆரம்ப அவசானிகம் விசேஸ்ஹ பிரணயகலஷ் பாலுறவு நிலைகளைத் தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல்.

     இவ்வாறு காமசூத்திரம் பாலுறவுக் கல்வியைப் பற்றி விரிவாக அலசி ஆராய்கின்றது. வட நாட்டில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நூலாக இருந்த வாத்சாயனரின் காமசூத்திரம், மேலைநாட்டவர் சிலரின் தவறான மொழிபெயர்ப்பினாலும், மூல நூலில் இல்லாத பாலியியல் சித்திரங்களைப் பிற்காலத்தில் சிலர் இணைத்ததனாலும், காமத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம் சமுதாயத்தில் பரவி விட்டதனாலும், கையிற் கொண்டு படிப்பவரையும் பாதிக்கும் அளவிற்கு இந்நூல் இன்று தாழ்நிலை நூலாகி விட்டது.   
திருவள்ளுவரின் காமத்துப்பால்:

·         திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஓர் அறநூல். அதிலுள்ள காமத்துப்பாலும் அறநூலுக்குரிய தன்மையிலிருந்து சிறிதும் வழுவாமலே காமத்தைக் காட்டுகின்றது.
·       காமத்துப்பால் சங்க இலக்கியத்திலுள்ள அகப்பாடல்களின் கருத்துப் பிழிவாய் இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்ட அகப்பாடல்களாகும்.
·        அகத்திணையைப் பாடுதற்குக் கலியும் பரிபாட்டுமே ஏற்புடைய செய்யுள் வகையெனத் தொல்காப்பியம் (தொல். பொருள். அகத். - 42) கூறியிருக்கத் திருக்குறளின் காமத்துப்பால் குறள் வெண்பாவால் அமைந்த ஒரே அக இலக்கியமாகும்.
·         காமத்துப்பால் அகத்திணை ஏழனுள் கைக்கிளை, பெருந்திணையை நீக்கி அன்பின் ஐந்திணையை மட்டுமே கூறுகின்றது.
·         காமத்துப்பால் ஒத்த தலைவன் தலைவியரிடையே அல்லது கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் உண்மை அன்பின் வெளிப்பாடாகும்.
·         காமத்துப்பால் மலரினும் மெல்லியதான காமத்தை, அதன் செவ்வியறிந்து துய்க்கும் வழியைக் காட்டுகிறது
·         காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறளும் நாடக மாந்தரின் உரையாடல் போல் அமைக்கப்பட்டு இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகிறது..
·         பிறன்மனை நோக்காத பேராண்மையைக் கூறும் திருக்குறளின் காமத்துப்பாலில் ஒருதலைக்காமம், வேசியர்த் தொடர்பு, பிற மகளிர் அல்லது பிறன் மனைவியிடம் கொள்ளும் பொருந்தாக்காமம் போன்ற எவ்விதமான முறையற்ற செயல்களும் குறிப்பிடப்படவில்லை.
·         காமத்துப்பாலின் கற்பியலில், தலைவன் பிரிவைப் பற்றிக் கூறும் குறட்பாக்கள் பரத்தையற் பிரிவைப் பற்றிக் கூறவில்லை. கற்பனை நயத்திற்காகக் கூட பரத்தையற் பிரிவைப் பற்றிப் பேசவில்லை. பரத்தையரைத் தொடர்பு படுத்தாமலே ஊடலைச் சுவைபடப் பேசுகிறது.
·         காமத்துப்பால் கூறும் புணர்ச்சி பற்றிய குறட்பாக்களில் அறுவறுப்போ, ஆபாசமோ இல்லை.
வாத்சாயனரின் காமசூத்திரம்:

·         காமசூத்திரம் முழுக்க முழுக்க காமத்தைப் பற்றியதான காமசாஸ்திர நூல்.
·         காமசூத்திரத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் பாலுறவு பற்றியதாகும்.
·         காமசூத்திரம் மனைவியோடு துய்க்கும் இன்பம் மட்டுமன்றி, ஆடல், பாடல்களில் தேர்ந்த அழகு மகளிர், வேசியர், பிறர் மனைவியர் ஆகியோரிடம் துய்க்கும் இன்பம் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.
·         காமசூத்திரத்தின் ஐந்தாம் பகுதி முழுவதும், ஒருவன் இன்னொருவனுடைய மனைவியைக் கைப்பற்றக் கையாள வேண்டிய உத்திகளையும், வெல்லுவதற்கான வழிகளையும், ஏமாற்றித் தன்வழிக்குக் கொண்டுவரும் முறைகளையும் விளக்கி, முறையல்லாத காம நுகர்ச்சிக்கு வழி காட்டுகிறது.
·          தன்னை விரும்பாத பெண்ணை வலியக் கைப்பற்றி இன்பம் பெறுவதை வாத்சாயனர் கண்டித்துக் கூறாததோடு, அதை ஓர் இயல்பான நிகழ்ச்சியாகக் காட்டுகிறார். (.மருதநாயகம். 2008. பக்.218)
·         பதவியில் இருக்கும் ஆண்கள் எவ்வகைப் பெண்களையெல்லாம் தம்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு பெரிய பட்டியலையே தருகிறார். (மேலது. பக்.218-219)
·         அந்தப்புரத்தில் வாழும் பெண்கள் எப்படியெல்லாம் கள்ளக் காதலுறவுகளை வைத்துக் கொள்வார்களென்றும், அத்தகைய உறவுக்கு யார் யாரையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்களென்றும் ஒரு பெரிய பட்டியலைத் தருகிறார். (மேலது. பக்.217-218)
·         காமசூத்திரத்தின் ஏழாம் பகுதி மூட நம்பிக்கைகள் நிறைந்த பகுதியாகும்.
·         வாத்சாயனரின் காமசூத்திரம் முற்றிலும் ஒரு காம ஆராய்ச்சி நூலாகும்.

ஒப்பீடு:
     திருவள்ளுவரின் காமத்துப்பால் ஒருவன் ஒருத்திக்கிடையே உள்ள உயர்ந்த காதலின்பத்தைக் காட்டுகிறது. வாத்சாயனரின் காமசூத்திரம் ஒரு ஆடவன் பல பெண்களுடன் அனுபவிக்கும் காமஇன்பத்தைக் காட்டுகிறது. காமத்துப்பால் உளவியல் பார்வையோடும், அழகியல் நோக்கோடும் உண்மைக் காதலை விரசமில்லாமல் படம் பிடித்துக் காட்டுகிறது. காமசூத்திரம் விரசத்தோடு முறையற்ற இன்பத்தையும் காட்டுகிறது. காமசூத்திரம் பாலியற் கல்வியைக் புகட்டும் பாட விளக்க நூல். ஆனால் திருவள்ளுவரின் காமத்துப்பால் ஒரு காதல் இலக்கியம். மென்மையான காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஒப்பற்ற காவியம். காமத்தினையும் இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா? என்று உலக அறிஞர்களெல்லாம் வியந்து பாராட்டும் ஓர் உன்னத இலக்கிய எடுத்துக்காட்டு.

மலரினும் மெல்லிய காமம்:

      காமத்துப்பாலையும், காமசூத்திரத்தையும் ஒப்பிட்டுக் காண்பார்க்குத் திருவள்ளுவரின் உயர்ந்த உளவியல் நோக்கும், நுட்பமான முருகியல் பார்வையும் தெள்ளிதின் விளங்கும். அத்தகைய காமத்துப்பாலின் மலரினும் மெல்லிய காமச்சுவையைப் பதச்சோறாகச் சில குறாட்பாக்களைக் கொண்டு காட்டுவாம்.

1.   தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். தலைவியின் முகத்தை நேருக்கு நேர் காணத் துடிக்கிறான் தலைவன். ஆனால் அவள் நாணத்தால் நிலத்தை நோக்குவாள் போல் தலை கவிழ்ந்து நிற்கிறாள். அவன் முகத்தை அவள் நேர்கொண்டு பார்க்கவில்லை. அவள் முகத்தைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் தலைவனுக்கு. அவன் அவள் நிலையை உணர்ந்து கொண்டான். நாணத்தைப் புரிந்து கொண்டான். வேறு திசையில் பார்ப்பது போல் தன் தலையைத் திருப்புகிறான். உடனே தலைவி, தலைவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அவனை நோக்கி மெல்ல நகைக்கிறாள். இதைத் தலைவனும் பாராதது போல் கண்டு மகிழ்கிறான். அவள் பார்வையில் வெளிப்படும் காதலை உணர்கிறான். இதோ அந்தக் குறள்:

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் (1094)

என்னே காதலின் நுட்பமான வெளிப்பாடு! நேர்த்தி! அழகு! கவிதை! அத்தனையும் வடித்துக் காட்டும் அற்புதம். விரசம் இல்லாத காமம். இதுதான் வள்ளுவத்தின் பெருமை, உயர்வு, அழகு.

2.   தலைவன் தலைவியைப் புணர்ந்து இன்பம் துய்க்கிறான். தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடர்கிறது இன்பம். அது முடிந்தபாடில்லை. காமம் மிகுந்து கொண்டே போகிறது. அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அவன் தவிக்கிறான். அதன் காரணத்தைத் தேடுகிறான். அவனுக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. நூல்களாலும் நுண்ணுணர்வாலும் அறிவு பெருகப் பெருக, தனக்கு முன்னிருந்த அறியாமை புலப்பட்டது போல, தலைவியோடு இன்பம் துய்க்கத் துயக்க அவளோடு உள்ள காதல் அடங்காது பெருகுவதை உணர்கிறான். அக்காட்சியைக் காட்டும் குறள் இதோ:
அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.”  (1110)
தலைவனும் தலைவியும் புணர்ந்து இன்பம் காண்கின்றனர். அவர்களின் இன்பநிலையை உணர முடிகிறது. காதல் தவிப்பை அறிய முடிகிறது. புணர்ச்சி பற்றிப் பேசுகிற இக்குறட்பாவில் பாலுறுப்புகள் பற்றிய வர்ணனையோ, காட்சியில் விரசமோ இல்லை. வள்ளுவரின் மலரினும் மெல்லிய காமம்தான் மட்டும்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் காமத்துப்பால்.
3.   காதல்தலைவி தன் காதலனைக் காண விழைகிறாள். அவனுடன் சேர்ந்து இன்பம் காணவும் துடிக்கிறாள். அவனும் வருகிறான். அவளை அணைக்க முற்படுகிறான். ஆனால் அவளால் அவனை நெருங்க முடியவில்லை. நாணம் அவளைத் தடுக்கிறது. அதுவே அவளுக்குப் பகையாகி நிற்கிறது. என்ன செய்வாள் அவள்! பாவம் தவிக்கிறாள். தலைவனுக்குக் கோபம். அவன் திரும்ப எத்தனிக்கிறான். சரி தலைவனைப் போகவிடலாம் என்றால், அதுவும் அவளால் முடியவில்லை. அவளுடைய காமம் அவளை வருத்துகிறது. நாணத்தை விடுவாளா? காமத்தை விடுவாளா? இரண்டையும் விட முடியாமல் தவிக்கிறாள். தன் நெஞ்சத்தை நோக்கிக் கெஞ்சுகிறாள். நெஞ்சே! ஒன்று காமத்தை விடு. இல்லையேல் நாணத்தை விடு. இரண்டையும் ஒரு சேரத் தாங்கும் வலிமை எனக்கில்லையே என்று வருந்துகிறாள். இதோ அக்காட்சியைக் காட்டும் குறட்பா:

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு (1247)

இதுதான் காமத்துப்பால் காட்டும் மெல்லிய காமம். இதுபோன்றதொரு காட்சியின்பத்தைக் காமசூத்திரத்தில்  காட்டலும் அரிது. வேறெங்கும் காணலும் அரிது.
முடிவுரை:

    எல்லா உயிரனங்களும் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்பாய் இருக்கின்றன. அவற்றுள் மனிதயினம் முந்தி நிற்கின்றது. பிற உயிரினங்கள் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான பாலுறவுச் செயல்பாட்டில், இயற்கை உந்துதலால் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதயினம் மட்டும், இப்பாலுறவுச் செயல்பாட்டை வெறும் இயற்கை உந்துதலாக மட்டும் கொள்ளாமல், இன்ப வேட்கையோடும், அழகியல் நோக்கோடும் ஒரு கலையாகவே கண்டு சுவைத்து வருகின்றது. இதனால் புலவர்களும் அறிஞர்களும் இவ்வியற்கை உந்துதலையும் பல நேரங்களில் இலக்கியக் கண்கொண்டு அணுகி வந்துள்ளனர். அப்பொழுது அவை காமம் பற்றிய இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. அவ்வாறு எழுந்துள்ள இலக்கியங்களுள், உலகின் தொன்மொழிகளான தமிழில் திருவள்ளுவரின் காமத்துப்பாலும், சமஸ்கிருததில் வாத்சாயனரின் காமச்சூத்திரமும் உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகும்.

          இவ்விரு படைப்புகளிலும் திருவள்ளுவரின் காமத்துப்பால் தமிழரின் அகவாழ்வைக் காட்டி, மலரினும் மெல்லிது காமம், சிலரே அதன் செவ்வி தலைப்படுவார் (1289) என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது. அதனால் அறநூட் பகுதியாகிய காமத்துப்பால் ஓர் இலக்கியம்; உலக இலக்கியங்களுள் உயர்ந்த இலக்கியம். தமிழரின் பெருமையை உலகுக்குக் காட்டும் உன்னத இலக்கியம். அதனை அனைவரும் துய்த்து மகிழ்வோமாக!


                                               *********
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்:
1.   தொல்காப்பியம், திருக்குறள், நன்னூல் மற்றும் சங்க இலக்கியங்கள்
2.   கைலாசநாதக் குருக்கள்.கா. 2012. வடமொழி இலக்கிய வரலாறு. சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
3.   பதிப்புக்குழு. 1958. திருக்குறள் உரைக்கொத்துகாமத்துப்பால். திருப்பனந்தாள்: காசிமடம்.
4.   திருநாவுக்கரசு,.. 1979. சான்றோர் கண்ட திருவள்ளுவர். சென்னை: மணியகம்.
5.   திருநாவுக்கரசு,.. 1978. திருக்குறளும் இந்திய அறநூல்களும். சென்னை: மணியகம்.
6.   மருதநாயகம்,.பேரா. 2008. ஒப்பில் வள்ளுவம், சென்னை: சாரதா பதிப்பகம்.
7.   இராசசெல்வம்,நா.புதுவை. 2008. திருக்குறள் உரைவளமும் கல்லாடன் உரைத்திறனும்ஒரு பார்வை. சென்னை: காவியா பதிப்பகம்.
8.  Alain Daniélou. 1994. The Complete Kama Sutra. U.S.A.: Inner Tradition India.
9.   சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி.
10.  மற்றும் இணையதளக் கட்டுரைகள்.

**********


No comments: